புதியவை

பக்கீர்கள்’ என்னும் இஸ்லாமியப் பாணர்கள்(கட்டுரை )-முனைவர் சா. இன்குலாப்


                


சங்க இலக்கியத்தில் பாணர்கள் என்போர் தங்கள் வாழ்வியல் தேவைகளை முன்வைத்து சிறியாழ்,பேரியாழ் முதலான இசைக் கருவிகளை இசைப் போராக, பரிசில் வாழ்க்கையை வேண்டி பழுத்த மரங்களை நாடிச் செல்லும் பறவைகளாக இருந்துள்ளனர். அத்தகைய பாணர் மரபின் நீட்சியாக இன்று இஸ்லாமியப் பக்கீர்கள் காணப்படுகின்றனர்.
  பக்கீர் என்போர் இரவலர்கள் என்னும் பொருளில் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் உலக வாழ்வியலில் தேவையற்றவர்களாகவும், இறைவனிடம் மட்டும் தேவையுள்ளவர்களாகவும் கருதப்படுகின்றனர். இறைநம்பிக்கையாளர்களாக இருக்கின்ற பக்கீர்களின் வாழ்க்கை தர்காக்களின் பின்னணியில் சுழன்று கொண்டிருப்பதை அறிய முடிகிறது. இவர்கள் தங்களது பொருளாதார தேவைகளுக்காக மக்களை நாடிச்சென்று இனிய குரல்களில், தாகிரா கொட்டுகளின் நேர்த்தியான இசையொழுஹ்கில் அருமையான இறை பக்திப் பாடல்களைப் பாடி தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
  இஸ்லாமியர்கள் அதிகளவில் வாழ்கின்ற ஊர்களில் தங்கள் வாழ்விடங்களை அமைத்துக் கொள்கின்றனர். மேலும் இஸ்லாமிய இறையடியார்களின் அடக்கத் தலமான தர்காக்களை இவர்கள் தங்களது நிகழ்த்து கலைகளை அரங்கேற்றும் களமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். தர்காக்களில் நடைபெறுகின்ற கொடியேற்றம், சந்தனக் கூடு முதலான சடங்குகளின் போது இவர்கள் குழுக்களாக அமர்ந்து பாடல்களைப் பாடியும், கூர்மையான கம்பிகளைப் பயன்படுத்தி உடலில் அலகு குத்தியும், வாள்களால் உடலைக் கீறியும் மக்கள் முன்னால் சாகச கலைஞர்களாக வலம் வருகின்றனர்.
  பக்கீர்கள் குடும்பச் சூழலில் வாழ்ந்த போதிலும் பொருள் தேடிச் செல்கையில் தனியாகவோ அல்லது குழுவாகவோ செல்கின்றனர். பாணர்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கும் வகையில் இவர்களுடைய வாழ்க்கை அமைந்திருப்பதை ஆய்வு மேற்கொண்டதன் வாயிலாக அறிய முடிந்தது.
  இன்றைய நவீன காலத்தில் பக்கீர்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களுக்கிருந்த செல்வாக்கு இன்று குறைந்துள்ளது. ஊடகங்களின் அபரிதமான வளர்ச்சி இந்தக் கதை சொல்லிகளை ஓரங்கட்டி வைத்துள்ளது. நூறுமசலா, போன்ற விடுகதை அமைப்பிலான கதைப் பாடல்களை மக்கள் முன்னால் கொண்டு சென்ற பக்கீர்கள் காலவோட்டத்திற்கு ஏற்றபடி தங்கள் பாடல்களை திரைப்பட மெட்டுக்களில் அமைத்துப் பாடி வருகின்றனர். பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பூட்டுசாவி விற்பவராகவும், கோழி இறைச்சி கடைகளிலும், பாய் விற்பவராகவும் தொழில் புரிந்து வருகின்றனர். இதுமட்டுமின்றி இஸ்லாமிய மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும், தர்கா வழிபாட்டுக் கெதிரான ஏகத்துவ எழுச்சியும், பக்கீர்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதை காண முடிகிறது.
  இஸ்லாமிய மார்க்க அறிவும், விழிப்புணர்வும் இளைஞர்களின் எழுச்சியும் பக்கீர்களின் கலையைப் பெரும் புறக்கணிப்பிற்கு உள்ளாகியுள்ளது. அதன் காரணம் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரான மூடக் கொள்கைகள் இந்தக் கலையின் பின்னணியில் இருப்பதனால்தான் என்பதை அறிய முடிகிறது.
  அருமையான நிகழ்த்து கலையான தாகிரா இசை காலவோட்டத்தில் அழிந்து போகாமல் காக்கப்பட வேண்டும்.
  மேலும், பக்கீர்கள் என்னும் நிகழ்த்து கலைஞர்கள் புறந்தள்ளப்படாமல் அரவணைக்கப்பட வேண்டும் என்பது அவசியமாகிறது.

( கட்டுரையாளர் பக்கீர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் )

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.