புதியவை

விதியே இனி விளையாடாதே (கவிதைகள்) -கிரிகாசன்

விதியே உன் விளையாட்டு வேண்டாமே விட்டேநீ
விருப்போடு மனிதத்தை நேசி
எதிலேயும் மாந்தர் நலம் இருக்கும் படிஅன்போடு
இதயத்தை வென்றே தா ஆசி
கதி தெய்வம் நீயென்போர் கழுத்திலே முடிச்சிட்டு 
கனவென்று வாழ்வாக்க வேண்டாம்
சதியே,செய் மாயைதனை சற்றேநீ விட்டகலாய் 
சகுனிக்குணம் தவிர் காண்பாய் தர்மம்


நதிஓடி நகர்ந்தாலும், நலிந்தே யதுசிறுத்தாலும் 
நான்கு திசை ஓடும் கடல் சேரும்
புதிதாகப் பூப்பூக்கும் போதைமது தான் ஊற்றும்
போம்வண்டை இதழ்கொண்டு காணும்
பதிதானும் சதிகொண்டு பார்க்கும் எழில் வாழ்வென்ன 
பக்திகொண்டு நாம்கூடும் கோவில்
எதிலேயும் அழகுபொலி அன்பு வைத்தபோதும் ஏன்
இம்சைசெய்தே எம்மினத்தை அழித்தாய்


விதியென்று சொல்லிமனம் விடியாது எனச் சோர்ந்து 
விந்தை சிலர் வாழ்வை விட்டு ஏங்க
மதியதனை மயக்கியதும் மாயை கொண்டுமூடுவதும் 
மன்னனுக்கே மனம் மாற்றும் செயலும்
பொதியென்றே நாம் சுமக்கும் புதிரான கூடுதனைப் 
போட்டுடைக்க செய்யும்வித்தை தேர்ந்தே
அதிலுமோ ஆணவத்தைக் அசுரகுணம்மேவ இனும்
அதிகாரம் கொண்டழிப்பதேனோ


கொதிக்குமொரு உள்ளத்தில் கோபத்தைக் கூட்டுவதாய் 
கூடியும் நீ செய்வதெலாம் அறிவேன்
அதிகம் உனை ஆட்கொள்ளூம் ஆவேச எண்ணங்கள்
ஆக்கமின்றித் தேய்பிறை யென்றாக்கி
விதியே நீ பழகி விடு வேண்டாமே அனர்த்தங்கள்
விளையாடிக் கழித்த தினிப் போதும்
அதிதீர ஒளிபெருகி அண்டமெலாம் காண்கிறது
அன்னையெனும் சக்திபோற்றி வாழாய்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.