புதியவை

அருவியும் கடலும் - இலந்தை


ஆட்டமிடும்  அலைகடலின் நீரைப் பருகி அந்த
ஆதவனின் நற்கருணைத் தீயில் பெருகி
மோட்டுவெளி  வானமுகி லாகத் திரிந்து- பின்னர்
      மோதி இடி மின்னல்மழை யாகப் பிரிந்து
கோட்டுமலை மேல்விழுந்து கொட்டும் அருவி-அந்தக்
       கோலம்கண்டு கூத்தாடும் இன்பம் மருவி
போட்டடிக்கத்  தூவானம் மேலே விரியும் அந்தப்
பூம்புகையில் வானவில்லும் விந்தை புரியும்

மேல்வானில் திருமாலின் வண்ணம் மிளிரும்- கீழே
வீழருவி வெண்ணீற்றின் – கோல,ம் ஒளிரும்
சூல்கொண்ட கருமேகம் சக்தி வடிவம்-– அங்கே
     சூழுமலை  கவிழ்ந்திருக்கும் லிங்கப் படிவம்
கோல்கொண்ட மரநெருக்கம் காற்றில் நடிக்கும் - அந்தக்
     கூத்தாட்டில் இலைகளெலாம் பாட்டுப் படிக்கும்
 நீல்வானச் சூரியனின் வெய்யில் ஒழுகும்- அது
     நீள்தரையில் புள்ளியிட்டுக் கோலம் பழகும்

 வீழருவி  நதியாக வேகம் எடுக்கும் – அது
     மேதினியில் பயிர்வளர நீரைக் கொடுக்கும்
 வாழவைக்கும், வாட்டுகிற தாகம் தணிக்கும்-அது
     மண்ணதனைக் கடலோடு கூடி இணைக்கும்
வீழுகையில் அருவியைப்போல் வீழல் பெருமை= மண்ணில்
     மேலோடும் நதியினைப்போல் வாழல் அருமை
ஆழமுள கடலெனவே அன்பு சிறப்பு-  கொளின்
     ஆகிவரும் மறுமையிலே சொர்க்கத் திறப்பு

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.