புதியவை

ஜேக் அண்ட் ஜில் - நடராஜன் கல்பட்டு

டெலிபோன் மணி அடித்திட அவசர அவசரமாய் அதை எடுத்தாள் என் மனைவி, “ஹல்லோ” என்றபடி.

“ஸ்பீகர்லெ போடு.  நானும் கேக்கறேன்” என்றேன்.

அடுத்த கணம் உரக்க ஒலித்தது தொலை பேசி.

“அம்மா நான் சசி பேசறேம்மா” என்றாள் பீனிக்ஸில் இருக்கும் எங்கள் மகள்.

“நேத்து காலம்பர தானேடீ பேசினோம் ஒனக்கு இருபத்தஞ்சாவது வெட்டிங் அன்னிவர்சரின்னு.  ஏதோ ரெண்டு நிமிஷத்துலெ ஒங்களெ வாழ்த்தீட்டு போனெ வெய்க்கப் போறோம்னு நெனெச்சேன்.  அரெ மணி நேரம் புடிச்சிண்டே.  இப்பொ என்ன அதுக்குள்ளெ?  கொழெந்தேள் யாருக்காவது ஒடம்பு சரியில்லையா?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லேம்மா.  ஆமாம் நீ இப்பொ என்ன பண்ணிண்டு இருக்கே?”

“சமையல் பண்ணிண்டு இருக்கேன்.  அடுப்புலெ அப்பாவுக்குப் புடிக்குமென்னு உருளெக் கிழங்கு ரோஸ்ட் கறி பண்ணிண்டு இருக்கேன்.  சொல்ல வந்தெதெச் சட்டுனு சொல்லு.  இல்லேன்னா ரோஸ்ட் கறி வேஸ்ட் கரியாயிடும்.”

“அம்மா அடுப்பெ அணெச்சீட்டு வா.  ஒரு கதெ சொல்லப் போறேன்.”

“என்ன கதெ சொல்லப் போறே?”

“ஜேக் அண்ட் ஜில் கதேம்மா.”

“ஆமாண்டீ நர்சரி ரைம் கேக்கற வயசு எங்களுக்கு.  ஜேக் அண்ட் ஜில் கதெ சொல்றாளாம் இவொ.”

“அம்மா இது அந்த ஜேக் அண்ட் ஜில் கதெ இல்லேம்மா.  என் டீம்லெ வேலெ செய்யற ஜேக் ஸ்மித், ஜூலியானா தம்பதி பத்தின கதேம்மா,”

“சரி என்னமோ ஒண்ணு. இரு போயி அடுப்பெ அணெச்சீட்டு வறேன்.”

அடுப்பை அணைத்து விட்டு வந்து, “சொல்லுடீ” என்றாள் மனைவி.

ஆரம்பித்தாள் எங்கள் மகள் கதையை.

“ஜேக் ஸ்மித்தெ ஜேக்னு கூப்பிடுவோம்.  ஜூலியானாவெ ‘ஜில்’ லுனு கூப்பிடுவோம் நாங்க.  ஜில் எங்கூட லன்ச் சாப்பிடுவா.  சாயங்காலம் நான் டீ சாப்பிடற போது எங்கூட ஜேக்கும் டீ சாப்பிடுவான்.”

“சரி.  கதெயெச் சொல்லு.”

“சொல்றேம்மா.  நிதானமாக் கேளு.  பெரிய கதெ இது.  டெலிபோன் பில்லெப் பத்தி கவலெப் படாதே.  பில்லு எனக்குதான் வரும்.”

“யாருக்கு வந்தா என்னடீ?  பில்லு பில்லுதானே?  சொல்லு நீ கதெயெ.”

“சொல்றேன் கேளு.  நேத்து எனக்கு சில்வெர் ஜூபிலீ வெட்டிங் அன்னிவெர்சரி யாச்சேன்னு என் டீம்லெ இருக்கறவாளுக்கு பாதாம் கேக் பண்ணிக் கொண்டு போய் குடுத்தேன்.  அப்போ ஜில் கேட்டா, ‘என்னாது இருபத்து அஞ்சு வருஷமாச்சா ஒங்களுக்குக் கல்யாணம் ஆகி?  ஒங்களுக்குள்ள சண்டெயே வாராதா?’ ன்னு.  நான் சொன்னேன் இது என்ன பெரிய விஷயம்?.  போன மாசந்தான் என்னோட அம்மா அப்பாக்கு கோல்டென் வெட்டிங்க் அன்னிவார்சரி நடந்துதுன்னு.  ஜில்லு கேட்டா, ‘என்னது ஒங்கம்மா அம்பது வருஷமா ஒரே ஹஸ்பெண்டோட வாழறாளா?’ ன்னு.”

