புதியவை

எழுத்து (வெறும்பா விரவியது)-ரமணி,(நிலைமண்டில ஆசிரியப்பா)

எழுவெனும் வினையடிப் பிறந்த சொல்லாம்
எழுத்து என்பது பெயர்ச்சொல் ஆகும்
எழுதல் என்றால் உருப்பெறத் தோன்றுதல்
எழுதுதல் என்பது தோன்றச் செய்தலே. ... 1

எண்ணம் உருப்பெறத் தோன்றுவ தெழுத்தாம்.
உருவறு ஒலியாய்க் கேட்டதை வரைந்தே
உருவுடன் பார்க்க வைப்ப(து) எழுத்தே. ... 2

எண்ணம் அலைமனம் எழுத்தில் சீர்ப்பட
வண்ணம் விரிந்தே காண்மனம் நிறைக்கும்.
எழுத்தென் றின்றேல் இலக்கியம் இல்லை. ... 3

எழுத்தின் மகிமை குறித்தே பொருள்பல
எழுத்தெனும் சொல்லில் அடங்குவ தாமே
எழுத்தே முதலில் ஒலிவரி வடிவே. ... 4

எழுது வதையும் எழுதி யதையும்
எண்ணம் உருப்பெறச் செய்யும் எழுத்து.
தலைவிதி என்பதும் ஆகும் எழுத்து.
கையில் ஓடும் ரேகை எழுத்தே. ... 5

எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப என்று
வள்ளுவர் பெருமான் சொல்லும் போதில்
இலக்கணம் என்றே பொருள்படும் எழுத்து.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகுமே
என்றே ஔவையும் குறள்வழிக் கூறுவார். ... 6

எழுதும் எழுத்து வரிவடி வென்பதால்
எழுதுதல் என்பது வரைதலைக் குறிக்க
எழுத்தெனும் சொல்லது சித்திரம் சுட்டுமே. ... 7

கண்மை யெழுதும் பெண்ணைக் கவிஞன்
எழுத்தில் எழுதி மனத்தில் வரைவான்.
ஓவியன் வரிகளோ மனதில் எழுதுமே. ... 8

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.