புதியவை

மருத்துவ துறையில் சாதனை படைத்த மூவருக்கு நோபல் பரிசு

மருத்துவ துறையில் சாதனை படைத்த மூவருக்கு நோபல் பரிசு

மருத்துவத்துறையில் சாதனை படைத்ததற்காக, 2015 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு, அயர்லாந்து, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது, சுவீடன் நாட்டில் உள்ள கரோலின்ஸ்கா ஆய்வு மையம், ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நிபுணர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசினை வழங்குகிறது.
அந்த நாட்டை சேர்ந்த விஞ்ஞானி அல்பிரட் நோபல் பெயரில் இந்த பரிசு வழங்கப்படுகிறது, இதில் 2015 ஆம் ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
அயர்லாந்து நாட்டை சேர்ந்த டொக்டர் வில்லியம் காம்பெல், ஜப்பானை சேர்ந்த டொக்டர் சடோஷி ஒமுரா மற்றும் சீனாவை சேர்ந்த டொக்டர் யூயூ டு ஆகிய 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
வில்லியம் காம்பெல் மற்றும் சடோஷி ஒமுரா ஆகியோர் உருண்டைப்புழு (ரவுண்ட்வாம்) ஒட்டுண்ணிகளை அழிக்கும் ‘அவர்மெக்டின்’ என்ற மருந்தை கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
உருண்டைப்புழு ஒட்டுண்ணிகள் தாக்குதலால், உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், குறிப்பாக ஆப்பிரிக்காவில் சகாரா பகுதி, தெற்கு ஆசியா, அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த ஒட்டுண்ணிகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கண் பார்வையை இழத்தல், யானைக்கால் நோய் (பிலாரியாசிஸ்) பரவுகிறது. இந்த நோயாளிகளை டொக்டர் வில்லியம் காம்பெல், சடோஷி ஒமுரா ஆகியோர் சேர்ந்து கண்டுபிடித்த ‘அவர்மெக்டின்’ மருந்து குணமடையச் செய்கிறது.
உலகம் முழுவதிலும் பல கோடி மக்கள் மலேரியா காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒற்றை செல் ஒட்டுண்ணிகளால் உருவாகும் மலேரியா காய்ச்சல் பாதிப்பு அதிகமாகும்போது மூளையை தாக்கி மரணத்தை ஏற்படுத்துகிறது.
சீனாவை சேர்ந்த 84 வயது டொக்டர் யூயூ டு, மலேரியா காய்ச்சலை குணப்படுத்துவதற்கான ‘ஆர்ட்டிமிசினின்’ என்ற சீன மூலிகை மருந்தை கண்டுபிடித்துள்ளார்.
மலேரியா நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை இந்த மருந்து குறிப்பிடத்தகுந்த அளவில் குறைக்கிறது.
நோபல் பரிசுத் தொகையான 6 கோடியே 17 இலட்சத்தில், 50 சதவீதம் வில்லியம் காம்பெல், சடோஷி ஒமுரா ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. மீதம் 50 சதவீத தொகை யூயூ டு பெற்றுக் கொள்கிறார்.
மேலும் பவுதீக துறைக்கான நோபல் பரிசு இன்றும், இரசாயன துறைக்கான பரிசு நாளையும் (புதன்கிழமை), இலக்கியத்துக்கான நோபல் பரிசு வியாழக்கிழமை அன்றும் அறிவிக்கப்படவுள்ளது.
அமைதி மற்றும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஆஸ்லோ நகரில் வருகிற திங்கட்கிழமை அன்று அறிவிக்கப்படவுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.