புதியவை

தூங்கல் ஓசை(வெறும்பா விரவியது)--ரமணி,
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வஞ்சித் தளையின் தூங்கல் ஓசையில்
துஞ்சும் மயக்கம் தூக்கலாய் வருமே
துங்கல் என்பது பாட்டின் உரிப்பொருள்
தூங்குதல் பற்றி அமைவ தல்ல!

அகவலில் லாமல் செப்பலில் லாமல்
துள்ளலில் லாமல் ஓசையில் மயக்கமோ
மந்தமோ ஓய்வோ ஏக்கமோ வந்திடத்
தூங்கல் ஓசை தளைகளில் கேட்கும்!

தூங்கலில் வருமெனத் தளைகள் இரண்டு.
கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சியில்,
கனிமுன் நேர்வரும் ஒன்றா வஞ்சியில்.
தூங்கலில் ஒலிக்கும் வஞ்சியின் அடிகளே.

(கலித்தாழிசை)
வஞ்சித்தளை ஒன்றாமலும் பொருந்தியும்வரும்
தூங்கல்‍ஒலி ஓரடியினில் முடிவுறுவது வஞ்சிப்பா.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
இருசீர் அல்லது முச்சீர் அடிகளாய்
வஞ்சி யடிகள் பொதுவில் அமையுமே
தூங்க லோசைப் பாடல் கீழே.

சான்று
கி.வா.ஜ.,’கவி பாடலாம்’ பக்.201
(குறளடி வஞ்சிப்பா)

மாகத்தினர் மாண்புவியினர் 
யோகத்தினர் உரைமறையினர் 
ஞானத்தினர் நய‌ஆகமப் 
பேரறிவினர் பெருநூலினர் 
காணத்தகு பல்கணத்தினர் 

(இணைக்குறள் ஆசிரியப்பா)
மரபுசார் உரைகளில் கூறுவர் இவ்விதம்:
செய்யுள் உரைநடை இரண்டு வடிவிலும்
அகவல் செப்பல் இரண்டும் வருமே
துள்ளல் தூங்கல் இரண்டும் 
செய்யுளில் மட்டுமே வருவன.
அகவல் செப்பல் அடியிடைத் தளையும் ... [தளையும் = தளையால் பிணிக்கப்படும்]
துள்ளல் தூங்கல் அடிகளில் மட்டுமே.


3.10. தூங்கல் முயற்சி
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நாமும் தூங்கல் புனைந்திடு வோமா?
தூங்கல் ஓசையின் தேவைகள் என்ன?
கனிமுன் நிரையோ நேரோ வருகிற
இருசீர் அல்லது முச்சீர் அடிகளில்
வஞ்சித் தளைகள் பயிலுதல் வேண்டும்
மூவசை நிரையில் முடிவது கனிச்சீர்.

முயற்சி 1. (எழுது தமிழில்)
(சிந்தடி வஞ்சிப்பாவின் முதலடிகள்)

மடமாதவள் நடமாடிட மனம்யாவையும்
தடுமாறிடக் காற்றாயவள் சதிராடிட
உடுநிரலதன் பட்டொளியென உளவானிலே.

[உடுநிரல் = விண்மீன் வரிசை]

மட/மா/தவள் நட/மா/டிட மனம்/யா/வையும்
தடு/மா/றிடக் காற்/றா/யவள் சதி/ரா/டிட
உடு/நிர/லதன் பட்/டொளி/யென உள/வா/னிலே.

நிரைநேர்நிரை நிரைநேர்நிரை நிரைநேர்நிரை 
நிரைநேர்நிரை நேர்நேர்நிரை நிரைநேர்நிரை 
நிரைநேர்நிரை நேர்நிரைநிரை நிரைநேர்நிரை 

மேல்வந்துள அலகிடலில் ஒன்றியவஞ் சித்தளையுடன்
ஒன்றாவஞ் சித்தளயதும் ஒருங்கேவரும் இடம்யாவையும்
அறிந்தேயதன் விளைவேயெனத் தூங்கலோசை வரக்காணுக.

முயற்சி 2. (இன்றைய வழக்கில்)
(சிந்தடி வஞ்சிப்பாவின் முதலடிகள்)

ஆரியபவன் நெய்ரோஸ்டினில் பொய்மணக்குமே!
காரியமென பிரியாணியின் காய்கறிகளில்
தேறுவதென விரலளைந்துநாம் தேடலாகுமே!

(நிலைமண்டில ஆசிரியப்பா)
மேலுள அடிகளின் சீர்வகை தளைவகை
அலகிட் டறிந்தே அடிகளின் சீரிடை
வஞ்சித் தளைகள் பயில்வது கண்டே
துஞ்சும் ஓசை விளைவதைக் காண்க.

முயற்சி 3.  (எழுது தமிழில்)
(குறளடி வஞ்சிப்பாவின் முதலடிகள்)

தாலாட்டுகள் பலபாடியும் 
வேலாய்விழி விளையாடவே
காலாட்டுமே தூளியிலே!

தா/லாட்/டுகள் பல/பா/டியும் 
வே/லாய்/விழி விளை/யா/டவே
கா/லாட்/டுமே தூ/ளியி/லே!

நேர்நேர்நிரை நிரைநேர்நிரை 
நேர்நேர்நிரை நிரைநேர்நிரை 
நேர்நேர்நிரை நேர்நிரைநேர்

(நேரிசை ஆசிரியப்பா)
மூவசைச் சீர்கள் நிரையில் முடிந்தே
நேரோ நிரையோ தொடரவே
வஞ்சித் தளைகள் பயிவது காண்க.

முயற்சி 4. (இன்றைய வழக்கில்) 
(குறளடி வஞ்சிப்பாவின் முதலடிகள்)

பாவுபஜ்ஜியின் காரத்தினால்
தாவுதீர்ந்திடும் நாவினிலே
காவலெனவே பெப்சிகோலா!

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அலகிட் டறிந்தே குறளடி மூன்றில்
உலவும் சீரும் உள்ளுறும் தளையும் 
நலமாய் அறிந்தே தூங்கல் காண்க.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.