புதியவை

அரசியல் அமைப்பு மாற்றமும் முஸ்லிம்களுடைய அபிலாசைகளும்அட்டாளைச்சேனை – பர்சான் எஸ் முஹம்மட்,.இவ்வாரம் அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கான ஒன்றுகூடலின் போது சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.ரனூஸ் அவர்கள் போராளிகளுக்கு ஆற்றிய சிறப்புரை தொகுத்து வழங்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது இந்த நாட்டிலே இருக்கின்ற ஏனைய அரசியல் கட்சிகளை போன்ற ஒரு கட்சியாக உருவாக்கப்படவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினுடைய வரலாறு என்பது இந்த நாட்டிலே அரசியல் முகவரியற்று, அரசியல் தனித்துவமற்று வாழ்ந்த இலங்கை முஸ்லிம்களை அரசியல் அடையாளம் உள்ளவர்களாகவும், அரசியல் தனித்துவம் உள்ளவர்களாகவும் மாற்றுவதற்காகத்தான் இந்த அரசியல் இயக்கம் உருவாக்கப்பட்டது என்பதை நாங்கள் எல்லோரும் என்று கொண்டு இருக்கின்றோம்.
அமைச்சுப் பதவிகளுக்காகவோ அல்லது வேறு ஏதேனும் அரச சலுகைகளை பெறுவதற்காகவோ இந்த கட்சி உருவாக்கப்படவில்லை. நமது கட்சிக்கென்று அடிப்படையான கொள்கைகள் இருக்கின்றது. நமது கட்சிக்கென்று ஒரு வரலாறு, பாரம்பரியம் இருக்கின்றது. நாங்கள் எல்லோரும் கலிமா சொன்ன முஸ்லிம்கள். ஏகத்துவத்தை வலியுறுத்துபவர்கள். அவைகளை தொடர்ந்தும் பேணுகின்ற வகையிலேதான் எங்களுடைய சகல அமைப்புக்களும் சகல இயக்கங்களும் அமைய வேண்டும் என்பதிலே நாங்கள் நம்பிக்கை உள்ளவர்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் இந்த நாட்டிலே உதயமானதன் பின்னர்தான் இந்த நாட்டிலே இலங்கை முஸ்லிம்கள் என்றால் யாரென்று இந்த நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் தெரிய வந்தது. அன்று சிங்கள பெரும்பான்மை வாதத்தாலும், தமிழ் இனவாதத்தினாலும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இலங்கை முஸ்லிம்கள் தங்களுக்கான ஒரு அரசியல் அடையாளத்தை பற்றி சிந்தித்த பொழுதுதான் முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற அந்த இயக்கத்திற்கான தேவை அந்த காலத்திலே உருவானது.
அவ்வாறு மாமனிதர் அஷ்ரப் அவர்களால் இந்த கட்சி உருவாக்கப்பட்ட பொழுது இந்த கட்சி எதிர்கொண்ட சவால்கள் மிகவும் சாமான்யமான விடயமே அல்ல. உயிர் இழப்புக்கள், கடத்தல்கள் பல்வேறுவிதமான மரண அச்சுறுத்தல்களைத் தாண்டித்தான் இந்த இயக்கம் தன்னுடைய வளர்ச்சியை கண்டது. இந்த பயணப் பாதையிலே நாங்கள் பல மாகாண சபை உறுப்பினர்களுடைய மரணத்தை எதிர்கொண்டோம்.
எனக்கு மிகவும் மனதை உறுத்துகின்ற விடயம் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையினுடைய முன்னால் உறுப்பினர் சம்மாந்துறையை சேர்ந்த சகோதரர் அஷ்ஷஹீத் மன்சூர் அவர்களுடைய ஜனாசாவை கூட எங்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அதேமாதிரி அக்கரைபற்றிலே முன்னால் வடக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அலி உதுமான் அவர்களை நாங்கள் துப்பாக்கிக்கு பலி கொடுத்தோம்.
அது போன்று கிழக்கின் ஒவ்வொரு முஸ்லிம் கிராமங்களிலும் நாங்கள் இந்த முஸ்லிம் காங்கிரசை உருவாக்கிய ஒரே ஒரு காரணத்திற்காக எங்களுடைய பெறுமதியான தலைவர்களை நாங்கள் பறிகொடுத்தோம். இறுதியில் நமது சமூகத்தினுடைய மிகப்பெரும் அரசியல் அடையாளம் அஷ்ஷஹீத் எம்.எச்.எம்.அஷ்ரப் அவரையும் நாங்கள் பறிகொடுத்தோம்.
