புதியவை

இன ஐக்கியத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழும் தாய்லாந்து பயணம் -கலாபூசணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்


தாய்லாந்து ஒரு பௌத்த நாடாக இருந்த போதிலும் அங்குள்ள முஸ்லிம்களும் பௌத்தர்களும் மிகவும் அன்னியோன்யமாகவும் சகோதரத்துடனும் ஐக்கியமாகவும் வாழ்கின்றனர். இன ஐக்கியத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாக தாய்லாந்துத் திகழ்கின்றது என்பதனை ஐந்து நாள் சுற்றுலாவின் பேரில் தாய்லாந்து நாட்டுக்குச் செல்லும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்த போது நேரில் அறிந்து கொண்டேன்.
தாய்லாந்தின் தலைநகரான பெங்கொக்கில் அமைந்துள்ள மலேசிய தூதரகத்தின் ஏற்பாட்டில் மலேசியாவின் 58ஆவது தேசிய தின விழா கடந்த மாதம் 16ஆம் திகதி பெங்கொக்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த தேசிய தின விழாவில் கலந்துக் கொள்ளுமாறு பெங்கொக்கில் அமைந்துள்ள மலேசிய தூதரகத்தின் தாய்லாந்து நாட்டுக்கான மலேசிய தூதுவரான டத்தோ.நசீரா ஹுசைன் அவர்கள் இலங்கை இளம் மாதர் முஸ்லிம் சங்கப் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
அந்த அழைப்பின் பேரில் இளம் மாதர் முஸ்லிம் சங்கத் தலைவி தேசமான்ய மக்கியா முஸம்மில், உப தலைவர்களான நவாசியா பாரூக், ஷலீனா மாஹிர், பொருளாளரான தேசமான்ய பவாஸா தாஹா, சங்க உறுப்பினர்களான கரீமா மூசீன் சுல்பத்அலி, ஹுசைமா பாரூக் மற்றும் ஊடக இணைப்பாளரான நூருல் அயின் நஜ்முல் ஹுசைனாகிய நான் ஆகியோர் வை.எம்.எம்.ஏ பேரவையின் முன்னாள் தேசிய தலைவரான காலித் பாரூக் தலைமையில் மலேசியன் ஏயார் லைன்ஸ் விமானம் மூலம் பெங்கொக் நோக்கி புறப்பட்டோம். முதலில் எமது விமானம் மலேசியாவை சென்றடைந்தது.
விமானத்திலிருந்து தரையிறங்கிய நாம் அந்த விமான நிலையத்திலேயே அமைக்கப்பட்டுள்ள “சூறா’ என்ற தொழுகை அறைக்குச் சென்று தொழுதுவிட்டு அங்கு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தீர்வையற்ற கடைத்தொகுதிகளையும் பார்வையிட்டோம். மீண்டும் மற்றுமொரு விமானத்தில் ஏறி பெங்கொக்கைச் சென்றடைந்தோம்.
சுவர்ணபூமி விமான நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ள பெங்கொக் விமான நிலையம் கலைத்துவம் மிக்கதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே நடப்பட்டுள்ள அழகிய மலர்ச்செடிகளில் பூத்துக்குலுங்கும் பூக்களும் மனதைக் கவர்ந்தன.
அங்கிருந்து பெங்கொக் நகரில் நாம் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலை நோக்கிப் புறப்பட்டோம்.
ஹோட்டல் அருகில் எமது வாகனம் தரித்து நின்றதுமே அந்த ஹோட்டல் ஊழியர்கள் இன்முகத்துடன் எம்மை வரவேற்றதுடன் எமது பயணப்பொதிகளையும் அறைகளுக்கு எடுத்துச் சென்றனர். ஹோட்டல் “குளுகுளு” அறைகளுக்குச் சென்ற நாம் முதலில் வுளு எடுத்து தொழுத பின்னர் ஏனைய எமது கடமைகளைச் செய்ய ஆரம்பித்தோம்.
