புதியவை

நவம்பர் மாதம் நடைபெற்ற கவிதைப் போட்டியில் தொகுதிற்காக தெரிவு செய்யப்பட்ட கவிஞர்களும் கவிதைகளும்

01- மண்ணில் சோகம் மறந்து விடவோ!

வெள்ளம் பெருகி வீடும் நிறைந்தே 
உள்ளம் துயரில் உடைந்து வாடி 
காலச் சதியோ கடவுள் விதியோ 
ஓலக் குமுறல் உடைய வாழ்வோ 
என்று நானும் ஏங்கி வாழும் 
துன்ப நிலைதான் தொடருமோ இன்னும் 
யாரை நோவேன் யானும் வருந்தி 
நீரை இறைத்து நிற்கிறேன் வீட்டில் 
தொட்டிற் குழந்தையும் தொடர்ந்து அழுதே 
கிட்டப் போயும் கீதமி சைக்கவோ 
சமைக்கும் பாண்டம் சரிந்து மிதக்கும், 
அமைதி கொண்டதன் அழகைப் பாடவோ 
இல்லாள் எனக்காய் எடுத்து வைக்கும் 
நல்ல தேநீர் நயமுஞ் சொலவோ 
கண்ணீர் அதனில் கவிதை எழுதி 
மண்ணில் சோகம் மறந்து விடவோ! 

ஞா.நிறோஷ் -பெரியகல்லாறு, மட்டக்களப்பு

02-ஒற்றுமை

தமிழா தமிழா 
காக்கையை பார்
இரைகண்டால் கூவி
அழைக்கும் தன்னினத்தை
மாண்டாலோ
கூடிக்கரைந்து சிறகடித்து
ஒப்பாரி வைத்திடும்
நீயோ உன்
ஆறாமறிவை எங்கு
அடகுவைத்தாய்
காலத்தால் முன்னிட்ட
இனிய தமிழ்மொழி
விளம்பிடும் ஒற்றுமைக்கு
ஓதுவார் தேவையில்லை
ஒன்றுபட வழியிருந்தும்
முரண்பட்டே நாம்
தொலைத்தோம் எம்
தேசத்தை தூரநோக்கி
ஒற்றுமைக்கு காசுபணம்
தேவையில்லை
மாசற்றமனமிருந்தால்
மாட்சிமையாக வந்துதிக்கும்
வளமிக்க ஒற்றுமை
பனம்பாத்தி வெட்டினோம்
அயல்கூடி ஒற்றுமையாய்
வீடு வேய்ந்தோம் ஊர்கூடி
தோசை சுட்டுண்டு
அன்று துரத்தியது
வெள்ளையனை
இந்தியாவின் ஒற்றுமை
இன்று பறிகொடுத்தோம்
எம்நிலத்தை வேற்றுமையால்
சாதி மத பேதமை
சகதிக்குள் நீ சிக்கி
மாண்டொழிந்து
கொண்டிருந்தால்
உன் கனவில்கூட
காணமுடியாது ஒற்றுமை
இல்லாததை நாம் கேட்டால்
யார்தருவார் ஆண்டவனே
இல்லாததை இரந்து
இன்றுநாம் கூடியுள்ளோம்
ஒற்றுமைக்கு
பத்துபத்தாக இணைந்திட்டால்
எம் விரல்கள்
தொக்கிடும் அடம்பன்
கொடிபோல் மிடுக்கான
ஒற்றுமை
இறைவா உன்னிடம்
கேட்கிறேன் மிக இரந்து
இவ்யுகம் முடிவதற்குள்
தமிழர் பக்கம் திரும்பிடு
ஒற்றுமைக்காய்

ப.ஜெயக்கொடி பொலிகை ஜெயா

சுவிஸ்.


03-அம்மா

உசிருக்குள்ள உசிருவச்சு வளர்த்தாளே
உசிரப் பணயம் வச்சு என்னவப் பெத்தாளே
உசிரு போகும் வலியிலும் என்முகம் கண்டுச் சிரிச்சாளே
உடல் சூட்டில் எனை அணைச்சு பாசமுத்தமிட்டாளே
உதிரத்தப் பாலாக்கி உணவாகத் தந்தாளே
உலகத்தை நான்காண உதவியும் செய்தாளே
தவளும் வயதிலே தவறாமப் பாத்தாளே
தவறிநான் விழுந்தாலோ அழுகையிலும் அவளுக்கு பங்கு தானே
தவறுகள் நான்செய்ய செல்லமாய் தடுத்தாளே
தவறுகள் மிகைக்காதுபோக கண்டிப்புடனும் வளர்த்தாளே
சிரிக்கும் பொழுதினில் அகம்குளிர்ந்துச் சிரிப்பாளே
அழுகின்ற பொழுதினில் அரவணைப்பவள் அவள் தானே
உறங்கும் போதோ தலைகோதும் அவள்விரலே
எழுகின்ற போதோ பகல்நிலவாய் அவள் முகமே
படிக்கும் வயதிலோ வீட்டு பாடம் அவளே
கொதிக்கும் காய்ச்சலிலோ முதல்மருத்துவரும் அவளே
எரிந்து உருகும் மெழுகுதிரியும் அவளே
ஓயாது வீசும் கடல் அலையும் அவளே
பகலில் அதிகாலை சூரியனும் அவளே
இரவில் உலாவரும் நிலவும் அவளே
அம்மா என்றச் சொல்லில் அகிலமும் அடங்குமே
உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் கலந்த சொல்லும் அது தானே!!!
எஸ்.பி.மாலிக்


