புதியவை

ஒக்டோபர் மாதம் நடைபெற்ற கவிதைப்போட்டியில் தொகுதிற்காக தெரிவு செய்யப்பட்ட கவிஞர்களும் கவிதைகளும்
01-பஞ்ச பூதக்கலவை
.
அண்டங்களாய் பேரண்டங்களாய்
புரியாத பிரபஞ்ச பேராற்றல் தந்த
புள்ளியாய் இப்பூமியில்
அணுக்கள் பல சேர்ந்து
பிண்டங்களாய் ..

உயிர்ப் பிண்டங்கள் உள்ளே
ஓரறிவாய் ஈரறிவாய்
ஆறறிவாய் அடைந்த
பரிநாமத்தை
யாரறிவர் .....

பஞ்ச பூதக்கலவையின்
பிணைப்பின் விந்தையை
யார் வகுத்தார்.......

நீரும் நெருப்பும்
காற்றும் ஆகாயமும்
வாழும் நிலமும் இல்லை என்றால்
உயிர் தரித்து நிற்கா
உடலும் சடலமாகிப் போகுமே...!!

தொடக்கத்தின் புள்ளியை
புரியாத மனிதர்கள்
தெய்வங்களாய் தொழுது
காத்த பஞ்ச பூதங்கள்
மாசுற்றுக் கிடக்கிறதே .........

பேரறிவு கொண்ட மனிதரது
ஜீவஒளி குறைந்து
ஆறறிவு மங்கி அநியாயங்கள்
தொடர்கிறதே
யார் தடுப்பார்....?

சுபாரஞ்சன்.
02-வெற்றிப்பாதை
எனக்கேற்பட்ட கஷ்டங்கள் எல்லாமே
என் பூந்தோட்டத்தில் விளைந்த காளான்கள்
என் பல் நிற பூக்களை போன்ற வெற்றிகளை
அனைத்து இராக்கால இருளில்
மலர்ந்த பூக்களாகவே நான் காண்கின்றேன்

பூக்கள் தானாக மலர்வதில்லை
என்பதை உணர்த்தும் ...
கறைகள், வடுக்கள், காயங்களின் ஞாபகங்கள்...
மறைந்து கிடக்கின்றன
என்னில் மலர்ந்த வெற்றி பூக்கள் அனைத்தும்
அடர்ந்த கறுத்த இரவில் விரிந்தவை.
இருள் என் தடைகளாய் இருந்தது ..

என் வெற்றி பரிணாமத்தின் காலகட்டங்களை
நான் கடந்து வந்த முட்பாதை விடாமுயற்சியும்
அதில் நான் சுவாசித்த
என் நம்பிக்கையின் நறுமணமும்
ஞாபகப்படுத்தி கொண்டே இருக்கும்
வெற்றி பாதைகள்

என் மார்பில் எய்யப்பட்ட அம்புகளாய்
இன்னும் இன்னும் தடைகள் தோன்றுகின்றன
வெற்றிப்பாதை முடிவதில்லை
என் நந்தவனத்திலும் பூக்கள் மடிவதில்லை
புதிதாய் பூக்கும் பூக்களை அழிக்க
புது காளான்கள் உருவாகலாம்
அதை எதிர்க்கும் இருளில் நான்
வெண்மையை பூச முயற்சிக்கின்றேன்
என் வெற்றிப்பாதை தொடர்கின்றது..

-தாரிணி03- -உதிரும் மலராக ...

பொன் மஞ்சள் பட்டுடுத்தி
அந்திவானம் சிவக்க
பெண்ணவள் பட்டுடுத்தி
மணவறையில் அமரும்...

விழி கொண்ட அவள் கனவு
வரி இல்லாக் கவிதையாய்
மொழியொன்றை நாடியே
வழி பார்த்து காத்திருக்க...

தறி கெட்ட மனிதர்களால்
விரித்திட்ட சீதனவலையில்
விதி நொந்து கடலாய்
விழி சிந்திய நீருக்குள்...

வருடங்கள் பல கடந்து
வனப்பிழந்த பாவை
உதிர்ந்திட்ட மலராகி
இணைத்தாள் தன்னையும்
முதிர்கன்னியாய்

சட்டம்தான் வந்தாலும்
திட்டம்தான் போட்டாலும்
தீராத சீதன தொல்லை
தராதோ மண வாழ்க்கை...

ஏக்கத்தில் தாபத்தில்
ஏந்திழையாள் 
வாழ்விங்கே ஒரு
சாபத்திற்குள்...

