புதியவை

நாடகமே உலகம் - இலந்தை
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் நாடகம் ஆடுகிறேன்
       உள்ளே ஒன்று புறத்தே ஒன்று கொண்டே ஆடுகிறேன்
இவ்வித மாக எத்தனை நாள்கள் இன்னும் நடிக்கின்றேன்
       இதுதான் வாழ்க்கை, இதுபோதாதாம், நடிக்கப் படிக்கின்றேன்

                  நாடகமே உலகம்- இங்கே
                     நம்முள் இரண்டு மனிதர் கூத்து
                     நடத்துகிறார் தினமும்- அவர்கள்
                     நம் அறிவும் மனமும்
கனவுக் குள்ளே எத்தனை ஆட்டம் நான்கதா நாயகனே
காதல் வீரம் சோகம் அச்சம் யாவையும் காட்டுவனே
எனது பயணம் தொடங்கிய நாளில் அழுததும் ஓர் ரசமே
இங்கே வாழ்வில் எனையறி யாமல் இயங்கும் நவரசமே!
                                                                                      நாடகமே உலகம்
ஏய்க்கப் பட்டேன் ஏய்த்துப்பார்த்தேன்  வித்தை கூடவில்லை
ஏமாற்றத்தில் கோபம் பொங்கும் காட்ட முடியவிலை
தீய்க்கும் கோபம் வேறோர் பக்கம் திருப்பிக் காட்டுகிறேன்
செல்லா இடத்தில் சினத்தை அடக்கிச் சிரிப்பைக் கூட்டுகிறேன் 
                                                                              
                                                                                நாடகமே உலகம்

காரியம் ஆற்றக் காசுகள் கேட்டுக் கையை நீட்டுகிறார்
கையைக் கனக்கச் செய்யா விடிலோ வாசல் பூட்டுகிறார்
வீரம் படுக்கும், என்மனத்துள்ளே வேதனை கூட்டுகிறேன்
வேலை நடக்கச் சிரித்துக்கொண்டே காசை நீட்டுகிறேன்     
                                                                                      நாடகமே  உலகம்
எழுகிற உணர்ச்சி தன்னை மாற்றி நாடகம் ஆடுகிறேன்
என்றன் தேகம் இயக்கம் மாற்றி நடிக்க வாடுகிறேன்
பழுதுகள் சேர்க்கும் பயணப் பாதை எல்லாம் நாடகமே
பத்திரமாகக் காக்கிற தென்றன் கவிதை ஊடகமே!          
                                                                                           நாடகமே உலகம்
வெளியில் காட்ட முடியா வற்றைக் கவியில் காட்டுகிறேன்
விதவித மாக ரசமொவ்வொன்றின் உணர்ச்சி ஊட்டுகிறேன்
ஒளியே  அன்றி இருளே இல்லை ஒவ்வொன்றும் விருந்து
உண்மை, உண்மை, என்னுடம் பிற்கும் அதுதான் நன்மருந்து   
                                                                                       நாடகமே உலகம்         

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.