அவ்வாறு நாங்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வளர்த்து வந்த இந்த கட்சியானது பல்வேறு சாதனைகளை இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு செய்தது மாமனிதர் அஷரப் அவர்களுடைய காலத்திலேயே. இந்த இயக்கம் முஸ்லிம் சமூகத்தினுடைய அடையாளங்கள், அவர்களுடைய அபிவிருத்திகள் என்று எந்த விடயத்திலும் சளைத்தது கிடையாது.
அதை பொறுத்து கொள்ள முடியாத இனவாதமும் பேரினவாதமும் அவரை கொலை செய்ததன் பின்னால் இந்த கட்சியினுடைய தலைமை பொறுப்பை எடுத்துக் கொண்ட எங்களுடைய கௌரவத்திற்குரிய தலைவர் அல்ஹாஜ் அப்துல் ரவூப் ஹக்கீம் அவர்கள் இந்த கட்சியை பாதுகாப்பதிலே பல்வேறு சிக்கல்களை சவால்களை எதிர்கொண்டார்கள்.
சுமார் 15-20 வருட காலம் இந்த கட்சியை பாதுகாப்பதிலே இந்த கட்சியினுடைய தனித்துவத்தினை நிலை நாட்டுவதிலே இந்த கட்சியை இந்த சமூகத்திற்காக இன்னும் தயார் படுத்தி வருவதிலே அவர் எதிர்கொண்ட சவால்கள் மாமனிதர் அஷ்ரப் அவர்கள் காலத்திலேயே அவர் எதிர்கொண்ட சவால்களை விட மிகவும் கனதியான சவாலை தற்போதைய தலைவர் அப்துல் ரவூப் ஹக்கீம் அவர்கள் எதிர்கொண்டு இந்த கட்சியை வழிநடாத்தி வருகிறார்.
இன்று புதிய அரசியல் அமைப்பு மாற்றம் சமபந்தமாக இந்த முழுநாடும் பேசிக் கொண்டிருக்கின்றது. சிங்கள உயர்குழாத்தினர், புத்திஜீவிகள், அரசியல் வாதிகள், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் எல்லாமே இன்று புதிய அரசியல் அமைப்பு மாற்றம் சம்பந்தமாக பேசிக்கொண்டிருக்கின்றது. தமிழ் தரப்பும் தங்களுடைய பிரச்சினைகளை தங்களுக்கு வேண்டிய தீர்வுகளை சர்வதேச மயபடுத்தி அவர்களும் இன்று பல்வேறு முனைப்புகளிலே புதிய அரசியல் அமைப்பு ஒன்றை அவர்களுக்கு சாதகமாக அல்லது அவர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வை உள்ளடக்கிய விதமாக அவர்கள் எதிர்பார்கிறார்கள்.
ஒரு புதிய அரசியல் அமைப்பு மாற்றம் சம்பந்தமாக இரண்டு சமூகங்களும் மிகவும் தெளிவாக பேசிகொன்டிருக்கின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் தலைவர் மட்டத்திலே அது சம்பந்தமான மிகத்தெளிவான நிலைபாட்டில் உள்ளது.
இன்று போராளிகளாகிய நாங்கள் இந்த முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கின்ற பிரச்சினைகள், அவர்கள் எதிர்கொள்கின்ற சவால்கள், அவர்களுடைய வாழ்வியல், பொருளாதார, சமூக, கலாச்சார பிரச்சினைகள் இவைகளுக்கான தீர்வை புதிய அரசியல் அமைப்பு மூலம் உறுதிபடுத்த முடியுமா?? புதிய அரசியல் அமைப்பிலே இதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்க முடியுமா என்கின்ற விடயத்திலே போதுமான கருத்தாடல்கள் இல்லை என்பது என்னுடைய அபிப்பிராயமாகும்.
இந்த கவலையை நான் ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் 1987களிலே வட்டமேசை மாநாடுகள் இனப்பிரச்சினைக்கு தீர்வாக வருகின்ற பொழுது முஸ்லிம் சமூகம் சார்பாக பேசுவதற்கு யாரும் முன்வரவில்லை. அது மாத்திரம் அல்லாமல் முஸ்லிம் சமூகம் சம்பந்தமாக பேசுவதற்கு எந்த ஒரு அமைப்பும் இருக்கவில்லை. அதனால் எங்களுக்கான ஒரு தனியான அடையாளம் சார்ந்த அங்கீகாரம் தருவதற்கு அந்த காலத்திலேயே ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்களால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற சமாதான பேச்சுக்களின் போது எங்களுக்கு தனித்தரப்பு அங்கீகாரம் அரசாலும் வழங்கப்படவில்லை. தமிழ் மக்களாலும் வழங்கப்படவில்லை. அதற்குப்பிறகு வந்த சுனாமி இடைகால பொதுக்கட்டமைப்பின் போதும் எங்களுக்கான தனியான அங்கீகாரம் தரப்படவில்லை.
