புதியவை

(பதின்சீர் விருத்தம்: கருவிளம் விளம் விளம் காய் . கூவிளம் மா காய் . கூவிளம் மா காய்)
பிரதோஷத் துதி
ஆத்துமப் பொருள்தேடல் என்றோ?அலையெழு பாற்கடல் அகழ்ந்தெழு ஆலமதை
. ஆலமர் செல்வன் அருந்திடவே
. ஆரியை கையால் நெரித்திடவே
நிலையெனக் கழுத்தினில் நின்றிடும் வடுவுடனே
. நீலகண் டசிவன் வானுலகும்
. நீணிலம் யாவும் காத்திடுவார்

விலையெனத் தந்ததை வானவர் மறந்திடவே
. வெள்விடை யானோ கவலையின்றி
. வீற்றிரு கயிலை மலைநாடித்
தலையினைக் காத்தவர் போற்றியே வானவரும்
. தாள்பணிந் திடவே மகிழ்வெய்தும்
. தாண்டவன் ஆடல் சந்தியிலே! ... 1

பலவித திரவியம் பரமனின் தலைவிழவே
. பல்வித மலர்கள் தாள்சேர
. பண்ணொடு வேதம் ஒலித்திடுமே
சிலையழ கோடுமை யாள்வரும் சுற்றினிலே
. சீர்மலி வேதம் ஒலித்திடுமே
. தேமலிப் பண்ணும் சேர்ந்திடுமே
பலவித வாயெனப் பற்றுறச் செய்வினையில்
. பந்தெனத் துள்ளித் துவண்டிடவே
. பால்வணன் நாடும் மன்பதையில்
பலனுற வேண்டிடும் அடியவர் பலருடனே
. பற்றற வேண்டும் வெகுசிலரும்
. பத்தராய்ப் பரமன் தாள்தொழுவர். ... 2கவிதையைக் கைவிரல் கணினியில் தாளமிடக்
. காதினில் சொற்கள் ஓலமிடக்
. காதைகள் கருவாய் நின்றிடவே
நவயுகப் போக்கென விளைத்திடும் குப்பைகளை
. நாடொறும் நானும் நாடுவதில்
. நட்டமும் நலிவும் வந்தறிந்தும்
தவளையாய்க் கேணியில் தங்கிநான் திளைப்பதிலே
. சாதனை யெல்லாம் உலகியலாய்த்
. தவமுடன் ஜபமும் குன்றிடுமே
உவகையின் ஆத்துமம் ஊன்விடும் பொருள்தேடல்
. உள்ளுறும் தழலாய் எழுவதெனும்
. உன்னதம் தருதல் எந்நாளோ? ... 3


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.