புதியவை

தடாகத்தை வாழ்த்துவோம் - வா.பாவலர் கருமலைத்தமிழாழன்
குளமென்றும் பொய்கையென்றும் தடாகம் என்றும்
குறிக்கின்ற நீர்நிலையோ ஊரைக் காக்கும்
வளமாகத் தமிழ்மொழியும் கவிதை யிங்கே
வளர்வதற்குத் துணைநின்றித் தடாகம் காக்கும்
உளந்தன்னைத் தாமரையின் அல்லி மொட்டின்
உதடவிழ்த்துக் குளமழகில் ஈர்ப்ப தைப்போல்
தளம்இணையத் தடாகம்நல் கவிதைப் பூக்கள்
தவழவிட்டுக் கருத்தாலே நெஞ்சை ஈர்க்கும் !

திங்களொரு கவிதைக்குத் தலைப்பைத் தந்து
திறமையாகக் கவிஞரினை எழுத வைத்து
சங்கத்தில் அக்கால நக்கீ ரர்தாம்
சலித்துநல்ல கவிதைகளைத் தேர்ந்த போல
எங்கிருந்தும் எதிர்ப்புகுரல் ஒலிக்கா வண்ணம்
எவருடைய பரிந்துரையும் ஏற்றி டாமல்
தங்கத்தின் தரமுறைக்கும் உரைகல் லாக
தகுகவிதை தடாகந்தான் தேர்ந்த ளிக்கும் !

கவியருவி கவித்தீபம் விருத ளித்தும்
கவின்கலையாய் கவினெழியாய் பட்டம் ஈந்தும்
புவிதன்னில் எந்நாடாய் இருந்த போதும்
புலமைக்கே மதிப்பளித்துச் சிறப்பு செய்து
நவில்கின்ற படியிங்கே கவிதை யோடு
நற்கவிஞர் முகத்தினையும் தளத்தி லிட்டுக்
குவிகின்ற பாராட்டில் குளிக்க வைக்கும்
குணத்தொண்டு தடாகத்தைப் போற்று வோமே !

மதச்சாதி அரசியலின் சார்பே யின்றி
மனிதநேயம் ஒற்றுமையை வளர்க்கும் நோக்கில்
பதமாக இளங்கவிஞர் ஊக்கு வித்தும்
பண்பாடு கவின்நூறு கலைகள் தம்மை
இதமாக வளர்க்கின்ற அமைப்பாய் நின்றே
இனியதமிழ் காக்கின்ற தடாகந் தன்னை
முதன்மையான இணையதள அமைப்பாய் ஆக்க
முனைப்போடு செயல்பட்டு வாழ்த்து வோமே !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.