புதியவை

வெயில் குற்ற விசாரணை (கவிதை) -எம்.எல்.எம்.அன்ஸார்நேற்று வானம் எடுத்த தீர்மானம்
மரம் செடி கொடிகளை
பேரதிர்ச்சியில் உறைய வைத்தது!

*
கடந்த சில தினங்களில்
வெயில் நிகழ்த்திய ஆகாய தரைத் தாக்குதல்களில்
ஒரு பாவமும் அறியாத அப்பாவிப் பயிர்கள்
வாடிச் செத்தது சர்வதேசத்திற்கே தெரியும்.

*
இந்த அகோரத்தில் இருந்து உயிர் தப்பி
நம்பிக்கை இழந்து நிற்கும் தாவரங்கள்
மழையை அனுப்பி விசாரணை செய்து
ஈரப்பதனை பெற்றுத் கொள்வதற்கு
நாட்கணக்காக வானத்தின் மேற்பார்வையை கோரி நின்றன!

*
அப்போது சூரியன்
காட்டுமிராண்டித்தனமான ஆட்சியை நிகழ்த்தியது.
பயிர் பச்சைகளை வாட்டி வதைத்து கருகவைத்து
மரங்களின் நாமமே வளராமல்
வனப் பூமியை வரட்சியாக்கும்
உற்சாக பொறுப்பை வெயிலிடம் ஒப்படைத்திருந்தது!

*
சூரியன் தன்னை காப்பாற்றி அடுத்த பருவத்திற்கு
இன்னும் வெப்பமிக்க
பதவி உயர்வுகளை பெற்றுத்தரும் என்ற ஆவலில்
வெயில்
மரம் செடிகள் வேர்விட்டிருந்த பூமியில்
தாவர இன அழிப்பை
முழு உஷ்ண வெறியோடு நிகழ்த்தி முடித்தது!

*
இத்தனை நாட்களாக
ஈரம் கிடைக்காத இந்தக் கொடூரங்களுக்கு
இன்றைய புதிய சூரியனை இணங்கச் செய்து,
நடுநிலையான நீரையும் ஈரத்தையும் வானம்
மழையை பூமிக்கு அனுப்பிவைத்து பெற்றுத்தரும்
என்ற பலத்த நம்பிக்கையோடு
உயிர் தப்பிய மரங்கள் இருந்தபோதுதான்
வானம் கருமுகில்களின் மாநாட்டைக் கூட்டி விவாதித்து
அந்த மரங்களுக்கு ஆர்வத்தைக் கொடுத்தது!

*
ஒன்றுக்கும் ஒத்துவரவில்லை புதிய சூரியனும்.
பூமிக்குத் தேவையான ஈரத்தை தண்ணீரை
எனது சூட்டிடம் ஆலோசனையைப் பெற்று
நானே தயாரித்துக் கொடுக்கிறேன்....
வானம் யாரையும் அனுப்பத் தேவையில்லை என்று
தன் அடங்காப் புத்தியைக் காட்டியதை
கரு முகில்களும் ஒருமித்த கருத்தோடு அங்கீகரித்துவிட்டு
கலைந்து சென்றுவிட்டன!

*
விஞ்ஞான அதிசயங்கள் நிகழ்ந்தால் மட்டும்தான்
இந்த கடுப்பு மூஞ்சிச் சூரியன்
வெயிலையும் வெப்பத்தையும் விசாரித்து
தண்டனை கொடுத்துவிட்டு
தவிப்போடு வாடிப்போய் நிற்கின்ற தாவரங்களுக்கு
நாளைக்கு
தண்ணீரை தயாரித்து குடிக்கக் கொடுக்கும்!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.