புதியவை

கல்லூரி காளையரின் பேட்டை --அங்கோர் கணங்கூட ஓயாது கண்ணனின் சேட்டை .-(கவிதை)- பாவலர் பசுபதி. .
கல்லூரி மாணாக்கன் கண்ணன் -- வகுப்பில்
. . கலவரச் சங்கினை ஊதிடும்  மன்னன் ;
கல்வியின் தெய்வமாம் ஆசான்-- பலருள்
 கலகம் விளைப்பதில் நாரதர் அண்ணன் .  (கல்லூரி)

ஆசிரியர் நேசன்நான் என்பான் -- நண்பர்
. . ஆணையே என்வேதம் என்றும் உரைப்பான்;
பூசல்கல் லூரியில் வந்தால் -- தொட்டிலைப்
. . பாசமுடன் ஆட்டுவான் பிள்ளையைக் கிள்ளி. (கல்லூரி)

கருமால் ராமனின் ஆண்மை -- பாரதக்
. . கண்ணனின் ஆற்றலுடன் ஒப்பிடச் சொல்லிக்
கரும்பலகை மீதெழுதப் போனால் -- நிறைய
. . காகித அம்புகள் என்மீ(து) அடிப்பான் .   (கல்லூரி)

மின்கணினிச் சித்திரம் ஒன்றில் -- தன்
. . மென்முகம் கண்டு வெகுண்டவோர் ராதை
'என்முகத்தில் மீசைஏன்' என்றால் -- 'அது
. . மென்பொருட் குற்ற'மெனச் சொல்லிச் சிரிப்பான் . (கல்லூரி)

உணவகம் போகலாம் என்பான் -- விலையில்
. . உயர்ந்தவை தந்தே உபசாரம் செய்வான்;
பணத்தைத் தருநேரம் வந்தால் -- எங்கள்
. . பார்வையில் காணாமல் ஓடி மறைவான்.  (கல்லூரி)

இட்டமுடன் பாடல்கள் கற்பான் -- பின்பு
. இன்பச் சுவையறிய வேண்டுமெனச் சொல்லி
அட்டபதிப் பாட்டின் பொருளைக் -- கேட்டென்
. . அங்கம் வியர்த்திடச் செய்தழ வைப்பான் .   (கல்லூரி)

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.