புதியவை

தமிழக அரசின் இளங்கோ அடிகள் விருது பெற்ற தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் அவர்களின் நேர்காணல் எம். கணேஷ்


உறைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்’ என்ற கருதுகோளுடன் தொடக்கம் முதல் இறுதி வரை பெண்மைக் காப்பியமாக திகழ்வது சிலப்பதிகாரம். இதை இயற்றியவர் இளங்கோவடிகள். சாமானிய மனிதர்களையும் காவியமாக்கலாம் என்று உலகிற்கே பாதை வகுத்தளித்தளித்தவர். அவரது பெயரால் விருது வழங்கப்பட வேண்டும் என்பது தமிழ் பேசும் நல்லுலகத்தாரின் பல ஆண்டு கோரிக்கை.
அதை ஏற்ற தமிழக அரசு கடந்த ஆண்டு,  இளங்கோவடிகளின் நடையையொட்டி புதிய காப்பியம் படைப்பவருக்கோ அல்லது சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்புபவருக்கோ ஆண்டுதோறும் இளங்கோவடிகள் பெயரில் புதிய விருது வழங்கப்படும் என அறிவித்தது. அதன் படி பல இலக்கியச் சொற்ப்பொழிவுகளில் சிலப்பதிகார புகழ் பரப்பியதற்க்காக  தமிழக அரசின் முதல் இளங்கோவடிகள் விருது  முனைவர். நிர்மலா மோகன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜி.டி.நிர்மலா என்று பரவலாக அறியப்படும் இவருக்கு  கல்லூரி பேராசிரியை, பட்டிமன்ற பேச்சாளர், இலக்கியச் சொற்ப்பொழிவாளர், ஆய்வு வழிகாட்டி என பல முகங்கள் உள்ளன. முனைவர் நிர்மலா மோகனுடன் ஓர் மகிழ்ச்சியான சந்திப்பு.
தமிழ் மீது ஆர்வம்  எப்போதிலிருந்து?
நான் பள்ளியில் படிக்கும் போது கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி என எல்லா போட்டிகளிலும் பரிசுகள்  வாங்கியிருக்கிறேன். அப்போதிலிருந்து எனக்கு தமிழ் மீது ஆர்வம்.  பியூசி முடித்த பிறகு தமிழ் படிக்க நினைத்தேன். ஆனால் இடம்  கிடைக்கவில்லை. பிஎஸ்சி இடம் தான் இருந்தது. சரி வேதியியல் படிக்கலாமென்று நான் வேதியியல் கேட்க, விலங்கியல் தான் கொடுத்தார்கள். மூன்று வருட பிஎஸ்சி படிப்பு முடித்த பிறகு அதே கல்லூரியில் எம்ஏ தமிழ் படிக்க இடம் கிடைத்தது. அக்காலத்தில்  முதுகலை தமிழ் படிக்க இடம் கிடைப்பது சுலபம் இல்லை. எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இரண்டையும் கடக்க வேண்டும். நான் பிஎஸ்சி படிக்கும் போது கல்லூரி விழாக்களில் பேசுவது, கட்டுரை எழுதுவது என தமிழ் மீது ஆர்வமாக இருந்ததால் எனக்கு எளிதாக இடம் கிடைத்தது. எம்ஏ முடித்த பிறகு 1976 ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதன் முதலாக எம்பில் தொடங்கப்பட்டது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பேஜில் நானும் ஒருவர். எம்பிலில் நான் யுனிவர்சிட்டி பஸ்ட்  ரேங்க் பெற்றேன். அதனால் அங்கேயே தமிழில் ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. குறவஞ்சி இலக்கியத்தில் ஆராய்ச்சி செய்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 1983ல் முனைவர் பட்டம் பெற்றேன்.
ஆசிரியர் பணி மீது எப்படி ஆர்வம் வந்து?
ஒன்றை கற்றுக்கொண்டால் அதை மற்றவர்களுக்கு கற்றுத்தர வேண்டும் என்று நான் நினைப்பேன். அந்த குணம் தான் என்னை ஆசிரியர் பணிக்குச் செல்லத்தூண்டியது. மதுரை செந்தமிழ் கல்லூரியில் தமிழ் துறை விரிவுரையாளராக பணிக்கு சேர்ந்தேன். 2010ல் தமிழ்த்துறை இணைப்பேராசியராக ஓய்வு பெறும் வரை தொடர்ந்து 27 ஆண்டுகள் அதே கல்லூரியில் பணியாற்றினேன். தற்போது மத்தியஅரசின் காந்திக் கிராமியப் பல்கலைக்கழகத்தில் தகைசால் பேராசிரியராக கடந்த பிப்ரவரி முதல் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்.