ஆக நாங்கள் பல்வேறு சந்தர்பங்களிலே இனப்பிரச்சினைக்கு தீர்வு வருகின்ற பொழுது இதே போன்றுதான் இலங்கை இந்திய உடன்படிக்கையின் பொழுதும் எங்களை ஒரு சமூகமாகவே அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில் நாங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற இயக்கத்தை உருவாக்கியதே எங்களுடைய அடையாளத்தை வலியுறுத்துவதற்காகத்தான்.
முப்பது வருட காலம் இந்த மாபெரும் இயக்கத்தை உங்களை போன்ற போராளிகளுடைய தியாகத்தால் வளர்த்து எடுத்திருக்கிறோம். இப்பொழுதும் நாங்கள் முஸ்லிம் சமூகத்தினுடைய பிரச்சினை பற்றி பேசவில்லை என்றால் இப்பொழுதும் எங்களுக்கு அந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் எங்களுடைய அரசியல் ஒரு விழலுக்கு இறைத்த நீர் போல ஆகிவிட்டது என்ற கவலை எங்களுக்கு ஏற்பட்டுவிடும்
எனவேதான் இன்று நாங்கள் முஸ்லிம் சமூகத்தினுடைய பிரச்சினையை பற்றி அதிகம் பேசவேண்டிய காலமாக இதனை நான் பார்கின்றேன். இந்த காலத்தில் நாங்கள் பேசாவிட்டால் இந்த காலத்திலேயே அந்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தாவிட்டால் நாங்கள் இந்த அரசியல் அமைப்பு நிறைவேறியதன் பின்னர் நாங்கள் அதைப்பற்றி பேசி பிரயோசனம் இல்லை. இதைதான் தமிழ் தலைமைகளும் கடந்த காலத்திலேயே செய்தது.
அரசியல் அமைப்பு மாற்றம் என்று வருகின்ற பொழுது பிரிவினை வாத கோரிக்கையினை கொண்டு தனிநாடு கோரியவர்கள் அந்த கோரிக்கையிலே முற்றுமுழுதாக நூறு வீதம் தோல்வி அடைந்ததன் பின்னர் இன்று அரசியல் அமைப்பு மாற்றத்தை பற்றி பேசுகின்றார்கள். அதில் பங்கெடுக்க வருகிறார்கள். ஆனால் நாங்கள் அன்றே அரசியல் மயப்படுத்தபட்டவர்கள். தமிழர்கள் ஆயுத போராட்டத்தை தூக்குகின்ற பொழுது நாங்கள் அரசியல் ரீதியான ஜனநாயாக நீரோட்டத்திலே இணைந்தவர்கள்.
எனவே அவர்களைவிட நாங்கள் இன்று பன்பட்டவர்களாக இருக்க வேண்டும். அவர்களுடைய அரசியலைவிட எங்களுடைய அரசியல் தெளிவானது. தீர்க்க தரிசனமானது. எனவேதான் நமது சமூகத்திலே நமது பிரச்சினை சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய விண்ணப்பம் ஆகும்.
நமது பொருளாதாரம் பற்றிய பிரச்சினை இருக்கின்றது. நமது அரசியல் அடையாளம் பற்றிய பிரச்சினை இருக்கின்றது. நமது மத சுதந்திரம் பற்றிய பிரச்சினை இருக்கின்றது. நமது நிலபுலங்கள் பற்றிய பிரச்சினைகள் இருக்கின்றது. இவைகள் எல்லாவற்றையும் அரசியல் அமைப்பு ரீதியாக உறுதிபடுத்துவது என்பது சாத்தியம் இல்லைதான். இருந்தாலும் உறுதிபடுத்தக் கூடிய நாங்கள் உறுதிபடுத்தியே ஆகவேண்டும் என்பதுதான் என்னுடைய விண்ணப்பம்.
அதாவது அரசியல் அமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட வேண்டிய பாதுகாக்கப்பட வேண்டிய விடயங்களை நாங்கள் உறுதிபடுத்தியாக வேண்டும். அது மாத்திரம் அல்லாது பிறருடைய நலன்களுக்காக கொண்டு வரப்படுகின்ற ஏற்பாடுகள் எங்களுடைய நலன்களை பாதுகாக்கிறதா என்பதை பார்த்து அதற்கும் நாங்கள் தீர்வுகள் காணவேண்டும். ஆக சுருக்கமாக தற்போது நாங்கள் பேசவேண்டிய மிக முக்கிய கருப்பொருள் அரசியல் அமைப்பு மாற்றமும் முஸ்லிம்களுடைய அபிலாசைகளும் என்பதுமே ஆகும்.


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.