புதியவை

அன்றும் இன்றும் கவிதை - நடராஜன் கல்பட்டு
அந்த நாள் வீடு அது
அன்பும் பாசமும் 
அளவின்றிப் பொழிந்த வீடு அது
அடைந்திட முடியாது 
அளவிலாப் பணம் தந்தாலும்
அது போல் வீடொன் றின்று

பல் போன தாத்தா
கல் திண்ணை மீதமர்ந்தே
கற்றுத் தந்திடுவார்
அண்ணனுக்குக் கணித வாய்ப்பாடு

கண் பார்வை குறைந்த அப்பாத்தா
தன் பேரக் குழந்தைகளுக்கென
அடுப்படியில் முனைந்திருப்பாள்
இன் சுவை பணியாரம் செய்வதிலே

தோட்டத்து வழியே அம்மா வருவாள்
வாய்க்காலில் குளித்து
ஈரம் சொட்டிடும் புடவை சுற்றித்
தோளில் தொங்கிட அன்றவள் தோய்த்த துணிகள்

அம்மா கண்ணில் பட்டிடக்
கொய்யா மரத்தின் மீது
அசையாது ஒட்டிக் கொண்டிருக்கும் அக்கா
வசை மாரி பொழிவாள் அம்மா
அவள் மீது
ஆண் பிள்ளையாடீ நீ
கூசாது ஏறுகிறாய் மரம்
கீழ் விழுந்து காலொடிந்தால்
யார் வாருவான் கட்டிட உன்னையென்று

பாவம் அக்கா
ஏறியதோ அவள் மரம்
பறித்திடப் பழம் எனக்காக

அண்ணனை வீட்டுள்ளே காண்பதறிது
எப்போதும் அவன் சகாக்களுடன்
பம்பரம் கோலி கிட்டிப் புல்
பச்சைக் குதிரை மரக் குரங்கென
ஆட்டங்கள் பலவற்றிலும்

அத்தை வருவாள்
என்னை வாரியெடுத்தே
முத்த மழை பொழிவாள்
சித்தப்பாவும் அப்படியே

பெரியப்பா பேச மாட்டார் அதிகம்
பெரியம்மா மறைந்த துக்கமோ
அறியேன் நிச்சயமாய்
சிறியவன் நானதை

மாமாவுக்கும் மாமிக்கும் இல்லை குழந்தை
ஆனால் என்ன இருக்கிறேனே
நான் அவர்களுக்கும் குழந்தையாய்
தூக்கி யென்னைக் கொஞ்சிடுவார் எப்போது மவர்

அப்பாவோ எப்போதும்
ஏதாவதொரு வேலையில்
முனைந்திருப்பார் முழு மூச்சில்
இருந்தால் என்ன
இருக்கிறார்களே மற்றவர்கள்
இன்பமாய் வைத்திட எங்களை

விடியுமுன் வீடு விட்டுச் செல்கிறேன்
பணி புரியப்
பல காத தூரம் கடந்து
பன்னாட்டு நிறுவனம் ஒன்றில்

என் மனைவி ஏற்றி விட்டே
என் பிள்ளையைப் பள்ளிப் பேருந்தில்
ஓடிடுறாள் தன் அலுவலகப் பேருந்தினைப் பிடித்திட
மாலையில் வீடு திரும்பினால்
மலையாய் இருக்கிறது
செய்திட வீட்டுப் பாடம் மகனுக்கு

அண்ணனில்லை தம்பியில்லை
அக்காள் இல்லை தங்கை இல்லை
தன்னந்த் தனையாய்த் தவித்திடுறான்
எந்தன் மகன்

வீடு சுற்றி ஓடி ஆடி
நான் விளையாடிய நாட்களெங்கே
வீட்டுள்ளே ஒடுங்கி
விளையாட யாருமின்றி
என் மகன் அடங்கும் நாட்களெங்கே

சுற்றமெல்லம் இருந்தது
சுற்றி யென்னை அன்று
தனிக் கட்டையாய்த் தவிக்கிறான்
என் செல்ல மகன் இன்று

அந்த நாள் வீடது
சின்னஞ் சிறிய வீடது ஆயினும்
இன்பமான வீடது
என்னதான் பெரிதாய்க் கப்பல் போல்
இருந்தாலும் இன்றெங்கள் வீடு
இல்லையே அன்று நான் கண்ட இன்ப மின்று

அன்று வீடு சிறியது தான்
இருந்தும் கண்ட இன்பமோ பெரிது
இல்லையே என் மகனுக்கு இன்று
சின்ன வயதிலே நான் கண்ட சுகங்கள்
          

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.