புதியவை

காலமும் நானும் - சுமதி ரவிச்சந்திரன்


மணித்துளிகளின்  வினாடி நகர்தலில் '
மனிதர்களின் தினசரி தேடல்கள்...

பசுமை மரங்களுக்கு இடையில் 
பதவிசாக உயர்ந்து நிற்கும்  அடுக்குமாடிகள். 

பறவைகளின் கீச்சுக்குரல் கேட்கும்
பாப்பாவாக நானும்  மாறிப்போனேன்.

வீட்டின்  கொல்லையில் வளர்ந்து நிற்கும் 
விடமுடியாத சர்க்கரைக்கட்டி '  பழமரம் !

பழம் சுவைக்கும் அணிலின் அழகில் பணிவு 
பக்குவமாக பழம் சுவைக்கும் அலாதி!
    
வீட்டின் உள்ளே விதவிதமான வண்ண ஆடைகளுடன் 
வினோதச் சிந்தனைகளுடன் வாழும் மனிதர்களும்,,,, 

தெருநாய்களின்   ஓலங்களில் மனித மனங்களும் 
தெருவில் நடக்கும்போது  பீதியடைகிறது.

புகைவண்டியின் பயணத்தில் மட்டும்தான் 
புகையாகத் தெரியும்  மேகத்தையும் , வானத்தையும் 
ரசிக்கும் பக்குவம் வந்துவிட்டது  நமக்குள்.  

ஏ.சி. வகுப்புப் பெட்டியில் கண்ணாடியில் 
ஏங்கிக்கொண்டே  இயற்கையை செயற்கையின் 
குளிரிலும் அதிகமாகவே ரசிக்கத் தூண்டுகிறது. 

பாண்டி  ஆடியதும்,பட்டாம்பூச்சி பிடித்ததும் 
பாட்டுப்பாடி  சிலையாகிப் போனதும் ...

பரியின் தண்ணீரில் வாய்க்காலின்  சிலிர்ப்பு ...
பக்குவமாக மாட்டை விரட்டும் தாத்தா....

சென்னையின் தார் இடாத சாலைகளில் நடக்கும்போது 
எப்பவாவது வயலுக்கு நடந்து  உண்மையான 
சேறு கலந்த வயலையும்  காண ஏங்குது மனது. 

 மழையில்லை,மனிதர்களின் மனங்களும் மகிழ்ச்சியில்லை
 மனிதவளங்கள் பற்றியெல்லாம் தொலைக்காட்சி விளக்கம். 

ஆனந்தவிகடனில் 'சொல்வனம் ' படிப்பதில் சுகம் 
ஆனந்தவிகடனின் சிறுகதையின் தரமும் நிறைவு. 

குமுதத்தில் 'வைரமுத்துவின் சிறுகதையில்' 
குமுறலாக  அழத் தோன்றியது ஒரு  மனிதனுக்காக !
அரிசி தின்னும் ஒரு மனிதனின்  கதையில் 
அப்படியே உறைந்து கலங்கிப் போனது  மனம்.

அப்படியா ! பசிக்கு அப்படி ஒரு தன்மையா ?
என் கிராமத்து வெட்டியானின் உருவம் 
என் கண்ணெதிரே தோன்றியது .

 கதைக்கெல்லாம் ஒரு மகிமையுண்டு; மறந்தவர்களை 
 கதைக்களத்தில் அசைபோடவைக்கும் தன்மையுண்டு. 

மதுஒழிப்புப் போராட்டத்தைக்  காணும் போதெல்லாம் 
மங்கலாக  'அமிர்தம் ' பருக போட்டிப் போட்ட தேவர்கள் !

காலம் மாறிவிட்டது..... மாரிக்காலமும் குறைந்துவிட்டது.
வீட்டையும் , வளையலையும் இழந்து அழுத முகமும் 
சிரிப்புமாக   ' மெகா சீரியலில் ...... தொலைத்த முகம், 
இன்று வீட்டுக்குள் எல்லா தொலைக்காட்சிகளிலும் .....

உறவுகளின்    எண்ணச்  சிக்கல்களில்   மனசிதைவுகள்...
உண்மையைத் தொலைத்து செயற்கை சிரிப்புக்கள்...

மரங்களும்,  பறவைகளும்,மட்டும் அப்படியே ..........
நட்சத்திரங்களும் , வானமும், மேகமும்..... .  

ஏரிகள் மட்டும் ஏங்கித் தவிக்கின்றன தண்ணீருக்காக 
ஏன்  இப்படியாக மனிதர்கள்  தன் வளம் குறைத்தார்கள்?

தலைமுறைகளின் வேதனைகள் தன்சுகத்தில் கரையும் . 
தங்கள் 'ஆடி' காரிலும், அடுக்குமாடிக் குடியிருப்பிலும் 

தாத்தாக்களின் வேதனை மறைத்து  சிரிக்கும் சிரிப்பு
யாராவது ஒருவருக்காவது கேட்கிறதா  அழுகுரல் ?

ஐம்பது ரூபாய்க்கு வாங்கின  அறுபதுவருட அனுபவ நிலம் 
ஐம்பது லட்சம்  கைமாறிப் போனது அடுக்குமாடி வீட்டிற்கு .

சாமந்திப் பூவின் அழகில்  அள்ளி எடுத்த பிறகுதான் 
சாமந்தியின் மிருதுத் தன்மை இழந்த  இதழ்களில் ஸ்பரிசம் .


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.