புதியவை

பண்பட்ட மொழியின் செம்மைசால் மலரே இலக்கியமாகும்! – பேராசிரியர் சி.இலக்குவனார்: எழுத்தைப் பற்றியும் சொல்லைப் பற்றியும் விரிவாக உரைத்த ஆசிரியர் தொல்காப்பியனார், எழுத்தால் ஆக்கப்பட்ட சொற்றொடர் கருவியாக அறியப்படும் பொருளைப் பற்றி உரைப்பதுவே அவர் நூலின் மூன்றாம் பகுதியாகும். எழுத்தும் சொல்லும் மொழியைப் பற்றியன. மொழியைத் திருத்தமாக நன்கு பயன்படுத்த மொழி நூலறிவு வேண்டும். திருத்தமுற்ற மொழியின் செம்மைப் பண்பு நிலைத்திருக்க அம்மொழியில் உரையும், பாட்டும் தோன்றுதல்வேண்டும். அவ்வாறு தோன்றும் உரையும் பாட்டுமே இலக்கியம் எனப்பட்டன. பண்பட்ட மொழியின் செம்மைசால் மலரே இலக்கியமாகும். ஒரு மொழிக்கு வளமும், வாழ்வும் அளிப்பது இலக்கியமே. இலக்கியம் தோன்றப் பெறாத மொழி நூற்றாண்டு தோறும் மாறிக்கொண்டே செல்லும்; ஒன்றே பலவாகப் பிரிந்து அழியினும் அழியும். ஆகவே மொழியின் நிலைத்த வாழ்வுக்கு இலக்கியம் பெரிதும் துணை புரியும். அன்றியும் மக்களின் வாழ்வைச் செம்மைப்படுத்துவதும் இலக்கியமேயாகும். இலக்கிய மணமற்ற வாழ்வு இன்பமற்ற வாழ்வாகும். இலக்கியப் படைப்பும் இலக்கியப் பயிற்சியும் மக்கள் வாழ்வுக்கு இன்றியாமையாதன என்பதனை நன்கு தெளிந்த தமிழ்ச் சான்றோர் மொழிநூற் புலமையோடு இலக்கியப் புலமையும் யாவர்க்கும் வேண்டும் என்று கருதி மொழி நூலையும் (Science of Language), இலக்கிய விளக்க நூலையும் (Science of LiteratureScience), ஒன்றாக இணைத்து நன்றாகப் பயிலும் முறையை நானிலத்திற்குக் காட்டினர். ஆசிரியர் தொல்காப்பியரும் அவ்வழியைத் தொடர்ந்து எழுத்தும் சொல்லும் அறிந்தார். இலக்கியமும் தெளிதல் வேண்டுமெனப் பொருள் என்ற பெயரால் இலக்கிய இலக்கணம் கூறினார். பொருள் என்ற பெயர் மிகவும் பொருட் செறிவுடையது.இலக்கியத்தின் பொருள் வாழ்வுவாழ்வின் பொருள் இலக்கியம். இவ்விரண்டு பற்றியும் கூறுவதே பொருட் படலம்(பொருளதிகாரம்)..

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.