மாணவர்களுக்கு நீங்கள் கண்டிப்பான ஆசிரியரா?
கண்டிப்பு கலந்த அன்பான ஆசிரியர். மாணவர் ஆசிரியர் என்ற பாகுபாடு எப்போது வருகிறதோ அப்போதே இருவருக்குமான புரிதல் பிளவுபட்டுப்  போகிறது. என்னைப் பொருத்த வரை ஆசிரியர் மாணவர் புரிதல்  என்பது  சமுதாயத்திற்க்கு அவசியமான ஒன்று. இதுவரை 25பேர் பிஎச்டி பட்டமும், 122பேர் எம்பில் பட்டமும் பெற நான் வழிகாட்டியாக இருந்திருக்கிறேன்.  அனைவரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். இன்று வரை எனது மாணவர்கள் என்னிடம் அறிவுரை கேட்டே எந்த விஷயத்தையும் செய்கிறார்கள். நல்ல மாணவர்களை பெற்றது எனக்கு பெருமையாக இருக்கிறது.
உங்கள் எழுத்துப்பணி பற்றி சொல்லுங்கள்?
குறிஞ்சி இலக்கியத்தில் நான் செய்த ஆராய்ச்சி தான் என்னுடைய முதல் நூல். தற்போது வரை 27 நூல்கள் எழுதியிருக்கிறேன். அதில் கி.வா.ஜகந்நாதன்’, பண்டிதமணி, சோமலே போன்றோர்களைப் பற்றிய புத்தகங்களும் அடக்கம். மேலும் ஆண்டாள் பற்றிய புத்தகம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சிற்றிலக்கியங்களில் மும்முனைப் போக்கு, சங்கச்சான்றோர் ஆளுமைத்திறன், உ.வே.சா வின் குறுந்தொகை உரைத்திறன் போன்ற நூல்கள்  எனக்கு தமிழ் எழுத்துலகில் ஒரு நிரந்தர இடத்தைத் தேடிக்கொடுத்தது. கடைசியாக கம்பன் கவியமுதம் என்ற நூல் வெளிவந்துள்ளது. மேலும் இரண்டு நூல்கள் அச்சில் இருக்கிறது. எனது கணவர் பேராசிரியர். இரா.மோகன். மு.வ வின் செல்லப்பிள்ளை என்று அறியப்படுபவர். 2011 ல் பேராசிரியர். இரா. மோகனின் படைப்புலகம் என்ற நூலை வெளியிட்டேன். ஒரு மனைவியாக கணவரின் படைப்புகளைப் பற்றி எழுதியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது.உங்கள் கணவர் உங்களை மு.வ விடம் அறிமுகம் செய்தாராமே?
(சிரித்துக்கொண்டே...) அது நாங்கள் கல்லூரி படிக்கும் காலத்தில் நடந்தது. வருடம் 1974, ஜனவரி 27.  என்னை மு.வ விடம் அழைத்துச்செல்வதற்க்கு முன்னால் , ‘ எனக்கு விருப்பமான ஒருவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் அவரை அழைத்து வரலாமா? என்று மு.வ விடம் கேட்டிருக்கிறார் எனது கணவர். ‘அதனால் என்ன அழைத்து வா‘ என்று மு.வ வும் சொல்ல, அவர் முன் என்னைக் கூட்டிச் சென்று நிறுத்தி,  ‘இவளை நான் காதலிக்கிறேன். நாங்கள் திருமணம் செய்ய இருக்கிறோம்‘ என்று என் கணவர் சொல்ல, சிறிது நேரம் எங்கள் இருவரையும் வியப்போடு பார்த்துவிட்டு பிறகு இயல்பு நிலைக்கு வந்தார்.
‘விருப்பமான ஒருவரை அழைத்து வருகிறேன் என்று சொல்லி ஒரு பெண்ணை அழைத்து வந்திருக்கிறானே இவன்‘ என்று மனதிற்க்குள் நினைத்திருப்பார். அவருடன் மூன்று மணி நேரம் பேசியிருப்போம். மிக எளிமையான மனிதர். சகஜமாக பழகினார். எங்களுக்கு செவ்வாழைப்பழம், ஆப்பிள் பழம் கொடுத்து அவரே உபசரித்தார்.  நல்வாழ்வு என்ற புத்தகத்தில் ‘அறிவும் அன்பும் இரு கண்கள்‘ என்று எழுதி கையெழுத்திட்டு அப்புத்தகத்தை பரிசாக தந்தார்.  அந்நாள் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.
உங்கள் மேடைப் பயணம் எப்போது தொடங்கியது?
