புதியவை

வாழ்வு (கவிதை) -லூசியா கூஞ்ஜே

எதிர்பார்ப்பு இல்லையேல் எதனிலும்
ஏமாற்றம் இல்லை உணர்ந்தாலும்
ஏங்கிடும் மனது தேடியே அலையும்
எதிர்பார்த்தே காத்திருக்கும் வாழ்வு.


போதுமென்ற மனநிலை இல்லாது
போட்டி பொறாமை அனைத்தும் சேர
போர்வையாக சுயநலம் இணைந்து
போதாமையால் பேதலிக்கும் வாழ்வு.

அலைபோல ஆசைகளின் ஓசைகள்
அலைக்கழிக்கும் எண்ண ஓட்டங்கள்
அமைதி தந்திடும் அன்பு ஒன்றே
அவனியில் நலமான வாழ்வு.


கடந்தவற்றை எண்ணிக் கலங்காதே
கடந்திடும் அவை காலத்தின் நகர்வில்
கதிரவன் சுடர்போல பயன்படு
கலக்கமில்லாது நகரும் வாழ்வு.


உடலைவிட்டு உயிர் பிரிந்தால்
உயர்திணை அஃறிணையாகிடும்
உணர்ந்திடு உண்மை நிலைதனையே
உலகில் இதுவே உனதான வாழ்வு.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.