புதியவை

குயிலின் பாட்டுக்குரல்(கவிதை ) (மீ.விசுவநாதன்)

ருஊரில் அடர்ந்ததோர் ஒளிமிக்கக் காடதில்
இருகுயில்கள் கொண்டாடி இன்பத்துப் பாட்டெல்லாம்

எப்போதும் இசைத்தபடி எவர்முகமும் பாராமல்
துப்புரவாய் கானத்தில் தோய்ந்து  கிடந்திருக்கும் !

தூரத்து உறவொன்று தொலைவில் வானத்தின்
ஓரத்தில் பறந்துவர ஒர்குயில்தான் பார்த்து

கானத்தை நிறுத்திக் கண்கள் நிலைகுத்த
சீனத்துக் காட்டில் சிறகடிக்கும் உறவின்று

நேபாள நம்காட்டைத் தேடித்தான் வருகிறதோ ?
பூபாள கானம்நாம் பொழுதிசைக்க முடியாதோ?

நம்மினம்தான் வருகிறது நமைத்தேடி என்றாலும்
தம்மிடத்து பழக்கத்தைத் தந்து நம்காட்டுக்

கலாசார ஒற்றுமைக்குக் கட்டாயம் கேடுவர
விலாநோகப் பறந்திங்கு வீடமைக்க வருகிறதோ ?

என்றே புலம்பி இசையை நிறுத்தியது!
"ஒன்றே நினைப்பென்று ஒன்றாக வாழ்கின்றோம் !

எந்தக் கவலைக்கும் இடங்கொள்ள இதயத்தைப்
பொந்தாக்கி வைக்காதே ! பூவைப்பார் இறைவன்

படைப்பின் அழகைப்பார் ! பயமின்றி வாழப்பார் !
உடைவாளை உருவும் ஒற்றுமை இல்லா

மனிதரைபோல் இனத்தை, மகத்தான நேயத்தை
பனிபோல் தூய பண்பை இழக்காமல்

வந்தாரை வரவேற்போம் ! வளமான பசுங்காட்டில்
எந்நாளும் உறவோடு இசைத்து இன்பத்தில்

இறையோடு கலப்போம்! நாமெல்லாம் மக்களைப்போல்
இரைக்காக எதையுமே இழக்காமல் அன்போடு

இனத்தோடு சேர்ந்து எல்லோரும் வாழ்வோம்!
மனத்தை விரிவாக்கி மனிதர்க்கே வழிசெய்வோம் !

தூரத்து உறவும் தொடு(ம்) உறவாகும்
காரத்தை நீக்கியே கனிவோடு பழகுவோம் !"

என்றே பெண்குயில் இசைக்க
நன்றென ஆண்குயில் நல்முத்தம் தந்ததே !   

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.