கல்லூரி காலத்தில் தான். எம்ஏ படிக்கும் காலத்தில் வாரம் ஒரு நாள் வியாழக்கிழமை பல்கலைக்கழகத்திற்கு வந்து கட்டுரை வாசிக்க வேண்டும். இப்படி ஒரு விதி இருந்தது. அப்போது என் கணவர் பல்கலையில் ஆராய்ச்சி மாணவர். அங்கு தான் எனக்கு அவர் அறிமுகமானார். அவரும்  அங்கே கட்டுரை வாசிப்பார். நான் கட்டுரை வாசிக்க அவர் ரசிப்பார். அவர் வாசிக்க நான் ரசிப்பேன். இருவருள் நான் தான் நன்றாக வாசிப்பேன். இப்படி ஆரம்பித்து மேடைப் பயணம். பிறகு நானே  ஒரு தலைப்பை எடுத்து பேச அது நல்ல வரவேற்பை பெற்றது.
கல்லூரி விழாக்களில் நான் பேசுவதைப் பார்த்துவிட்டு கோயில் திருவிழா, மகளிர் மன்றம், கலைநிகழ்ச்சிகள் என வெளி இடங்களில் என்னை பேச அழைத்தார்கள். நான் கல்லூரி முடிந்து மாலை நேரங்களில் அங்கு சென்று பேசுவேன். இப்படி சென்ற மேடைப்பயணம் 1984ல் சாலமன் பாப்பையா அய்யாவிடம் சென்று சேர்த்தது. தனது பட்டிமன்ற குழுவில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். என் பேச்சு மக்களை கவர்ந்தது. எனக்கு கிடைத்த கைதட்டல்களையும்  பாராட்டுகளையும் பார்த்து என் கணவரும் பட்டிமன்றம் பேசவேண்டும் என்று ஆசைப்பட்டு  எங்கள் குழுவில் இணைந்தார்.
நாங்கள் இருவரும் எதிரெதிர் அணியில் இருக்க, தலைப்புகள் அனைத்தும் குடும்பம்  சம்மந்தமான தலைப்பாகவே சாலமன் பாப்பையா அய்யா அமைப்பார். ஒரு கணவன் மனைவியாக அந்த தலைப்புகளை எதிர்கொள்ளும் போது , அது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பைப் பெற்றுத்தந்தது. எங்கள் இருவருக்கும் ஒரு அங்கீகாரத்தை தேடித்தந்தது. மேடையில் நீயா நானா என்று போட்டியே நடக்கும். ‘வீட்டிலும் இப்படித்தான் சண்டை போடுவீங்களா?!‘என்று எல்லோரும் கேட்கும் அளவிற்க்கு காரசாரமாக மேடையில் நாங்கள் இருவரும்  பேசிக்கொள்வோம்.
பட்டிமன்ற நாட்களில் மறக்க முடியாத நாள்?
ஒரு முறை ஆண்களின் முன்னேற்றத்திற்க்கு பெரிதும் காரணமானவர் தாயா? தாரமா? என்ற தலைப்பை பட்டிமன்றத்திற்க்கு வைத்திருந்தார் பாப்பையா அய்யா.  என் கணவர் தாய் தான் காரணம் என்று பேசக்கூடிய அணியில் இருந்தார். நான் எதிரணியில் இருந்தேன். முதலில் பேசிய அவர் ‘திருமணத்திற்க்கு முன் நான் பாயும் புலியாக இருந்தேன், இப்போது கூண்டுக்கிளியாக இருக்கிறேன். ராஜாதி ராஜாவாக இருந்தேன், ஆனால் இப்போது கூஜா தூக்குகிறேன். முரட்டுக்காளையாக இருந்தேன்...’ என வரிசையாக  ரஜினி பட தலைப்பாக அடுக்கிக்கொண்டே இருந்தார். அரங்கமே கைத்தட்டலால் அதிர்ந்தது. அங்கு எழுந்த ஆரவாரம் எனக்கு சிறிய பயத்தை ஏற்ப்படுத்தியது.
‘இதை எப்படி மறுத்துப் பேசப் போகிறோமோ...’  என்று யோசித்தபடியே மைக் முன்னால் நின்று பேசத் தொடங்கினேன். ‘பாயும் புலியாக, முரட்டுக்காளையாக இருந்த என்கணவரை மனிதனாக்கி, மாப்பிள்ளையாக்கி, மன்னனாக்கி, இன்று நாட்டுக்கொரு நல்லவனாக்கியிருக்கிறேன்’ என்றதுமே அவருக்கு விழுந்த கைத்தட்டல்களை விட அதிகமான கைத்தட்டல்கள் நீண்ட நேரம் அரங்கம் முழுவதும் கேட்டுக்கொண்டிருந்தது. ஏனென்றால் ரஜினியின் நாட்டுக்கொரு நல்லவன் படம் ரிலீஸ் ஆக தயாரா இருந்த நேரம் அது. அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. தொடர்ந்து ஏழு வருடங்கள் சாலமன் பாப்பையா அய்யாவுடன் இணைந்து பட்டிமன்றங்களில் பேசினோம்.
