புதியவை

மஹிந்த, கோட்டாபய, பொன்சேகாவைக் கொல்ல முயற்சி: வழக்குகள் விசாரிக்கப்பட்டன

மஹிந்த, கோட்டாபய, பொன்சேகாவைக் கொல்ல முயற்சி: வழக்குகள் விசாரிக்கப்பட்டன



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரைக் கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பான மூன்று வழக்குகள் கொழும்பு மேல் நீதிமன்ற விசேட ஆணையாளர் ஐராங்கனி பெரேரா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மூன்று வழக்குகளிலும் கே. ஆதித்தியன் மற்றும் கே.கோகுல்நாத் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மூன்று வழக்குகளிலும் பிரதிவாதிகளுக்கு எதிராகவுள்ள ஒரே சாட்சி, முதலாவது பிரதிவாதியின் குற்ற ஒப்புதல் என பிரதிவாதிகள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி கே.வி. தவராசா சுட்டிக்காட்டினார்.
இதுதவிர, அவர்களுக்கு எதிராக வேறெந்த சாட்சியமும் இல்லையெனவும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக யாழ். மேல் நீதிமன்றத்தில் வேறொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும், அந்த வழக்கின் ஒரே சாட்சி பிரதிவாதியின் குற்ற ஒப்புதலாகும் என்றும் சட்டத்தரணி உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
ஆயினும். யாழ். மேல் நீதிமன்றத்தினால் பிரதிவாதியின் குற்ற ஒப்புதல் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டதாகவும் சட்டத்தரணி கே.வி. தவராசா நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மூன்று வழக்குகளினதும் ஒரே சாட்சியமாக பிரதிவாதியின் குற்ற ஒப்புதல் மாத்திரமே காணப்படுவதால், அந்த குற்ற ஒப்புதலை யாழ். மேல் நீதிமன்றம் நிராகரித்ததன் காரணமாக அவருக்கெதிரான வழக்கைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது உகந்ததா எனவும் சட்டத்தரணி நீதிமன்றத்திடம் வினவினார்.
அத்துடன், யாழ். மேல் நீதிமன்றத் தீர்ப்பின் பிரதியொன்றை கொழும்பு மேல் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதற்கு கால அவகாசம் வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதன் பிரகாரம் இந்த மூன்று வழக்குகளும் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி வரை உயர்நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டன.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.