புதியவை

வெண்கலிப்பா - ரமணிசெவ்வண்ணம் பெருகிடவே திமிராரி திசைவீழும்
எவ்வெண்ணம் இளைப்பாறும் எருதேறி தரிசனத்தில்
ஆலயத்தில் மணியொலிக்க அடியார்கள் புடைசூழ
நாலயத்தில் நமச்சிவாய நடம்! ... 1

[திமிராரி = இருளின் பகைவனாம் சூரியன் (திமிரம் = இருள்);
எவ்வெண்ணம் = எவ்வும் எண்ணம்]

பொழிவெல்லாம் பெருமானின் பெயர்சொல்லி நிலம்வீழ்ந்து
வழிந்தோடக் கரம்குவிந்தே மனமெல்லாம் வரம்நாடும்
அழிமனத்துள் அழியாத அருவுருவாய் அமர்ந்தருளிப்
பழவினையை அறுத்தாளும் பரம்! ... 2

என்னையுமோர் பொருட்டாக இறைவாநீ நினைத்தேதான்
என்வாழ்வில் வளமெல்லாம் எடுத்தாள விளைத்தனையே!
நானுன்னை அதுபோல நலிவின்றி நினைத்தேனோ?
தானாள உழல்வதேயென் தரம்! ... 3

இன்றேனும் விழித்தேனே இனியுன்னை விடுவதில்லை!
நன்றெனநான் நினைத்ததெலாம் நலிவென்றே உணர்ந்தேன்நான்
உடல்தன்னை அடக்கிவைக்கும் உளமருள்வாய் உமையீசா
திடமனத்தால் பணியட்டும் திமிர்! ... 4

உடற்கட்டும் உளந்தன்னில் உறுதுணையாய் உனைக்கொள்ளத்
தடுமாறும் மனந்தன்னில் தழைக்கட்டும் சிவநாமம்!
குருவருளைக் குழைத்தருளிக் குழகனவன் எனையாளும்
திருவருளே இனிவாழ்வில் தினம்! ... 5


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.