இலங்கையைப்போலவே தாய்லாந்து நாட்டிலும் வாகன நெரிசல் அதிகம். திரும்பும் திசை எல்லாம் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் வாகன நெரிசலுக்கு குறைவில்லை. எனவே நேர காலத்தோடு நிகழ்வுக்கு வருமாறு மலேசிய தூதுவரிடமிருந்து எமக்கு வழிகாட்டியாகச் சென்ற வை.எம்.எம்.ஏ பேரவையின் முன்னாள் தேசிய தலைவரான காலித் பாரூகிற்கு தொலைபேசி அழைப்பு வந்தது. எனவே நாமும் உடனடியாக தயாராகி மலேசியாவின் 58ஆவது தேசிய தின விழா நடக்கும் மண்டபத்தை சென்றடைந்தோம்.
விழா மண்டபமோ கண்கவர் மலர்களால் மிகவும் அழகாகவே அலங்கரிக்கப்பட்டிருந்தது. மண்டபத்துக்கு அருகிலே மலேசிய தேசிய கொடியை சித்தரிக்கும் வகையில் கேக் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. அதுமட்டமன்றி பல வடிவங்களில் கேக் வகைகள் மற்றும் மலேசிய உணவு வகைகள் எல்லாம் மேசைகளை அலங்கரித்தன. அந்த எல்லா வகையான உணவுப் பண்டங்களிலும் தமது தேசப்பற்றை வலியுறுத்தும் வகையில் குட்டிக்குட்டி தேசிய கொடிகளும் வைக்கப்பட்டிருந்தன. இந்த தேசிய விழாவுக்கு பல வெளிநாட்டுத் தூதுவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
எம்மையும் ஏனைய பிரதிநிதிகளையும் மலேசிய தூதுவரான டத்தோ. நசீரா ஹுசைன் அவர்கள் இன்முகத்துடன் வரவேற்றார். இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தின் சார்பில் எமது சங்கத்தலைவியான மக்கியா முஸம்மில் மலேசிய தூதுவரான டத்தோ. நசீரா ஹுசைன் அவர்களை கௌரவிக்கும் முகமாக அன்னாருக்கு எமது சங்கத்தின் சார்பில் நினைவுச்சின்னம் ஒன்றையும் கையளித்தார்.
அதனையடுத்து மலேசிய தூதுவரான டத்தோ. நசீரா ஹுசைன் அவர்கள் எம்மோடு இணைந்து குழுப்படம் எடுத்துக் கொண்டார். விழாவில் மலேசிய கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. அவை எம் செவிகளுக்கு சுவை சேர்த்தன. அவ்வாறே அங்கு எமக்களிக்கப்பட்ட அறுசுவை உணவும் மிகவும் பிரமாதமாயிருந்தது.
ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, அவுஸ்திரேலியா, துருக்கி, சவுதி அரேபியா, இந்தியா, இலங்கை உட்பட பல நாடுகளின் பிரதிநிதிகளும் இவ்விழாவில் கலந்துக் கொண்டமை சிறப்பம்சமாகும்.
மலேசிய தேசிய தின விழா நிகழ்வில் கலந்துக் கொண்ட மன நிறைவோடு ஹோட்டலை சென்றடைந்தோம். மறுதினம் பெங்கொக் நகரை சுற்றிப்பார்க்கச் சென்றோம். இடையிடையே மழை எமக்குத் தடையாக இருந்தபோதிலும் இயன்ற வரை முயன்று பார்க்க வேண்டிய முக்கிய இடங்களைப் பார்வையிட்டோம். பெங்கொக் நகரின் பிரபல ஷொப்பிங் சென்டர்களுக்கும் சென்றோம். அங்குள்ள பிரபல ஷொப்பிங் சென்டரின் பெயரைக் கூறினால் பரவாயில்லையா? அந்த வர்த்தக நிலையம் ஒன்றின் பெயரே நோ ப்ரப்லம்( NO PROBLEM) தான்.
