புதியவை

களத்தில் கண்டதும் மனம் நொந்ததும்- கட்டுரை- ஓட்டமாவடி ஷபீ சவூதி அரேபியாஅண்மைக் காலமாக எனது அவதானிப்பில் இக்களத்தில் நான் கண்டு வேதனைப்பட்ட சில விடயங்கள் தொடர்பான என் உள்ளக் கிடக்கையை  உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைகிறேன்.  ஒருவர் ஏதோ ஒரு விடயத்தில் மக்களுடன் தொடர்புபடும்போது அவர் தொடர்பான விமர்சனங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான். அதிலும் மக்களிடம் எதுவித எதிர்பார்ப்புமின்ற அவர்களுடன் நேரடியாக தொடர்புபடும் சமூகசேவை எனப்படும் ஒருபகுதி தான் மற்றவரினால் அதிகம் விமர்சிக்கப்படுவது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. ஏனெனில் மக்களின் நலனில் அக்கறை கொண்டு இலவசமாக வழங்கப்படும் எந்த ஒரு சேவையும் நம் சமூகத்தினால்  இன்றுவரை அதன் பெறுமதி உணரப்படாமலும், மதிக்கப்படாமலும்  இருப்பது வேதைக்குரிய விடயமே. இதில் பொருளாதார ரீதியாக மக்களுக்கு வழங்கும் சேவைகள் மட்டுமல்ல, சமூக விழிப்புணர்வு, மற்றும் வாழ்ந்து மறைந்தோரிலும், வாழ்ந்து கொண்டிருப்போரிலும் சான்றோரோயும், சமூக வழிகாட்டிகளையும் இச்சமூகத்துக்கு கோடிட்டு காட்ட நினைக்கும் ஒரு சிலருக்கும் இது பொருந்தும் .
ஒரு திட்டத்தைப் பெற்றுக்கொடுக்க சம்மந்தப்பட்டவர்கள் எடுக்கும் முயற்சியும், அதன் பின்னணியில் உள்ள கஷ்டங்களும் அவர்கள் சொந்த வாழ்க்கை, குடும்ப பின்னணி என்பவற்றையும் சேர்த்து சொந்த விடயங்களால் ஏற்பட்ட பழிதீர்க்கலுக்காக விமர்சிக்கப்ப்படும்போதும், அத்திட்டங்களின் எச்சங்களை பெறுமதியற்றதாக காணப்படும் போதும் உள்ளத்தினாலும், உணர்வுகளினாலும் அவர்கள் அடையும் வலியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. (ஏனெனில் அவர்கள் மூலமாக ஒன்றை இலவசமாக இச்சமூகத்துக்கு வழங்குபவர்கள் அவ்வளவு இலேசில் வழங்குவதில்லை. ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்லி,ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடவைகள் அவர்களிடம் போய் நிற்க வேண்டும்)  இதற்கு தாக்கு பிடிக்க முடியாத சிலர் மனம்தளர்ந்து இனிமேல் இந்த வேலையே வேண்டாம் என்று வீசிவிட்டு தங்கள் பாதையை மாற்றிக் கொள்கின்றனர். சிலர் அவர்கள் பாதையில் எவ்வளவு பெரிய இடைஞ்சல்கள்   வந்தாலும் தாங்கிக் கொண்டு இறைவனே துணை என்று தொடர்ந்தும் அவர்கள் பாதையில் பயணித்துக்கொண்டே இருகின்றனர். 
மக்களின் வாக்குகளைப் பெற்று அரசியல் அந்தஸ்தில் இருந்து கொண்டு சொத்து சேர்க்கும் ஒரு சில பெரும் பெரும் அரசியல்வாதிகள் பற்றி விவாதிக்கத் தயங்கும் நம் சகோதரர்கள், யாருடைய சொத்திலும் கை வையாது பல இன்னல்களுக்கு மத்தியில் எங்கெங்கோ பெற்றுக் கொண்டு வந்து நம் சமூகத்துக்கு தொண்டு செய்யும் சிலரை மட்டும்  விமர்சிப்பது ஏன் என்று தெரியவில்லை  இச்சமூகத்துக்கு நாம் என்ன செய்தோம். என்பதை அவர்கள் சற்று நினைத்துப் பார்க்க வேண்டும். ஒருவர் தனது சுய முயற்சியினூடாக எங்காவது இருந்து உதவியைப் பெற்று அதை மக்களுக்கு வழங்கும்போது 90% அவர் எடுத்துக் கொண்டு 10% மக்களுக்கு வழங்கினாலும் அதுவும் மக்களுக்கு ஒரு இலாபமே. அவர் முயற்சி செய்திருக்காவிட்டால் அந்த 10% கிடைத்திருக்காதல்லவா? ஆனால் அவர் பட்ட கஷ்டத்திற்கு எத்தனை வீதம் எடுக்கலாம் என்பதும் மீதியை எவ்வாறு பகிர்ந்தளித்தார் என்பதும் அவர் மனசாட்சிக்கும்,இறைவனுக்கும் அவர் சொல்ல வேண்டிய பதில் ஏனெனில் மற்றவர்க்கு அவர் பொய்க் கணக்கையும் காட்டலாம் இல்லையா?
