புதியவை

படிகளில் உருண்டுருண்டு... (குறள் வெண்செந்துறை)--ரமணி,மாடிப்படி உச்சியில் மகிழ்வோ டுட்கார்ந்தே
வேடிக்கை பார்த்தே வெறுங்கை யாட்டியதில்
சின்னக்கால் தடுக்கிச் சிறுகுழந்தை படிகளிலே
முன்னே சரிந்து முற்றிலும் உருண்டுருண்டே
வழுக்கிக் கால்மடங்கி மடேரெனக் காதொலிக்க
விழுந்த பயத்திலே வீலென் றலறியதே! ... 

மாமி அவசரமாய் மாடிப் படியிறங்கி
சாமியை விளித்தே தாங்கிப் பிடித்தே
குழந்தையைத் தூக்கித்தன் குடக்கழுத் திடையமர்த்தி
அழுகையை நிறுத்தி ஆசுவாசப் படுத்திப்பின்
அன்னையிடம் அவளது அருமருந்தை ஒப்படைத்தாள்
பின்னவள் கண்களில் பீறிடும் கண்ணீரே! ... 

கருப்போ காற்றோ கைக்கொளா தகன்றிடவே
இருப்புக் கரண்டியில் இளஞ்சூடாய் மோர்மாமி
பருகக் கொடுத்ததில் பற்றிய பயம்யாவும்
உருவம் மாய்ந்தே உள்ளம் விலகியது
என்பிள்ளை யோர்நாள் இப்படி யுருண்டுவிழ
முன்நிகழ் சரித்திரம் மூலையில் திரும்பியதே! ... 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.