புதியவை

நல்வாசமுடன் வரவேற்போம் - மீ.விசுவநாதன்மழையே மழையே
நீ எங்களின் நல்ல தோழன்தான்
உன்னை வரவேற்கத்
தெரியாந்த முட்டாள்கள்தான் நாங்கள் !

மாதம் ஒருமுறையேனும்
நீ வந்து
எங்களை வளப்படுத்தினாய் !
அதனால் வாழ்வின்
நாள்களை எப்போதும்
ஆனந்தக் குளப்படுத்தினாய் !
வயல்வெளிகளை
கண்குளிர் பசுமைப் படுத்தினாய் !
ஆறுஎரிகுளம்கிணறுகளுக்கு
நீயே வள்ளலானாய் !
பூமியின்
உயிர்களுக்கு அன்னையாய்
பசிதீர்த்துத் துள்ளலானாய் !


உணவளிக்கும் உன்னையே
நாங்கள் முழுவதும் உண்ண
குணமிழந்து பேராசைப்
பிணந்தின்னும் கழுகானோம் !

மழையரசி உன்னையே  
நாங்கள் கொஞ்சம்
உரசிப் பார்த்தோம் !
மலையரசி கொண்ட
எழில் செம்மரமெல்லாம்
மெல்ல மெல்ல வெட்டி
மொட்டையாக்கி
அரசு செய்தோம் !
நீ வரும் வழிக்கே
கதவடைத்து
மனத்தைக் குட்டையாக்கி
முரசு செய்தோம் !

ஆறு ஏரி குளமெல்லாம்
அடுக்கடுக்காய் மாடி கட்டி
கூறுபோட்டு வீடு வித்தோம் !
தூர்வாரா ஆறாக
நீராகா இடமாகத்  
தோப்பு வைத்தோம் !
கார்மேக வழியெல்லாம்
கழிவான
கரும்புகையால் சூழ வைத்தோம் !
அப்படி
உனக்கே ஒரு ஆப்பு வைத்தோம் !

உன்வரவை
நீ குறைத்துக் கொண்டாய் !
மாதம் ஒருமுறையேனும்
வந்து அமுதிட்ட நீ  
வருடம் ஒருமுறை வருகிறாய் !
உனக்கு நாங்கள்
அயலாகிப் போனாலும்
எங்களின் அழுக்கெடுத்துத்
தூய்மை செய்யப்  
புயலாகி வருகிறாய் !
காலையும் மாலையும்
கொட்டித் தீர்க்கிறாய் !
சாலையும் ஆலையும்
சகதிக் குவியலாய்
சடக்கென மாற்றுறாய் !
புரட்டிப் புரட்டிப்
போட்டு எடுத்து
எங்களை
வரட்டி தட்டுறாய் !
புத்திக்குள்
குளிர்தீ வைக்கிறாய் !

அரசியல் கயவர்கள்
வாக்கு அரிசிக்காய்
நாங்கள்
வாக்குப் பாண்டங்கள்
வடித்திட்ட குயவர்கள் !

கொல்லைப் புறமாய்
வந்த
கொள்ளைக் கூட்டமாய்
இந்த
அரசியல் வாதியுடன்
நாங்களும்
ஐக்கிய மானதால்
கார்மேகமாய்
காலம் இருண்டு கிடக்கிறோம் !
நார்நாராய்
குணங்கள் கிழிந்து கிடக்கிறோம் !

மழைமகளே
நீ நல்லவள் !
எப்போதும் போலவே
இப்போதும் வருகிறாய் !
உன்னை வரவேற்க
எங்கள் சிரமேற்க
ஏனோ நாங்கள்
இன்னும் முயற்சிக்க வில்லை !

இனி தலைவனை நம்பிப்
பயனில்லை !
இனிய தலைவனும்
இங்கில்லை !
தானே தலைவனாய்
ஒழுக்க சீலானாய்
ஊழலுக்குக் காலனாய்
நிமிர்ந்து நின்று
நாங்களே வரவேற்ப்போம்
உன்னை !
மறுமுறை நீவரும் போது
அன்னை மாரியுனக்கு
திருமுறை பாடியே
தீர்ப்போம் எங்கள் தீது !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.