புதியவை

முஅத்தின்கள் (கவிதை) பி. எம். கமால் , கடையநல்லூர்

நாங்கள்
பேச்சுரிமை  இல்லாத
பிலாலின்  வாரிசுகள் !

பிலாலின் வாரிசுகள்
என்பதாலோ நாங்கள்  
அடிமைகளாகவே
ஆக்கப்பட்டுவிட்டோம் !

ஊருக்கு இளைத்த                          
உழைப்பாளி இனம்நாங்கள் !

பாருக்குள் வீசுகின்ற
பசுந்தென்ற லைநாங்கள்
பாங்கின் ஒலியால்
பரிசுத்தப் படுத்துகின்றோம் !

நாங்கள்-
எல்லாப் பள்ளிகளிலும்
எடுப்பார் கைப் பிள்ளைகள் !

கந்தல் ஆடையைக்
 கசக்கி உடுத்தினாலும்
நாங்கள்
ஆகாய நிர்வாணத்திற்கு
ஆடை நெய்கிறோம் -
ஆமாம் !
பாங்கொலிப்  பட்டாடையை
குரல்வளைத் தறியில்
நெய்கின்ற நெசவாளி நாங்கள் !

வரலாற்றில் எங்களுக்கு
 வரவேற்பு இருந்தாலும்
வாழ்க்கை வசதிகளில்
வறுமைபரி  சானது !

"வறுமையே எனக்குப்
பெருமை"என் றோதிய
வள்ளல் நபிகளின்
வாரிசுகள் நாங்கள்தான் !

தலைவர் செயலாளர்
தாளாளர் என்று
ஏராளமானோர்
 இருந்தாலும் பள்ளியின்
வரவேற்பு எங்கள்கை
வசத்தில்தான்  உள்ளது !

நாங்கள்தான் உங்களை
நாயனைத்  தொழுவதற்கு
அழைத்து வரவேற்கும்
அலுவலைச் செய்கின்றோம் !


கழிவறையை நாங்கள்
கழுவினாலும் அதனை
இழிதொழிலாக எண்ணுவதில்லை !

எங்கள் கீழ்நிலையை
எடுத்துச் சொல்லிவிட்டால்
சித்திரமும் கூடச்
சிந்தும் கண்ணீரை !

பள்ளிவாசலில் எங்களுக்கு
முத்திரை இடப்பட்ட
முதல் வரிசை; என்றாலும்
பள்ளி நிர்வாகியைப்
பார்க்க  நாங்கள் போனால்
பத்துப்பேர் வாசல்
படியில் நின்றாலும்
கடைசி அழைப்புத்தான்
கைகொடுக்கும் எங்களுக்கு !


போதாது சம்பளம்
என்றாலும் எங்களின்
போதாத காலத்தை
பொறுப்போடு எண்ணி
கஷ்டத்துடன்தான்
காலம் கழிக்கின்றோம் !

“முஅத்தின்கள்” எங்களை
"மோதினார்" என்று
இறந்தகாலச் சொல்லில்
ஏனழைக்  கின்றீர்கள் ?

சில நேரம்-
குணக்கேடர் பணக்காரர்
குடிகாரர் சிலரோடு
மோதுவ  தால்தான்
"மோதினார்" என்றீர்களோ ?

நாங்கள்
அல்லாஹ்வின் வீட்டு
அழைப்பொலிக் காரர்கள் !
இருந்தாலும் சிலநேரம்
பள்ளி    நிர்வாகப்
பணக்காரப் புள்ளிகளின்
வீட்டு    வேலைக்
காரர்களும் நாங்கள்தான்  !

காற்றைப்   பாங்கொலியால்
கழுவித் துடைக்கும் நாங்கள்
பள்ளி   வாசலையும்
பக்குவமாய்த் துடைக்கின்றோம் !

வட்டி மூஸாக்கள்
வாரி வழங்காத
கருமிக் கிருமிகள்
கள்ளுண்ணும் பேதைகள்
ஒருநாளும் தொழுகைக்கு
ஓடிவா ராதவர்கள்
இப்படிச் சிலபேர்
இருந்தால் நிர்வாகம்
எப்படிச்  சீராகும் ?
எங்கள் நிலை உயரும் ?

நேர்மை தவறாத
நிறைவான மூ மீன்கள்
பள்ளி    நிர்வாகப்
புள்ளிகளாய் ஆகிவிட்டால்
எங்களின் நிலைமாறும் !
இறைவா அருள் புரிவாய் !


இறைவா ! எங்களை
ஜக்காத்து ஸதக்கா
வாங்கும் நிலைமாற்றி
கொடுக்கும் நிலைக்கு
கொண்டுவந்து நிறுத்து !
அப்போதும் எங்கள்பணி
ஆண்டவா !உன்வீட்டு
முற்றத்தில் தொடருதற்கு
முழுதும் உதவிசெய் !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.