04-முதல் தாய்மைக்கு!
=================

கருவறை இருளில் நீ கடவுளை வைப்பதென்றால்;
கலவியது முடிந்த பின்பும்
கண்மூடி படுத்திரு!

மாதங்கள் தள்ளிச் சென்றால்
மருத்துவரை நாடிடு!
செங்குருதி சிறுநீர் எடுத்து பரிசோதனை செய்திடு!

ஆமென்று முடிவு வந்தால் அற்புதம் மகிழ்ந்திடு;
அத்தானை கட்டியணைத்து அவன் காதில் சொல்லிடு!

வாந்தியும் குமட்டலும் வாட்டிடும் வாடிடாதே;
வருகின்ற தெய்வமெண்ணி வரும்காலம் கடந்திடு!

மலச்சிக்கல் வந்துன்னை மாட்டிடப் பார்த்திடும்;
தளிர் கீரைகள் உண்டு வந்தால் தலை
தெறிக்க ஓடிடும்!

எடையது கூடவேண்டும்
இடையது இளக வேண்டும்
எவ்வுணவு ஏற்கிறதோ மறுக்காமல் உண்ண வேண்டும்!

மார்பது மேலெழும் வயிறது வளர்ந்துவரும்
கருப்பையின் எடையினாலே மூத்திரம் சும்மாய் வரும்
மயங்கிட ஏதுமில்லை;
மனச்சிக்கல் இல்லையென்றால் பயப்படத் தேவையில்லை!

பனிக்குடத்தின் நீரினாலே இரத்தத்தில் இனிப்பு கூடும்;
பாதகம் ஏதுமில்லை
பலமருந்து தீர்த்து விடும்;
பசுந்தளிர் இறங்கி வந்தால் பனி போல ஓடிவிடும்.

மாதங்கள் ஐந்தைத் தாண்டி
மலர்க்கரங்கள் அசைய கண்டால்
குடியிருக்கும் கடவுளோடு அடிக்கடி நீ பேச வேண்டும்!

மடிபிடித்து தும்மவேண்டும்,
மாலையில நடக்க வேண்டும்,
சாய்ந்து நீ படுக்க வேண்டும்,
சரிவிகித உணவு வேண்டும்,
சத்தான தூக்கம் வேண்டும்,
தலைவன் உன்னை அருகழைக்க தள்ளியே படுக்க வேண்டும்!

இன்னிசை கேட்கலாம்
எழுந்து நடமாடலாம்
குழந்தை உளவியல் படிக்கலாம்
குங்குமப் பூ குடிக்கலாம்
குழவிக்கு உன்கையால்
நூலாடைப் பின்னலாம்
பெயர்களை சேகரித்து
மனமகிழ்ந்து இருக்கலாம்.

ஒன்பது திங்கள் தாண்டி
உயிர்வரத்து தொடங்கலாம்
ஒருபோதும் தனித்திருக்க ஆகாதம்மா!
சரியான தருணம் வந்து
இறைவனும் பூமி வந்தழுதால்;
தாயே நீ பட்ட வலி
பரிதிமுன் பகல் பனி,
பெருங்கவனம் வேண்டும் இனி.

பிள்ளைகள் பெற்றுத்தள்ளும்
பெரும் எந்திரம் பெண்களல்ல-அவள்
பூலோகம் செய்யும் சிற்பி
உன் பிள்ளையால் அதை கற்பி!

-ஆவடி ஆதித்யா


05-இறைவா வா

மனிதம் மறையுது
மிருகம் தெரியுது
மீட்டிட உடனே
இறைவா வா

அன்பது அழியுது
ஆயுதம் ஆளுது
அழிவது அணுகுது
இறைவா வா

வெறுப்பே வளருது
வேதனை தருகுது
வேண்டுகிறேன் நான்
இறைவா வா

வறுமை வாழுது
வளமை போகுது
வசந்தம் தொலைந்தது
இறைவா வா

நேசம் போச்சு
நேர்மை போச்சு
நெஞ்சம் நோகுது
இறைவா வா

துவண்டது உடலும்
துடிக்குது மனமும்
துன்பம் சூழுது
இறைவா வா

கவலைகள் கூடுது
கண்ணீர் பெருகுது
காத்திட வேண்டும்
இறைவா வா

சுரேஷ் சீனிவாசன்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.