-ரதி மோகன் -டென்மார்க்
04-இலையுதிர்காலமானேன்

இதமான வசந்த காலம்
தன் வனப்பை இழந்து
நொடிந்து போகிறது
தெளிவான அந்த நீல வானமும்
கருமையை வேண்டி பூசிக்கொள்கிறது

குதூகலிப்புடன் பூத்து குலுங்கிய
மலர்களும் தன் சோபையை
பறிகொடுத்து வாடி வதங்குகின்றன
பச்சை வர்ண இலைகள்

மண்ணில் விழுந்து ஒப்பாரி வைக்கிறது
அதெப்படி முடிகிறது ?
வசந்தகாலத்தில் இலையுதிர்காலம்
எப்படி நுழைந்தது ?
நேற்றைய சந்தோஷ வானில்
இன்று மின்னலுடன் கூடிய பேரிடி !

நட்சத்திர விளக்குகள் அத்தனையும்
அணைந்த நிலையில்
வானமும் இருண்ட நிலையில் !

என் சந்தோஷ இறகுகள்
விரிக்க திரணியற்று வலுயிழந்து போன நிலையில்
உணர்வலைகளும் தோற்றுப் போய்விட்டன இன்று
நட்பாக வந்த நல்ல இதயம்
நஞ்சு ஊறிப்போய் தன் சுயநல போர்வையில்
நினைவுகளுக்கு சுகமான ராகம்

மீட்ட நினைத்த வேளையில்
நரம்பருந்த வீணையின் முகாரி ராகம்
உன்னிலை உனக்கு அன்றே தெரிந்திருந்தால்
நட்புக்கரம் எதற்கு ?

வீசிக் கொண்டிருந்த மென்காற்றில்
புயல் வந்து மோதியிருக்காது
நீ தந்த வலியினால் தானே

இன்று என் இலைகளை உதிர்த்து
பட்டமரமாய் காயப்பட்டு கண்ணீருடன்
காட்சியளிக்கிறேன்

ஆனாலும் பரவாயில்லை
உறைந்த பனிக்காலத்தின் பின்
மீண்டும் தளிர்கள் தளிர்க்கலாம்
சோபையிழந்த வாழ்வில் மீண்டும்
இளவேனிற்காலம் வரமாய் வரலாம்
காத்திருப்பில் காலம் கனியட்டும் .

- மீரா குகன்- ஜேர்மனி
05-தேர்வடம் பிடித்திட வைப்போம்.

பெற்றவர்க் கேற்ற பிள்ளையாய்ப் பிறந்து 
பெருமைகள் சேர்த்திட வேண்டும்
கற்றவர் நாளும் காட்டிடும் பாதையில் 
கால்தனைப் பதித்திட வேண்டும்
உற்றவர் கூடி உயர்வுடன் ஆடி
ஒற்றுமை கண்டிட வேண்டும்
மற்றவ ரோடு தேர்வடம் பிடித்து
மகிழ்வொடே இழுத்திட வேண்டும்.

நாயதைப் போல நடுத்தெரு தன்னில்
நடந்திடும் நடத்தைகள் விட்டு,
வாயதைப் பொத்தி வாலினை யாட்டி
மனிதனை வணங்கிடல் போக்கி,
சேயதைக் காக்கும் தெய்வமாம் தாயாய்
செயலுறப் பெண்களை யாக்கித்
தீயதைத் தள்ளி, தெருவெல்லாம் கூடி
தேர்வடம் பிடித்திட வைப்போம்.

கொள்ளையும் களவும் கொண்டவர் வாழ்வு
கொடிதென இடித்தேயு ரைப்போம்
வெள்ளையும் கறுப்பும் வேறெந்த நிறமும்
வேற்றுமை யற்றதாய்க் கொள்வோம்
பள்ளிகள் தோறும் பாட்டுகள் சொல்லி
பாலகர் மனதினில் விதைப்போம்
தெள்ளிய நோக்கில் திக்கெட்டும் சேர்ந்து
தேர்வடம் பிடித்திட வைப்போம்.

தாய்மொழித் தமிழை வணங்கியே யெங்கும்
தரணியில் போற்றுதல் செய்வோம்
ஓய்விலா துழைத்தே ஓய்ந்திடும் காலம் 
உற்றநற் துணையென விருப்போம் 
தூய்மையும், மேலாம் நல்லற வாழ்வும்
தோள்களில் சுமந்தினி நடப்போம்
தேய்விலா வான முழுமதி காணத்
தேர்வடம் பிடித்திட வைப்போம். 

பரமநாதன் -டென்மார்க்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.