“அவொ கண்ணுலெ அம்பிட்டு காக்காப் பீயெ அப்ப”.  இது என் மனைவி.  அவளது திருனெல்வேலி பாஷையில்.

“கதெயெக் கேளும்மா.  அப்புறமா அப்பிக்கலாம் காக்கா பீயெ அவொ கண்ணுலெ.”

“சொல்லு.”

“ஜில்லுக்கு இது மூணாவது ஹஸ்பெண்டாம்.  மொத ஹஸ்பெண்டு பக்கத்து வீட்டுப் பொண்ணெ இழுத்துண்டு ஓடிப் போயிட்டானாம்.  அவனெத் தேடிக் கண்டு புடிச்சு டைவர்ஸ் கேசு போட்டு ஜீவனாம்சமும் வாங்கினாளாம்.  ரெண்டாவது ஹஸ்பெண்டு குடிகாரனாம்.  இவொ வேலைக்குப் போயி சம்பாதிச்சுண்டு வரதெ வெச்சிண்டுதான் குடும்பம் நடந்துண்டு இருந்துதாம்.  இதுலெ அவளுக்கு ஒரு பொண் கொழெந்தெயும் பொறந்துதான்.  அதுக்கு நாலு வயசு இருக்குற போது ஒரு நாளு குடிச்சூட்டு அவொ புருஷன் கண்ணு மண்ணு தெரியாமெ அடிச்சுத் தூக்கி வீசினதுலெ மண்டேலெ அடி பட்டு அந்தக் கொழெந்தெ செத்துப் போச்சாம்.  அதுக்கப்புறம் கோர்ட்டு, கேசுன்னு போயி டைவர்சுலெ முடிஞ்சுதான் அந்தக் கல்யாணமும்.”

“போருண்டீ அந்த சோகக் கதெல்லாம்.  சட்டுப் புட்டுனு முடி கதெயெ.  எனக்கு வேலெ கெடெக்கு ஊருப் பட்டது.”

“இரும்மா.  அவசரப் படாதே.  பூராக் கதெயெக் கேளு.  அதுக்கப்புறம் அஞ்சு வருஷம் கல்யாணமே வேண்டாம்னு இருந்தாளாம்.  அப்பொதான் அவொ ஜேக்கெ சந்திச்சு காதல் பண்ணி கல்யாணமும் பண்ணிண்டாளாம்.”

“ராஜாவெக் கல்யாணம் பண்ணிண்டு ராணியும் ராஜாவும் அப்புறம் சந்தோஷமா வாழ்ந்தாளாக்கும்?”

“அப்பிடி இல்லேம்மா.”

“போச்சா அதுவும்?  மறுபடியும் டைவர்சா?”

“இல்லேம்மா.  ஜேக்கோட கதெயெக் கேளு.”

“சொல்லு.  கேக்கறேன்.  கேக்காட்டா உடுவையா நீ.”

“ஜேக்கோட அப்பா அம்மா ஒரு வெஜிடபிள் ஃபார்ம்லெ கூலி வேலெ செஞ்சிண்டு இருந்தவாளாம்.  ஜேக்குக்கு பில்லுனு ஒரு தம்பி இருந்தானாம் எட்டு வயசுலெ.”

“அதென்னடீ பில்லு, பீக்குன்னெ ஏதோ பறவையோட உறுப்பாட்டம் பேரு?’

“அம்மா நீ இப்போ கோர்ட்டுலெ வக்கீல் கேக்குற மாதிரி குறுக்குக் கேள்வி கேக்குறதெ உட்டூட்டு கதெயெக் கேக்கப் போறையா இல்லையா?”

“சரி.  மேலெ சொல்லு.”