நகரைச் சுற்றிப்பார்க்கும் போது நான் கண்ட காட்சிகளை இங்கே குறிப்பிட்டேஆக வேண்டும். தாய்லாந்தில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்தே காணப்படுகின்றனர். இவர்கள் கட்டிட நிர்மாண வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். ஹோட்டல் முகாமைத்துவம் வெயிட்டர் மற்றும் நகர சுத்திகரிப்பு வேலைகள் முதல் சிரேஷ்ட உயர் பதவிகள் என்று எல்லாத்துறைகளிலும் அங்கம் வகிக்கின்றமையை காணக்கூடியதாக இருந்தது. தாம் எதற்கும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை அவர்கள் நிரூபித்து வருகின்றனர். எது எப்படி இருப்பினும் அந்நாட்டு முஸ்லிம் பெண்கள் தமது தனித்துவத்தை விட்டுக் கொடுக்காது ஹிஜாப் அணிந்தே கடமையில் ஈடுபட்டிருப்பது என்னை மிகவும் கவர்ந்தது.
அடுத்த நாள் எமக்கு சோதரர் காலித் பாரூக் ஊடாக மற்றுமொரு தொலைபேசி அழைப்பு. அதுவும் மலேசிய தூதரகத்திலிருந்து தான். மலேசிய தூதுவரான டத்தோ. நசீரா ஹுசைன் அவர்கள் தமது தூதரக வாசஸ்தலத்தில் இலங்கை இளம் மாதர் முஸ்லிம் சங்கப் பிரதிநிதிகளுக்கு இராப்போசன விருந்தளித்து கௌரவிக்கவிருப்பதாக அழைப்பு வந்தது. அந்த அழைப்பின் பேரில் இளம் மாதர் முஸ்லிம் சங்கத் தலைவி தேசமான்ய மக்கியா முஸம்மில் தலைமையில் நாம் மீண்டும் தூதரக வாசஸ்தலத்திற்குச் சென்றோம்.
தாம் மலேசிய தூதுவர் என்பதையே மறந்து சாதாரண உறவினர்களைப் போலவே தூதுவர் டத்தோ. நசீரா ஹுசைன் அவர்கள் எம்மை உபசரித்தார். அன்னாரது இராப்போசன விருந்தில் தாய்லாந்து நாட்டின் பெண்கள் தொண்டர் ஸ்தாபன (Tai MuslimWomen Volunteer Group) பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டதுடன் எம்மோடும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இவர்களுடன் கலந்துரையாடலின் போது ஒன்று புரிந்தது. அந்நாட்டு மக்களின் பெரும்பாலானோர் தாய்லாந்து (Tai) மொழியை மட்டுமே பேசக்கூடியவர்களாக உள்ளனர். இதனால் தமது உள்ளக்கிடக்கைகளை பரிமாறிக்கொள்வதில் சங்கடப்படுவதையும் காணக்கூடியதாக இருந்தது. ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே சரளமாக சந்தோஷமாக கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முன்வந்தனர்.
தற்போதைய தாய்லாந்து தூதுவரான டத்தோ நசீரா ஹுசைன் அவர்கள் தாம் இலங்கையில் கடமை புரிந்து காலத்தின் பசுமை நினைவுகளையும் எம்மோடு இரை மீட்டினார். இலங்கையின் பிரியாணிச் சாப்பாடு தனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்றும் கூறி மகிழ்ந்தார்.
அன்னாரின் அன்பில் நாம் சொக்கிப்போனோம். அன்னாரது பெருந்தன்மையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.மலேசிய விருந்துண்ட மகிழ்ச்சியில் தூதுவருக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றோம். தூதுவரும் எவ்வித மமதையுமின்றி வாசல் வரை வந்து எம்மை வழியனுப்பி வைத்ததை எம்மால் என்றுமே மறக்க முடியாது. தூதுவரின் பெருந்தன்னையை மெச்சியவாறு நாம் எமது தங்குமிடம் சென்றடைந்தோம்.