1992ம் ஆண்டிலிருந்து தனியாக பட்டிமன்றம் பேச ஆரம்பித்தோம். என் கணவர் நடுவராகவும், நான்  அணித் தலைவராகவும் இன்று வரை பட்டிமன்றத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். விழிப்புணர்வு, இலக்கியம் சம்மந்தமான தலைப்பை மட்டுமே நாங்கள்  தேர்ந்தெடுப்போம். வெளிநாடுகளில் இலக்கிய பட்டிமன்றத்திற்கு நல்ல வரவேற்ப்பு இருக்கிறது. பட்டிமன்றம் மட்டும் இல்லாமல் கருத்தரங்குகள், தமிழ் அமைப்புகளின் கூட்டங்கள் என எங்களை அழைக்கும் இடங்களில் இலக்கிய சொற்பொழிவாற்றி வருகிறோம். அமெரிக்காவில் தொடர்ந்து 25 இடங்களில் இலக்கிய சொற்பொழிவாற்றிய தம்பதிகள் நாங்களாகத்தான் இருப்போம்.
நீங்கள் பங்கேற்ற கருத்தரங்குகள் என்னென்ன?
இதுவரை 150க்கும் மேற்ப்பட்ட கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறேன். குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் மதுரையில் நடந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு. தஞ்சையில் நடந்த எட்டாம் உலகத்தமிழ் மாநாடு. மலேசியாவில் நடைபெற்ற ஒன்பதாம் உலத்தமிழ் மாநாடு. தஞ்சை ஆறாம் உலகத்தமிழ் மாநாடு. கோவை தமிழ்ச் செம்மொழி மாநாடு பேன்றவற்றில் கலந்துகொண்டிருக்கிறேன். மேலும் பல அனைத்துலக, அனைத்திந்திய, தேசிய கருத்தரங்குகளில் பங்கேற்று உரையாற்றியிருக்கிறேன். எங்கு நான் பேசினாலும் சிலப்பதிகார நடையும் மேற்க்கோள்களும்  அதில் இடம் பெறும். எனக்கு மிகவும் பிடித்த காப்பியம் எதுவென்றால் அது சிலப்பதிகாரம் தான். ஏனென்றால் ஒரு நாட்டில் இருக்கும் சாதாரண குடிமக்கள் பற்றிய காப்பியமாக, அக்கால மக்களின் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் காப்பியமாக சிலப்பதிகாரம் திகழ்கிறது.மன்னர்களை மட்டுமே வைத்து காப்பியம் வடித்த நடையை உடைத்தவர் இளங்கோவடிகள்.
முதல் இளங்கோவடிகள் விருது பெற்றதை எப்படி உணர்கிறீர்கள்..?
ரொம்பவும் மகிழ்ச்சியாக  இருக்கிறது. கூடவே பெருமையாகவும் இருக்கிறது. இதுவரை நான் 11 விருதுகளை பெற்றுள்ளேன். இலக்கிய மாமணி, ஔவை விருது, கிருபானந்தவாரியார் விருது, சமீபத்தில் கம்பன் கழகத்தின் கே.சுவாமிநாதன் விருது. ராஜா.சர்.அண்ணாமலை செட்டியார் விருது பெற்றிருக்கிறேன். அப்போதெல்லாம் நம் இலக்கிய பணிக்கு இன்னும் இன்னும் அங்கீகாரம் தேவைப்படுகிறதோ என்ற எண்ணம் தோன்றும். இப்போது தமிழக அரசின் முதல் இளங்கோவடிகள் விருது பெற்றது என் இலக்கியப்பணிக்கு கிடைத்த அரசின் அங்கீகாரமாக நான் உணர்கிறேன். என் கணவர்  என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்ததால்தான் என்னால் தமிழக அரசு விருது பெற முடிந்தது. ஏற்கனவே எனது கணவர் தமிழக அரசு விருது பெற்றுள்ளதால், கணவன் மனைவி இருவரும் தமிழக அரசு விருது பெற்றிருப்பது இதுவே முதல் முறை என்பதால் கூடுதல் மகிழ்ச்சி.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.