“வில்லியம்ங்கற பேரெத்தான் இங்கெ சுருக்கமா ‘பில்’ லுனு கூப்பிடுவா நம்ம ஊருலெ கிருஷ்ணசாமீங்கெறெ பேரெ கிச்சான்னு கூப்பிடறது போல.  கதெயெ எங்கெ உட்டேன்?” 

“ஜேக்குக்கு பில்லுனு ஒரு தம்பி இருந்தானாம் எட்டு வயசுலேங்கெற இடத்துலெ உட்டே.”

“ஆங்.  அந்த பில்லு ஒரு நாளு ஸ்கூலுலேந்து வந்ததும் நேரெ போயி படுக்கெலெ உழுந்தானாம்.  அம்மா கேட்டதுக்கு, ‘அம்மா இன்னிக்கு ஸ்கூலுலெ ஓட்டப் பந்தயம் வெச்சிருந்தா.  அதுலெ நானும் கலந்துண்டேன்.  கொஞ்ச தூரம் ஓடினதுமே எனக்கு மயக்கம் வந்து விழுந்தூட்டேன்.  மூஞ்சீலெ கொஞ்சம் தண்ணியெத் தெளிச்சு நான் கண்ணெத் தொறந்ததும் கைத்தாங்கலாப் புடிச்சு ஒரு பெஞ்சுலெ படுக்க வெச்சா.  ஸ்கூல் பஸ்ஸு வந்ததும் அதுலெ என்னெ ஏத்தி அனுப்சூட்டா’ ன்னானாம்.  அன்னிக்கு படுத்தவன் தான்.  அதுக்கப்புறம் ஏந்திருக்கவே இல்லெ அவன்.

அப்பா அம்மா அவனெத் தூக்கிண்டு ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா அலைஞ்சா.  கடைசீயா ஒரு ஆஸ்பத்திரிலெ சொன்னா அவனுக்கு வந்திருக்கற வியாதி ல்யூகேமியான்னு சொல்லற ப்ளட் கேன்சர்னு.

அதுக்கு கொஞ்சம் மாத்திரெயும் கொடுத்தா.  கூடவே சொன்னா அவனோட வியாதிய குணப் படுத்தணும்னா நல்ல ஒடம்போட இருக்கற ஒத்தரோட எலும்புக்குள்ள இருக்கற போன் மேரோவெ எடுத்து அதெ இவன் ஒடம்புலெ ஏத்தணும்னு.  

இந்த ஆபரேஷன் ரத்தம் கொடுக்கற மாதிரியோ, கண்ணு, கிட்னி மாத்து அறுவெ ஆபரேஷன் மாதிரி சுளுவான ஒண்ணு இல்லெ.   எல்லார் ஒடம்புலேந்து எடுக்கற போன் மேரோவும் ஒத்துக்காது.  மொதலுலெ போன் மேரோ தானம் கொடுக்க ஒத்துக்கறவாளெக் கண்டு புடிக்கணும்.  அதுக்கப்புறம் அவா ஒடம்புலெ இருக்கற போன் மேரோ  பில்லுக்கு ஒத்துக்கும்ங்கறெதெப் பரிசோதிக்கணும். 

இந்த ஒலகத்துலெ போன் மேரோ தானம் பண்ண ஒத்துக்கறவாளோட எண்ணிக்கையெ வெரலெ உட்டு எண்ணலாம்.  அதனாலெ இதுக்கு பல ஆயிரம் டாலர்கள் ஆகலாம்னு சொன்னா அந்த ஆஸ்பத்திரீலே.

அப்புறம் என்னாச்சுன்னு நான் கேட்டதுக்கு ஜேக் சொன்னான், என்ன ஆறது.  கூலி வேலெ செய்யற என்னோட அப்பா அம்மா எங்கெ போவா ஆயிரக் கணக்கான டாலர்களுக்கு?  டாக்டர்கள் கொடுத்த மாத்திரெகளெக் குடுத்திண்டு இருந்தா.

நான் ஸ்கூலுலேந்து திரும்பினதும் அவன் படுக்கை பக்கத்துலேயே ஒக்காந்துண்டு இருப்பேன், ஒரு கையாலெ அவன் தலெயெத் தடவிக் குடுத்துண்டு.  என்னோட இன்னோரு கையெ பில் கெட்டியா புடிச்சிண்டு இருப்பான்.