மறுநாள் பெங்கொக் நகரில் இயங்கி வரும் இஸ்லாமிய நிலையத்தில் இலங்கைப் பிரதிநிதிகளுக்கு ஒன்று கூடலும் பகற்போசன விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மலேசிய தூதரகம் வாயிலாக எமக்கு அழைப்பு வந்தது.
அந்த அழைப்பை ஏற்று நாமும் பெங்கொக் சியோன் லியோன் மாவட்டத்தில் இயங்கும் தாய்லாந்து இஸ்லாமிய நிலையத்துக்குச் சென்றோம்.
இந்த இஸ்லாமிய நிலைய முன்றலிலுள்ள கடைதொகுதிகள் மக்கமா நகரிலுள்ள குட்டிக் கடைத் தொகுதிகளை நினைவூட்டியது. அங்கே இந்த முன்றலில் கண்கவர் இந்தோனேசிய ஹிஜாப்கள், ஹபாயாக்கள், விதம் விதமான தொப்பிகள், மிஸ்வாக் குச்சிகள், அத்தர் போத்தல்கள் போன்றவற்றால் நிரம்பி வழிந்தன. நாமும் இவற்றை கொள்வனவு செய்தோம்.
அடுத்து இஸ்லாமிய நிலையத்தின் பிரதிநிதிகள் எம்மை அவர்களது கேட்போர் கூடத்திற்கு அழைத்துச் சென்றனர். இங்கே தாய்லாந்து பிரதிநிதிகள் ஒரு புறமாகவும் இலங்கையர் நாம் மறுபுறமும் அமர்ந்தோம். மேற்படி இஸ்லாமிய நிலையத் தலைவரான பேராசிரியர் நரோங் வொங்சுமிட்ர் (Prof. Narong Vongsmitr) தமது இஸ்லாமிய நிலைய உறுப்பினர்களை எமக்கு அறிமுகஞ்செய்து வைத்தார். இவர் தென்னாபிக்க நைரோ பல்கலைக்கழகத்தில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது அவ்வாறே எமது இளம் மாதர் முஸ்லிம் சங்கத் தலைவி மக்கியா முஸம்மில், எம்மை அவர்களுக்கு அறிமுகஞ்செய்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து தாய்லாந்து இஸ்லாமிய நிலையத் தலைவரான பேராசிரியர் நரோங் வொங்சுமிட்ர் (Prof. Narong Vongsmitr) தமது இஸ்லாமிய நிலையத்தின் செயற்பாடுகளை எமக்கு பின்வருமாறு விளக்கினார்.
“வெளிநாடுகளிலிருந்து தாய்லாந்து நாட்டுக்கு விஜயம் செய்யும் எந்த ஒரு அமைப்பையும் எமது நிலையம் வரவேற்கத் தவறுவதில்லை. இந்த வகையில் இலங்கையின் முஸ்லிம் மாதர் சங்க பிரதிநிதிகளை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தாய்லாந்து இஸ்லாமிய நிலையம் அனைத்து சமுதாயத்துக்கும் சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.
புனித இஸ்லாத்தைப் பற்றி சிறப்பான தெளிவான விளக்கத்தை முஸ்லிம்கள் மத்தியிலும் முஸ்லிம் அல்லாதோர் மத்தியிலும் ஏற்படுத்துவதும் இந்நிலையத்தின் இலட்சியமாகும். அத்தோடு முஸ்லிம்களுக்;கும் முஸ்லிம் அல்லாதோருக்குமிடையில் நல்ல உறவினை ஏற்படுத்துவது மட்டுமன்றி முழு மானிட சமுதாயத்துக்காக பங்களிப்புச் செய்வதும் எமது நிலையத்தின் பரந்த நோக்கமாகும்.
முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதோருக்குமிடையில் நல்ல உறவினை ஏற்படுத்துவதற்காக இஸ்லாம் சம்பந்தமாக உயர்தர கல்விசார் ஆய்வு மற்றும் பிரசுரங்களை வெளியிடுதல், முஸ்லிம்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல் முஸ்லிம் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் பிறமத நிறுவனங்களுக்குமிடையிலும் ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்தல் சர்வதேச முஸ்லிம் சமூகங்களிடையே கலாசார உறவை மேம்படுத்தல், மற்றைய நாடுகளிலுள்ள முஸ்லிம் இயக்கங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தல் போன்றவையாகும்.
அதனடிப்படையிலேயே இன்று உங்களுடனான இந்த சந்திப்பு. அல்ஹம்துலில்லாஹ்!
நாம் எமது இஸ்லாமிய நிலையத்தினூடாக வருடாவருடம் இப்தார் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். வறியவர்களுக்கான ஸக்காத் நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.தாய்லாந்து வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து தாய்லாந்து விஜயம் செய்யும் வெளிநாட்டு முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத அமைப்புகளுடனுடன் ஒன்றுகூடல்களை நடத்தி அந்தந்த நாடுகளின் கருத்துக்களை பரிமாறிக்கொள்கிறோம். அத்தோடு எமது நடவடிக்கைகளை உள்ளடக்கிய மாதாந்த சஞ்சிகை ஒன்றையும் “மோர்லியா” (Morlia) நாம் வெளியிட்டு வருகிறோம்.
இஸ்லாமிய நிலைய வளவில் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் குத்பா பிரசங்கமும் ஜும்ஆ தொழுகையும் இடம்பெற்று வருகின்றது. எமது இந்த தொழுகையில் உள்நாட்டு வெளிநாட்டு முஸ்லிம்கள் ஆண் பெண் இருபாலாரும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பிக்கின்றனர். மேலும் பல்வேறு சமூக சேவைகளிலும் எமது நிலையம் பங்களிப்புச் செய்து வருகின்றது.
மலேசியா, இந்தோனேசியா, ஈரான், துருக்கி, சவூதி அரேபியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடிக்கடி வருகை தருகின்றனர்.
இங்கு பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த போதிலும் எவ்வித இனவாத போக்குமின்றி இங்குள்ள முஸ்லிம்களுடன் மிகவும் இணக்கப்பாடுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு 65வீதமானோர் பௌத்தர்கள். 7வீதமானவர்களே முஸ்லிம்கள். எனினும். தாய்லாந்தில் வருடாந்தம் 13ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக மக்கமா நகர் செல்கின்றனர் தாய்லாந்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் உண்டு. சுமார் 13 ஆயிரம் முஸ்லிம் பாடசாலைகள் உண்டு. இங்கு இஸ்லாம் மிகவும் சிறப்பாக பேணப்படுகின்றது. 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இங்கு கட்டட நிர்மாண வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இராணுவத்திலும் முஸ்லிம் இளைஞர்கள் இணைந்து செயல்படுகின்றனர.;
எமது தாய்லாந்து ஒரு பௌத்த நாடாக இருந்த போதிலும் இங்குள்ள முஸ்லிம்களும் பௌத்தர்களும் எவ்வித இனவாத பேதங்களின்றி மிகவும் அன்யோன்யமாகவும் சகோதரத்துடனும் ஐக்கியமாக வாழ்கின்றனர்” என்ற நற்செய்தி தெரிவித்த மேற்படி இஸ்லாமிய நிலையத் தலைவர் இளம் மாதர் முஸ்லிம் மாதர் சங்கத்தலைவிக்கும் ஏனைய உறுப்பினர்களுக்கும் “மோர்லியா” (Morlia) மாதாந்த சஞ்சிகைகளை கையளித்தார்.
