புதியவை

கவித்திருமா( கவிதை )Michael Collin
இன்றைய காலைதான்
திருமாவுடன் விடிந்த
கடைசிக் காலை.
இனிவரும் பொழுதெல்லாம்
உன் கவிகளின்றியே
கண்ணீருடன் புலரும்.
இரவுகளும்கூட
உன் நாவொளுகும்
வரிகளின்றியே
வெறுமையாய்க் கருக்கூட்டும்.
போவதொன்றும்
பெருங்கவலை
இல்லை என்றாய்.
நோவின்றிப் போவதற்கே
நொடிப்பொழுதும் நினைத்திருந்தாய்.
எம்வாழ்வியலைச் சொல்லுதற்கு
வளங்களெல்லாம் கோர்த்தெடுத்து
இன்னனும் இன்னமும்
எழுதவேண்டி உண்டென்றாய்.
காடுகள், மலைகள்,
கரிச்சான் குஞ்சுகள்
வயல்கள், ஏரிகள்
தோணாக்கள், துறையடிகள்
துளிர்விடும் மரக்கிளைகள்
பனைவடலி – அதிலூரும் சிறுமுசுறுக் கூட்டம்
எல்லாமுமே
உன் பிரிவறியாத் தனத்துடனே
காத்துக் கிடக்கும்
உன் கவிகளுக்குள்
முகம் புதைக்க.
உன் மண்வார்த்த காட்சிகள்
மனத்திரைக் கோபங்கள்
சினம்கொண்ட கைவிரல்கள்
சீறும் மூச்சுகள்
எல்லாமுமாய்க்
கவியூறி, ஆறாகி
கரைபுரண்டே ஓடியது,
சென்றவாரம்,
உன்முகம் காண வந்தபோது
என்கைகளினை இழுத்தணைத்து
வாய்திறக்க மாட்டாமல்
மகுடம் கிடைத்த நன்றியினை
உரசலிலே சொன்னாயே.
உலகளவில் மகுடத்தை
உயர்த்திப் பார்ப்பதற்கு
சிறப்பிதழ் ஒன்றை
சீராக்கச் சொல்லி - அதை
பார்க்காமல் சென்றுவிட்டாய்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.