புதியவை

கலிமா(கவிதை)-பி. எம். கமால் , கடையநல்லூர்
 கலிமா-
சுவனத்தின் நெற்றியில்
ஆண்டவன் எழுதிய
ஆதி வாசகம் !

புள்ளிகளே இல்லாத
இந்தப்
புனித வாசகம்தான்
ஏகத்துவ மாளிகையை
எல்லோரும் திறக்கின்ற
அதிசயச் சாவி !

கலிமா-
பலதெய்வப் பாஷாணத்
தூசியைத் துடைத்தெறியும்
ஒட்டடைக் கோல் !

கலிமாவின் உட்பொருளைக்
கண்டுகொண் டவர்களையே
ஞானிகள் என்று
நானிலம் போற்றும் !

கலிமா-
ஆன்மா  சுவனத்தை
அடைய நடக்கின்ற
ஒற்றையடிப் பாதை !
இது
நாத்திகத்தில் தொடங்கி
ஆத்திகத்தில் முடிகிறது-
ஏனம் கழுவிப்
பானம் ஊற்றிட !

மனிதக் கடிதங்களில்
இந்த முத்திரை
குத்தப்பட வில்லையென்றால்
ஆண்டவனைச் சென்று
அடையவே முடியாது !

இந்த
ஒளி விளக்கை
ஏந்திக் கொண்டுதான்
இருண்டுகிடக்கும்
ஆன்மக் காட்டில்
ஞானிகளின்
ஒப்பற்ற பயணம்
உள்நோக்கித் தொடர்கிறது !

கலிமாவின்
முன்னிரண்டு வார்த்தைகளை
மொழிந்துவிட்டால் மட்டுமே
“தௌஹீது” அங்கே
தரிபட்டு விடாது !
பின்னிரண்டு வார்த்தைகளும்
பேசப்பட்டால்தான்
ஏக இறைக் கொள்கை
ஏற்றுக் கொள்ளப்படும் !

கலிமா-
சுவனத்தில் வேர்விட்டு
இதயங்களில் கிளைபரப்பும்
அதிசய மரம் !

இந்த மரத்தின்
இனிய நிழலில்தான்
ஞானிகளின்  தவத்திற்கு
வரமளிக்கப்படுகிறது !

கலிமா-
ஒரு அதிசய ஆடை !
இதை
உடுத்திக் கொண்டால்தான்
ஆன்மா நிர்வாணமடையும் !

முன்னோக்கி ஓடினால்
பந்தயத்தில் அடையலாம்
வெற்றி !
ஆனால்-
கலிமாவைப்
பற்றி நின்றால்
வெற்றி
கிடைக்கும் நிச்சயம் !
ஈமான் முழுமைபெற்று
சீமானாய் ஆவதற்கு
கலிமா வங்கியில்
ஆன்மப் பணத்தை
அதிகம்
முதலீடு செய்ய வேண்டும் !
அப்போதுதான்
சுவனத்தை இலாபமாய்
சுலபமாய்ப் பெற முடியும் !

அண்ணல் நபிகள்
இந்தக்
கலிமாத் தத்துவத்தின்
புத்தகமாய் வந்தார்கள் !
அந்தப் புத்தகத்தை
உருப்போட்டவர்களே
உருப்பட்டார்கள் !
விமர்சனம் செய்தவர்கள்
விறகாய் ஆனார்கள்
நரக நெருப்புக்கு !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.