புதியவை

முதன்மை ஓவியன்( கவிதை) - ராதா.மரியரத்தினம்காலையில் எழுந்ததும்
கையில் வண்ணத் தூரிகை- அவன்
மையல் கொண்ட பெண்ணவளின்...
மஞ்சள் முகமெண்ணி
மஞ்சள் வண்ணம் தீட்டுகிறான்
பின்னர் நாணம் கொண்டவள்

முகம் சிவப்பதை நினைந்து
ஆங்காங்கே செம்மை பூசுகிறான்
தன் பேடை சிரிப்பொலி கேட்ட மகிழ்வினில்
புள்ளினம் வரைகின்றான்
இவன் பேசும் பேச்சு திறன் கண்டவள்
கை கொட்டும் வண்ணத்தில்
தென்னை இலைகள் வரைகின்றான்

மதியம் உண்ட களைப்பினில்
சற்றே உறங்குகிறார்
அதனால் ஆத்திரம் கொண்ட
மங்கையின் கண்ணீரை
மழையாய் வரைகின்றார்
மழையை பொழிந்திட்ட பூமியில்
பச்சை கம்பளம் விரிக்கின்றார்
கம்பளம் மீதினில் சுந்தரி அவளுடன்

கூடிக் குலவுகிறார்
கூடிக் கழிக்கையிலே
ஆற்றுப் படுத்த மரங்கள் வரைகின்றார்
மகிழ்வுற்று பூக்கள் வரைகின்றார்
களிப்புற கனிகள் படைக்கின்றார்
மாலை ஊடலில் கூடலில்
இன்னமும் வரைகின்றான்
மேனி சிவத்தவள்
நாணிச் சிவக்கையில்
மாலை வரைகின்றான்
போகாத பொழுதை
சீக்கிரம் போக்கிட
சேயோனை விரட்டுகின்றார்

தன் மங்கையின்
கண்ணுக்குள் காணும் நிறங்களில்
இரவை வடிக்கின்றார்
கண்ணுக்குள் தேடிய
வைரமுத்துக்களை
வானத்தில் படைக்கிறார்
மின்னும் அவள் கண்களின் ஒளியை
விண் மீனாய் வரைகின்றார்
ஏகாந்தத்தில் வந்திட்ட காதலில்
அந்த நிலவை கீறுகிறார்

காதலில் உச்சத்தில்
தானெய்தும் இன்பத்தை
இரவினில் படைக்கின்றார்
இந்த வையக உயிர்கள் உய்திட
இறைவன் பூமியை படைக்கின்றார்

மருளும் மானவள் விழியைக் கண்டு
மீனைப் படைக்கின்றார்
அசையும் அவளது கால்கள் கண்டு
மானினம் படைக்கின்றார்
பூவினை ஒத்த மேனியைக் கண்டு
வண்ணத்து பூச்சிகள் படைக்கின்றார்
எல்லாம் படைத்து வியந்த இறைவன்
தன்னையும் படைக்கின்றான்

இது.........
இறைவன் தீட்டிய ஓவியமோ
தூரிகை இல்லா வண்ணங்களோ
மறைகள் ஓதாத காவியமோ
அவன் எமக்களித்திட்ட காவியமோ

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.