புதியவை

பரிசு பெற்ற கவிதை கனவுகளும் நனவாகும் பாவலர் கருமலைத்தமிழாழன்


தமிழ்நாடு  அரசின்  தமிழ்  இணையக் கல்விக் கழகமும்,  புதுக்கோட்டை  கணினித் தமிழ்ச்சங்கமும்  இணைந்து  நடத்திய  உலகத் தமிழ்  வலைப்பதிவர்  திருவிழாவை  முன்னிட்டு  அறிவித்த  கட்டுரை, புதுக்கவிதை,  மரபுக்கவிதைப்  போட்டிகளில்  இளைய  சமூகத்திற்கு  நம்பிக்கை  ஊட்டும்  கருத்தில்    அமைய வேண்டும்  என்று  அறிவித்த மரபுக்கவிதைப்  போட்டியில்  பரிசு  பெற்ற  கவிதை.  புதுக்கோட்டையில்  நடைபெற்ற விழாவில்  பரிசு  வழங்கப்பட்டது.
..................................................................................................................................

விசிறியினை    அசைக்காமல்   காற்று   வாரா
வியர்வையினைச்   சிந்தாமல்    உயர்வு    வாரா
நசிந்தநிலை    மாறுதற்குக்    கடின    மாக
நாமுழைக்க    முனையாமல்    வறுமை    போகா
பசிக்கின்ற   வயிற்றைப்போல்    இடைவி    டாமல்
படும்முயற்சி    செய்யாமல்    வெற்றி    சேரா
வசியமாகும்    எல்லாமும்    தன்னம்    பிக்கை
வளர்த்துநாமும்    துணிவோடு    செயல்கள்    செய்தால் !

எதையும்நாம்    சாதிக்க    முடியும்  என்ற
எண்ணத்தை    நெஞ்சத்தில்    நிறைத்துக்    கொண்டால்
புதைகுழியின்    சேற்றுக்குள்    விதைத்தால்    கூடப்
பூத்துவரும்    தாமரைபோல்    எழுவோம்    மேலே
கதைகளிலே    வருவதைப்போல்    நாளும்    நாமும்
கனவுகளில்    காண்கின்ற    இன்ப    வாழ்வை
உதைபந்து    போலெழுந்தே    சோர்ந்தி   டாமல்
உழைக்கின்ற   போதெல்லாம்    நனவாய்க்   காண்போம் !

எதுதேவை   எனமனத்தில்   முடிவு   செய்தே
ஏற்றவழி   அறிவாலே   வகுத்துக்    கொண்டு
மெதுவாகக்    கரங்களிலே    நாமு   ழைத்தால்
மேன்மையான    வெற்றிவந்து   காலில்    வீழும்
செதுக்குகின்ற    உளியாலே    சிதறும்    கல்லாய்
செயல்களிலே    தன்னலத்தை   உதறி   விட்டுப்
பொதுநலத்தில்   சமூகத்தை    உயர்த்த    வந்தால்
பொலிகின்ற   சிற்பம்போல்   புகழும்   சேரும் !

கவிதைப்போட்டி தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகமும், புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்திய உலகத் தமிழ் வலைப்பதிவர் திருவிழாவை முன்னிட்டு அறிவித்த கட்டுரை, புதுக்கவிதை, மரபுக்கவிதைப் போட்டிகளில் மரபுக்கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற பாவலர் கருமலைத்தமிழாழன் அவர்களுக்கு 11 – 10 – 2015 அன்று புதுக்கோட்டையில் அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் தலைமையிலும், இந்தியா விக்கி மீடியா திட்ட இயக்குநர் முன்னிலையிலும் நடைபெற்ற விழாவில் தமிழ் இணையக் கல்விக்கழக உதவி இயக்குநர் முனைவர் மா. தமிழ்ப்பரிதி அவர்கள் விருதும், பரிசுத்தொகையும் வழங்கினார்.


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.