புதியவை

கந்தவேளே - மீ.விசுவநாதன்


            


தீயவர்கள் செயலுக்குத்  தீர்ப்பொன்று தீட்ட

     தீப்பொறியால் வந்தசீலா ! தெய்வத்தாய் சக்தி

நேயமுடன் வேலோன்றை வெற்றிக்காய்த் தந்து

      நெற்றிமோந்த முருகவேலா  கார்த்திகைவான் பெண்கள்

தூயநினை வாகவுனைத் தூக்கிமகிழ் வேளைத்

      துயரங்கள் தீர்த்ததேவே ! ஆறுமுக மொன்றாய்

ஆயகலை கற்றிடவே அன்னையவள் சேர்க்க 

       அழகான முகம்பெற்ற அருள்கந்த வேளே !


செந்தூரில் கடலோரம் சிரித்தபடி சூரன்

      சிரங்கொய்தாய் ! பெருவீர தீரனானாய் ! பின்பு

அந்தப்பேர்ச் செயலுக்காய் தேவானைப் பெண்ணை

      அளித்தவுடன் மணம்புரிந்தாய் ! அண்ணனவன் அன்று

வந்துதவி செய்தவுடன் வள்ளியின்கை கோத்தாய் !

       மந்திரச்சொல் ஓங்கார மகிமைதனை உந்தன்

தந்தைக்கே உரைத்திட்ட சத்குருவு மானாய் ! 

      தமிழானாய் ! என்நாவில் சத்தியமா னாயே !

    (எண்சீர் விருத்தம்: வாய்பாடு: காய்,காய்,காய்,மா)

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.