புதியவை

மண்ணறை (கவிதை) -பி. எம் கமால் .கடையநல்லூர்

      செல்லாத நாணயங்களைச்
சேமிக்கும் உண்டியல் !

மறுமை வீட்டின்
மண் வாசல் !

இந்த வாசல்வழியே
முண்டியடிக்க யாரும்
முனைவதே இல்லை !

அடங்காமல் திமிறி
அலைந்தவர்களும் கூட
அடங்கிக் கிடக்கின்ற
அமைதிப் பெருவெளி !

இன்னொரு உலகத்தில்
இனிய பிறப்பெடுக்க
பூமித்தாய் அடைகின்ற
புனித கர்ப்பம் !

இந்தத் தொட்டில்களில்
மனிதக் குப்பைகள்  ! ;
கொட்டப்பட்ட நாட்கள்
அங்கே நடுகல்லில் !

இந்த
மண்மடியில் மட்டும்தான்
சமத்துவம்
நிலைபெறுகின்றது !

மனிதனின் இறுதித் தேர்வு
இந்தப்
பள்ளியறையில்தான்
நடத்தப் படுகிறது !

உயர்திணை இங்கே
அஃறிணை ஆகிறது !


உலக ஓடுதளத்தில்
ஓடிக்களைத்த விமானம்
இங்கேதான்
தரையிறக்கப்படுகிறது !

வாழ்க்கைச் சிறையில்
அடைபட்ட மனிதன்
விடைபெற்று இந்த
வீட்டுச் சிறையில்
விடுதலை பெறுகிறான் !

சிலருக்கு
இந்த மண் வீடு
வெளிச்சம் உமிழும்
மாளிகை ஆகிறது !
சிலருக்கோ
விலா எலும்புகளை
இறுக்கிப் பிடித்து
நொறுக்கிப் பொடிக்கும்
ஆலை ஆகிறது !

உலகத்தைச் சிறையாக
உண்டாக்கிக் கொண்டவர்களுக்கு
இது
மண்ணறை அல்ல
மணவறை !
ஒவ்வொரு இரவும்
முதலிரவு !

இங்கே நடக்கின்ற
மண்ணறைத் தேர்வில்
அண்ணல் நபியின்
அழகுத் திருநாமம்
சொன்னால் மட்டுமே
சுவனம் கிடைக்கும் !

ஆமாம் !
சர்தார் நபிகளைச்
சாதாரண மனிதரென்று
சாற்றிக் கொண்டிருப்போரே !
அந்த
நபியின் திருப்பெயரை
உங்கள் நாவு
இறந்தபின்னும்
மறந்துவிடக் கூடாதென்று
இறைவன் விதிசெய்தான் !
அதனால்தான்
மண்ணறையில் அந்த
மன்னரை நினைக்க
கேள்வித் தூண்டிலால்
கிளர்ந்தெழச் செய்கின்றான் !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.