விமர்சனங்களால் விசனமடைந்து இனி இந்த வேலை வேண்டாமே என்று உள்ளம் குமுறும் சகோதரர்களே. ஒரு நொடியில் நீங்கள் எடுக்கும் முடிவு சரியானதா என்று நினைத்துப் பாருங்கள் எதிர்ப்புகளும், சவால்களும் இல்லாத வாழ்விலே இரசனை என்பதுண்டா?  நம்மை நேசிப்பவர்கள் நம்மிலுள்ள நிறையை மட்டுமே காண்பார்கள். எந்தவித கொடுப்பனவுமின்றி நம்மை அணுவணுவாய் அலசி ஆராய்ந்து தன்  புத்திக்கு எட்டியவாறு  கருத்துக்களை வெளியிடும் அவர்கள் மதிக்கப்பட வேண்டிய நண்பர்களே. ஒன்று மட்டும் உங்களுக்கு நினைவிருக்க வேண்டும் வீடு கட்டும் ஒருவர் ஒரு வீட்டுக்குள் நுழையும்போது  அது எப்படிக் கட்டப்பட்டிருக்கிறது என்பதை அவதானிப்பார். ஒரு தச்சன் அதே வீட்டில் நுழையும்போது  அங்குள்ள தளபாடங்கள், மற்றும் ஜன்னல் கதவு என்பன எவ்வாறு செய்யப்பட்டுள்ளன என்பதை அவதானிப்பார். அதே
வீட்டுக்குள் ஒரு கள்வன் நுழைவானாயின் எங்காவது தப்பி ஓடக் கூடிய வழியுண்டா என்றே நோக்குவான். ஆக அவரவர் செய்யும் தொழிலுக்கேற்றவாறுதான் அவரவர் பார்வையும்  இருக்கும். இப்போது தாறுமாறாக குறைகூறுபவர்களையும் விமர்சனம் செய்பவர்களையும் நினைத்துப் பாருங்கள். அவர்கள் எந்தவகை?  ஏன் அப்படி செய்கிறார்கள் என்று
உங்கள் சேவை அளப்பரியது என்று உணருங்கள். நீங்கள் விமர்சனத்துக்குளளாகும் போது நீங்கள் பிரபலமடைந்து விட்டீர்கள் . இந்தச் சமூகம் உங்களை அவதானிக்கிறது, உங்கள் செயற்பாடுகள் பிறருக்கு வழிகாட்டியாய் இருக்கப்போகிறது என்பதை உணருங்கள். உங்களுக்குத்  தெரியாமலே,உங்கள் அவதானிப்புக்கு அப்பாற்பட்டு உங்களையும் மீறி சில  பிழைகள் நடக்கலாம் .தவறுக்கும், மறதிக்குமிடையில் படைக்கப்பட்டவன்தானே மனிதன். ஆனாலும் அது தொடர்ந்து நடக்கா வண்ணம் விமர்சனத்துக்குள்ளாகும் வேளையில் அந்த விமர்சனங்களில் உங்கள் பார்வையைச் செலுத்தி, அதில் குறிப்பிடப்பட்ட ஏதாவது குறைகள் உங்களிடமிருந்தால் திருத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்கள் பாதையில் மனம்தளராது பயணித்துக் கொண்டே இருங்கள். கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பார்கள். அப்போதுதானே  வியாபாரம் சூடு பிடிக்கும். சுடச்சுட ஒளிரும் தங்கம் போல, விமர்சனங்கள்தான் மக்கள் மத்தியில் உங்களை ஒளிரச் செய்யும் என்பது  நிச்சயம். குறைகளை நிவர்த்தி செய்து கொண்டால் நீங்களும் புடம் போட்ட தங்கம்தான்.
விமர்சனம் செய்யும் சகோதரர்களே, சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் இளைஞர்களாயிருந்தால் நீங்கள் இன்னும் வெகு தூரம் பயணிக்க இருக்கிறீர்கள். எத்தனையோ தடைகளைத் தாண்ட இருக்கிறீர்கள்.அப்போது இப்படி ஒரு கட்டம் ஏற்பட்டு நீங்களும் விமர்சனத்துக்குளாகும் வேளையில் உங்கள் மனநிலையை. நீங்கள் நடுத்தர வயதினராகவோ, அல்லது வயதானவராகவோ இருந்தால் நீங்கள் கடந்து வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். நீங்கள் எக்கட்டத்திலும் தவறே செய்யவில்லையா என்பதை. இல்லையென்றால் சந்தர்ப்பங்கள் உங்களுக்கு கிடைக்கவில்லைஎன்றே அர்த்தம். பிறரை குற்றம் கூற ஒரு விரலை நீட்டும்போது மற்ற நான்கு விரல்களும் நம்மை சுட்டிக் காட்டுவதை மறவாதீர்கள்.
இச்சமூகத்தில் உங்களுக்கு அக்கறையிருந்து  குறை கண்டு விமர்சனம் செய்ய வேண்டிய தேவைப்பாடு இருந்தால் முதலில் உண்மையை அறிய முயலுங்கள். குறை காணுமிடத்து நேரடியாக சென்று  அவர்களிடம் கனிவாக எடுத்துக் கூறுங்கள். அதையும் தாண்டி உங்களை யாரென்று காட்டிக் கொள்ளாமல் விமர்சனம் செய்ய வேண்டிஎற்பட்டால்  தயவு செய்து அவர்களது குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை தெருவுக்கு இழுக்காதீர்கள். கட்சி சார்பாகவோ அல்லது தனிப்பட்ட  பகைமைக்காகவோ கண்டவாறு விமர்சிப்பதைத் தவிருங்கள். யார் எங்கிருந்தாலும் நம் சமூகத்துக்கு நல்லது செய்ய இடமளியுங்கள். அதுதான் நீங்கள் இச்சமூகத்துக்கு செய்யும் மிகப்பெரும் சேவை. ஏனெனில் ஏனைய சமூகங்களும் நம்மை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் நம் சமூகத்தைப் பார்த்து எள்ளி  நகையாட எவ்வகையிலும் இடம் கொடாதீர்கள். இறைவன் எல்லோருக்கும் நேர்வழி காட்டுவானாக.
ஆமீன்!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.