ஒரு நாள் பில் கேட்டான், “அண்ணா நான் ஒங்களெ எல்லாம் உட்டூட்டு ஜீஸஸ் கிட்டெ போயிடுவேனா அண்ணா”ன்னு.  அன்னிக்கி மறு நாள் என் கையெ அவன் புடிச்சிண்டு இருந்த போதே திடீல்னு அவன் கைப் பிடி தளந்துது.  கண் இமைகளும் துடிக்காமெ அப்படியே பாதி தெறந்த நிலையிலேயே நின்னிச்சு.  அவன் ஒடம்பு ஜில்லுனு போச்சு.  அம்மாவெக் கூப்பிட்டேன்.  அம்மா வந்து பாத்தூட்டு, ஜீஸஸ்……. பில் நம்மெ விட்டுப் போயிட்டாண்டான்னா.  அப்புறம் என்ன அழுகைதான்.

அன்னிக்கு முடிவெடுத்தேன் கல்யாணமே செஞ்சுக்கக் கூடாதுன்னு.  மனுசனாப் பொறந்து இந்த வாழ்க்கைலெ என்ன சுகம் இருக்கு?  எங்க பாத்தாலும் கஷ்டந்தான்னு.

பள்ளிக் கூடத்துலேயும் காலேஜுலேயும் எல்லாப் பசங்களும் கேள் ஃப்ரெண்டுன்னு ஜோடி சேத்துண்டு சுத்திண்டு இருக்கறப்போ நான் மட்டும் லைப்ரரிலெயோ, இல்லே ஏதாவது ஒரு மரத்தடிலேயோ போதெக் கழிப்பேன்.

காலேஜுலெ படிச்சு பட்டம் வாங்கி ஒரு வேலெய்க்கும் போனேன்.  அம்மா ஆரம்பிச்சா, ஜேக் நீயும் எல்லாரையும் போல கல்யாணம் பண்ணிண்டு பேரன் பேத்தின்னு எங்க கையிலெ கொடுக்கணுண்டான்னு.

அம்மா இம்செ பொறுக்காமெ, ‘சரி நீயெ பாரும்மா ஒரு பொண்ணன்னென்.  அவளோட தூரத்து சொந்தக் காரப். பொண்ணு ஒண்ணோட டெலிபோன் நம்பரெக் குடுத்து நீ பேசுடா அவொ கிட்டெ.  நான் அவொ அப்பா அம்மா கிட்டே பேசறேன்னா.  நானும் பேசினேன் அந்தப் பொண்ணோட.  அப்புறம் ஓட்டல் ஒண்ணுலெ அவொளெ சந்திச்சேன்.  கொஞ்ச நாளுலெ கல்யாணமும் ஆச்சு.

ஒரு நாள் மத்தியானம் எனக்கு ஒரே தலெ வலியா இருந்தது.  சீக்கிரமா வீட்டுக்குப் போனேன்.  வாசக் கதவு தெறந்து இருந்தது.  நேரெ கிச்சனுக்குப் போனேன்.  அங்கெ லாராவெ, அதான் என் மனைவியெக் காணும்.  பெட் ரூமுக்கு போனா அங்கெ லார படுக்கெலெ இருக்கா.  அவ கூட ஒரு ஆளு.

வாள்னு கத்தி சண்டெ போட்டேன் அவுங்களோட.  கொலெ வெறிலெ இருந்த நான் அவனெக் கொல்றதுக்கு முன்னெ அவன் ஓடிப் போயிட்டான்.

லாராக்கும் எனக்கும் வாக்கு வாதம் நடந்தது.  நான் அவொளெ அடிக்க கையெ ஓங்கினேன்.

அடிக்க வரெயா என்ன நீ?  போடறேன் பாரு இப்பொவே போலீசுக்குக் போனூன்னு சொல்லி ஒரு காலும் போட்டா.  போலீசுக் காரங்க வந்து என்னெ இழுத்துண்டு போனாங்க.  அப்புறம் கோர்ட்டு கேசுன்னு அலெஞ்சு டைவர்சும் ஆச்சு.  அப்பொ எடுத்தேன் மறுபடியும் முடிவு.  இன்னமே கல்யாணமே பண்ணிக்கக் கூடாதுன்னு.  ஆனா விதி என்னெ உடலே.

