புதியவை

ஒரு கிராமத்தையே மண்ணில் புதைத்த கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவிற்கு இன்றுடன் ஓராண்டு பூர்த்தி

ஒரு கிராமத்தையே மண்ணில் புதைத்த கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவிற்கு இன்றுடன் ஓராண்டு பூர்த்தி

கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு இன்றுடன் ஓராண்டு பூர்த்தியாகின்றது.
ஹல்தும்முல்ல பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் கடந்த வருடத்தில் இதேபோன்றதொரு நாளில் காலை 7.15 க்கு மண் சரிவு ஏற்பட்டது.
இயற்கையின் கோரத் தாண்டவத்தினால், இலங்கை திருநாட்டின் ஒரு கிராமமே மண்ணில் புதையுண்டு, பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டமை அனைவரது மனதிலும் ஆழ்ந்த வடுக்களை ஏற்படுத்தியுள்ளது.
விடியும் பொழுதை மகிழ்வுடன் எதிர்கொள்ள காத்திருந்த மக்களுக்கு, மண்சரிவு உடனிருந்தவர்களையும், உறவுகளையும் மூழ்கடித்து, ஆறாத் துயரத்தை தோற்றுவித்திருந்தது.
இந்த மண்சரிவில் சிக்குண்டு 30 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், மீட்பு பணிகளின் போது 12 பேரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன.
இயற்கைதான் தம்மை வஞ்சித்தது என இளைப்பாற இடம் தேடிய கிராம மக்கள் அங்கும் உரிய வசதிகள் இன்றி, ஒளியற்ற எதிர்காலத்தை நோக்கி கனத்த இதயத்துடன் வாழ்நாட்களை கடத்திவருகின்றனர்.
வயது வேறுபாடின்றி, சிறுவர், முதியோர், பெண்கள் என அனைவரும் பாதிக்கப்பட்ட இந்த அனர்த்தம் ஏற்பட்டு 365 நாட்கள் கடந்துள்ள நிலையில், தாம் கவனிப்பாரற்று இருப்பதாக மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பாதுகாப்பான வாழ்விடம் தமக்கு எட்டாக் கனியாக காணப்படுவதாகவும், அதனை வழங்குவதாக உறுதியளித்த அதிகாரிகள் இப்போது மௌனம் காப்பதாகவும் அந்த மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் மலையக மக்கள், மண்சரிவு, மண்மேடு சரிந்துவிழுதல் போன்ற இயற்கை அனர்த்தங்களால் வருடாந்தோறும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.