தாய்லாந்து இஸ்லாமிய நிலைய உறுப்பினர்களுடன் தாய்லாந்துக்கான இலங்கை தூதரகத்தில் கடமை புரியும் இலங்கை கிண்ணியாவைச் சேர்ந்த அப்துல் லத்தீபும் எமது இந்த கலந்துரையாடலில் கலந்துக் கொண்டமை எமக்கு பெருமகிழ்ச்சியை தந்தது.
அதனையடுத்து இளம் மாதர் முஸ்லிம் சங்கத் தலைவி தேசமான்ய மக்கியா முஸம்மில் வைஎம்எம்ஏ இயக்கத்தின் செயற்பாடுகளுடன் இணைந்ததாக எமது மாதர் சங்கத்தின் சேவைகளையும் விளக்கினார்.
இருதரப்பினருக்கிடையே பரஸ்பர கலந்துரையாடலுக்குப் பின்னர் தாய்லாந்து இஸ்லாமிய நிலையத் தலைவர், வைஎம்எம்ஏ இயக்கத்தின் செயற்பாடுகளையும் இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தின் செயற்பாடுகளையும் பெரிதும் பாராட்டியதுடன் நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவித்தார். தேனீர் விருந்துபசாரம் இடம் பெற்றது.
அதனையடுத்து அன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஆண்கள் பெண்கள் இருபாலாரும் ஜும்ஆ தொழுகைக்காக தயாரானோம். இஸ்லாமிய நிலையத்தின் மேல்மாடியிலேயே இந்தத் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
நாமும் இந்த ஜும்ஆ தொழுகையில் ஈடுபட்டோம்.தாய்லாந்துக்கான எமது சுற்றுலாவுக்கு முத்தாய்ப்பு வைத்தாற் போல் எமக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புனித ஹஜ் கடமையின் போது மக்கா நகரைப் போல பல நாடுகளைச் சேர்ந்த பெண்களுடன் இணைந்து பெங்கொக் நகரில் இந்த ஜும்ஆத் தொழுகையில் கலந்துக் கொள்ள கிடைத்தமை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். குத்பா பிரசங்கம் தாய்லாந்து மொழியிலேயே இடம்பெற்றது.
தொழுகை முடிந்து பின்னரும் இஸ்லாமிய நிலைய திடலில் பெரும் வரவேற்பளித்த இந்த இஸ்லாமிய நிலைய உறுப்பினர்கள் தமது ஒலி பெருக்கி மூலமும் எம்மை அந்நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததுடன் பெரும் வரவேற்பளித்தனர்.
அதனையடுத்து இஸ்லாமிய நிலையத் தலைவர் தமது இஸ்லாமிய புத்தகசாலைக்கு எம்மை அழைத்துச் சென்றார் அதனை பார்வையிட்ட பின்னர் எமக்காக பகற்போசனம் ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலுக்கு நாம் அழைத்துச் செல்லப் பட்டோம். அங்கே தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய உணவு வகைகள் எமக்கு பரிமாறப்பட்டன. விருந்துண்ட பின்னர் சிறந்த ரக ரம்புட்டான் பகிர்ந்தளிக்கப்பட்டது. தாய்லாந்தில் பெரும் எண்ணிக்கையான நிலப்பரப்பில் ரம்புட்டான் பயிரிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இஸ்லாமிய நிலையத்தினரின் விருந்துக்கும் அழைப்புக்கும் நன்றி தெரிவித்து அங்கிருந்தும் பிரிய மனமின்றி விடை பெற்றோம். இத்தோடு எமது ஐந்து நாள் பெங்கொக் சுற்றுலாவை முடித்துக் கொண்டு இனிய பல நினைவுகளுடன் பெங்கொக் விமான நிலையத்திலிருந்து மீண்டும் மலேசிய எயார்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தோம்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.