இந்த ஆபீசுக்கு வந்ததும் ஜில்லெ சந்திச்சேன்.  அவொ தன் சோகக் கதெயெ சொன்னா.  நான் என் கதெயெச் சொன்னேன்.  ஒருத்தரு மேலெ ஒருத்தருக்கு வந்த பச்சாதாபம் காதலுலெ முடிஞ்சு கல்யாணமும் ஆச்சு எங்க ரெண்டு பேருக்கும்னு சொல்லித் தன் சோகக் கதெயெ முடிச்சான் ஜேக்.”

“சரி முடிஞ்சுதோல்லியோ கதெ?  நான் போறேன் சமயலுள்ளுக்கு” ன்னா என் சம்சாரம்.

“இரும்மா இன்னும் முடியலெ கதெ.”

“சட்டுன்னு முடிடீ.”

“நேத்து டீ சாப்பிடப் போன பொது ஜேக்கெக் கேட்டேன், ‘நீங்க ரெண்டு பேரும் ஹஸ்பெண்ட் ஒய்ஃப் தானே?  ஏன் ஒண்ணா லஞ்சு சாப்பிட வரதில்லேன்னு.”

“சேஷீ…. அப்பிடித்தான் ஜேக் ‘சசீ’ ங்கற என்னெக் கூப்பிடுவான், நாங்க ஹஸ்பெண்ட் ஒய்ஃப் தான்.  ஆனா எங்களுக்குள்ளெ ஒரு மனஸ்தாபம்.  அதுனாலெ நாங்க பேசிக்கறது இல்லெ’ ன்னான்.

“என்ன மனஸ்தாபம்னு கேட்டேன் நான்.  அவொ கொழெந்தெ வேணுங்கறா.  நான் வேண்டாங்கறேன்.  கல்யாணத்துக்கு முன்னெ அவொ இந்தக் கண்டிஷனுக்கு ஒத்துண்டா. ஏன்னா அவளும் என்னெப் போல ஒரு கொழெந்தெ படற கஷ்டத்தெப் பாத்து இருக்கா.  என் கையெப் புடிச்சிண்டே உயிர விட்ட பில்லோட மொகம் என் கண்ணுலெ எப்பொவும் இருக்கு.  அப்பொ ஒத்துண்டவொ இப்பொ மொறண்டு புடிக்கிறா.  என்ன பண்ண?  தினமும் எங்களுக்குள்ளே சண்டெ.  இப்பொ ரெண்டு மாசமா ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கறது இல்லென்னு சொன்னான் ஜேக்.”

“என்னவோ போ.  கூறு கெட்ட குடும்பங்கடீ அங்கெ இருக்கறவாள்ளாம்.  நம்ம ஊருலெ கல்யாணத்தெ பெரியவா ஆயிரம் காலத்துப் பயிறுன்னுவா.  ஒன் கொழெந்தேளெ அடிக்கடி இங்கெ அழெச்சிண்டு வாடி.  இங்கெ வந்து சொந்தக் காராளோட எல்லாம் பழகினா அவாளுக்கும் நம்ம கலாசாரம் வருண்டி.”  இது என் மனைவி.

“அம்மா அதுக்குன்னு எல்லாருமே இங்கெ அப்பிடின்னு இல்லேம்மா.  இங்கெயும் புள்ளே, பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன், கொள்ளுப் பேத்தின்னு ஆனப்புறமும் ஒரே குடும்பமா இருக்கறவாளும் இருக்காம்மா.  ஆனா என்ன ஒண்ணு அப்பிடி இருக்கறவாளோட எண்ணிக்கெதான் ரொம்பக் கொறெச்சல்.”

“ஜேக் அண்ட் ஜில் கதெ முடிஞ்சுதோல்லியோ.  வைடீ போன.  ஒரு மணி நேரமா கதெ பேசறா.  அப்பா பசி தாங்க மாட்டாடீ.”

போன் இணைப்பைத் துண்டித்தாள் எங்கள் மகள்.
  
(கற்பனையல்ல இது.  இன்று காலை எங்கள் மகள் சொன்ன செய்தி களை வைத்து சிறிதளவே சரக்கு சேர்த்து எழுதிய கதை இது.)

          .

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.