புதியவை

ஊடகம்(கவிதை) -பி. எம். கமால், கடையநல்லூர்

ஒலிமார்கள்-
நபிகள் நாயகத்தின்
நடமாடும் ஊடகங்கள் !
நமது
கண்மணி நாயகமோ
அல்லாஹ்வின் ஒளி பரப்பும்
அழகான ஊடகம் !
மூத்தகுடிப் பிறப்புக்கும்
முன்மாதிரி ஊடகம் !
மூச்சுக் காற்றையும்
சலவை செய்ய வந்த
மூலவ னிறைவனின்
பேச்சான ஊடகம் !
பெருமானாரின்
பிறப்புக்கு முன்பு
வெளிச்சத்தை விட்டில்கள்
கடித்துத் தின்றன !
நெருப்பினைக் கரையான்
உண்டு கொழுத்தன !
பாலைவனமே
பழுதாகிக் கிடந்தது !
உத்தம நபிகள்என்னும்
ஊடகம் வந்தபின்
சூரியனுக்கு
சூடுமட்டுமல்ல
சொரணையும் வந்தது !
நிலவின் அகங்காரம்
நின்றுபோனது !
பூமியும் கூட
புள காங்கித்தது !
வெளிச்சம் தன்
இருட்டு முக்காட்டினை
உதறிவிட்டு
அகிலங்களுக்கு ஆதரவானது !
மானாட மயிலாட
மனிதர்களின் மனங்களெல்லாம்
மகிழ்ச்சியினில் கூத்தாட
ஊடகம் ஒன்று தன்
ஒளிபரப்பை துவங்கியது -
ஆயிரத்து நானூறு
ஆண்டுகளுக்கு முன்னால் !
அது ஒரு
பத்திய விரதத்தின்
சத்திய மாதம் !
குகைக்குள்ளிருந்த
ஒளித்திரையில்
"ஓதுவீராக" - என்ற
ஒலிக்குறிப்போடு
ஒளிபரப்பு ஒன்று
உருவானது அன்று !
பாவ நாடக
மேடை திரைவிழ
தூவ கருணையின்
மழையின் துளிவிழ
ஊடகமாய் நபி
உதித்து வந்தனர் !
அந்த
ஊடகம் உலகில்
உருவான பின்னர்தான்
திருமறை எனும் தொடர்
நமக்குத்
திருத்தமாய்க் கிடைத்தது !
அந்தத் தொடரில்
ஆபாசங்கள் இல்லை.
ஆசா பாசங்களின்
அளவீடு இருந்தது !
சித்தி கதைகளின்
சீரியல் இல்லை.
சித்தி அடைகின்ற
சீரிய வழிகள் இருந்தன !.
அத்திப்பூக்கள் அங்கே இல்லை-
மனிதனை
செத்திச் செதுக்கும்
நெறிகள் இருந்தன !
அந்தத் தொடரில்
வயலும் வாழ்வும் அல்ல-
செயலும் வாழ்வும்
சிறக்கும் வழிகள் இருந்தன !
குற்றம் கொலைகள்
கொள்ளை நிலைகளை
சத்தம் போட்டு
சாற்றும் ஊடகமாய்
பெருமானார் அன்று
பிறப்பெடுத்து வரவில்லை !
குடியுடன் கொலையைக்
கோர்த்து வாழ்ந்த
அடிமடையர்களை
அல்லாஹ்வின் திசைக்கு
திருப்பியும் திருத்தியும்
திருமறை வழியில்
திருந்தியும் வாழும்
திலகங்களாய் மாற்றினார்கள் !
ஊடகத்தின் நோக்கம்
உண்மை ஆனது அப்போது !
அந்த ஊடகம்
தனது ஒளிபரப்பை
ஹிராக் குகையின்
இருட்டில் துவங்கியது !
அதனால் நாமின்று
வெளிச்சத்தில் வாழுகிறோம் !
அந்த ஊடகத்தின்
கம்பிவட முகவர்களே
காமிலான ஒலிமார்கள் !
உத்தம நபிகள்என்னும்
ஊடகம் இல்லையென்றால்
இருட்டுக்குள்தான் நாம்
இன்னும் இருந்திருப்போம் !
உயர்குண நபியின்
ஊடகத் திரையில்
6666 தொடர்கள்
ஒளிபரப்பப் பட்டதினால்
நமது உள்ளங்கள் மட்டுமல்ல
இல்லங்களும் கூட
இருள் அற்றுப் போயின !
இறைவா!
மூலவனின் ஒளிக்கு
முகவரி தந்த
முத்து நபி நாயகத்தின்
சொத்துக்கள் ஒலிமார்கள்!
அந்த
ஒலிமார்கள் என்னும்
ஊடகத் தொடரால்
எங்கள் கவனங்கள்
உன்பக்கமே திரும்ப
உதவி செய்வாய் !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.