புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு சர்வதேச மட்டத்தில் நடத்திய கவிதைப் போட்டியில் பாராட்டுக்களைப் பெரும் கவிஞர்கள்


01 -மனிதாபிமானம்
சென்னை செழுச்சிச்சி
சிங்காரம்மா மாறுனுச்சி
பெருவெள்ளம் நீ வந்ததாலே
சென்னை அழிஞ்சிடுச்சி--எங்கள
சிரமப்பட வச்சிடுச்சி
'மனிதாபிமானம்' நிறைந்த
மனிதர்களால் எங்களோட
சிரமங்கள் போயிடுச்சி !
ஆதார் அட்டைக்கூட
சேதாரமாயிடுச்சி
வாக்காளர் அட்டைக்கூட
வண்டல் மண்ணில் போயிடுச்சி
பெருவெள்ளம் நீ வந்ததாலே
பட்ட(ய )மும் பாழாச்சி --எங்கள
பரிதவிக்கவச்சிடுச்சி
'மனிதாபிமானம்' நிறைந்த
மனிதர்களால் எங்களோட
அடையாளங்கள் கெடச்சிடுச்சி
புதுவாழ்க்கை தொடங்கிடுச்சி !
உயர்ந்து நின்ன (லையிட்டு )மரம்
ஒளிதந்து வாழ்ந்த மரம்
ராத்திரியில் தூங்காமல்
எங்கள காவல் காத்தமரம்
பெருவெள்ளம் நீ வந்ததாலே
நின்னமரம் வீழ்ந்துடுச்சி
ஊரே இருட்டிடுச்சி
'முள்ளிவாய்க்கால்' கதையாயிடுச்சி
'மனிதாபிமானம்' நிறைந்த
மனிதர்களால் எங்களுக்கு
உதவிகள் பலகெடச்சிடுச்சி
ஒளிவாழ்வு உதயமாச்சி !
அப்பன் பாட்டன் கட்டிவச்ச
அழகான ம(கு )ச்சி வீடு
மாடுகண்ணு வாழ்ந்திடவே
மற்றதொரு கொட்டா வீடு
பெருவெள்ளம் நீ வந்ததாலே
வீடுகலெல்லாம் தரைமட்டமாயிடுச்சி
எங்களுக்கு தார்சாலை வீடாச்சி
'மனிதாபிமானம்' நிறைந்த
மனிதர்களால் மாற்று வீடு கெடச்சிடுச்சி
மனவேதனை போயிடுச்சி !
சேறே வீடாச்சி
சேத்தபொருள் வீனாச்சி
பெருவெள்ளம் நீ வந்ததாலே
எங்களுக்கு பசியே நோயாச்சி
அரிசிசோறு பஞ்சமாச்சி
'மனிதாபிமானம்' நிறைந்த
மனிதர்களால் பசித்தவயிறு நெரஞ்சிடுச்சி
பால்பாக்கெட்டும் கெடச்சிடுச்சி --எங்களுக்கு
புதுவாழ்வும் ஆரம்பமாயிடுச்சி !
குரல் நதி 

02 மனிதாபிமானம்
ஏன் பிறந்தோமிந்த பூமிதனில்..! - இங்கே
நாமிழந்தோமே..! மனித நேயமதை..
பார் முழுதும் மனிதன் வாழுகிறான் - அதில்
யார் மனிதமென்று தேடியோடுகிறான்.
தான் வாழ்வதற்கே! பூமியாளுகிறான்-அங்கே
தன்னையே! கடவுளாய் எண்ணுகிறான்
சுயநலத்தை தன்னில் விதைக்கிறான்-அவன்
மனிதநேயத்தை மண்ணில் புதைக்கிறான்.
ஏழையைக் கண்டு வெறுக்கிறான் -அவனிடம்
ஏந்தும் கரம்கண்டால் முறைக்கிறான்.
விதவைக்கு அவப்பெயர் சூட்டுகிறான் -அவள்
வாழ்க்கையை தீயிட்டு எரிக்கிறான்.
ஊனத்தைக்கண்டு ஒதுங்குகிறான் -அதை
ஊர் முழுக்கச் சொல்லி சிரிக்கிறான்.
மானத்தை மறைக்க மறுக்கிறான் -அதை
முகநூலில் பதிவேற்றி மகிழ்கிறான்.
மனிதாபிமானத்தை இழக்கிறான் -அவன்
மனம்போன போக்கிலே..! வாழ்கிறான்
நாகரீகமென்றுசொல்லி நடிக்கிறான் -இந்த
நாட்டையே..! நாறிப்போக வைக்கிறான்...
எத்தனை துன்பங்கள் மண்ணிலே! - அது
அத்தனைக்கும் காரணம் உன்னிலே!
என்னம் சிறக்கும்போது தன்னிலே! - நாளை
மனிதம் பிறந்துவரும் கண் முன்னிலே..!
உள்ளங்களி ணைந்து மனிதம் பிறக்கட்டும்
அநியாயம் அழிந்து அகிம்சை மலரட்டும்
அன்பிலே! கலந்து நாம் சிரிக்க..மண்ணிலே!
பிறக்க வைப்போம் "மனிதாபிமானத்தை"
அபு நசீர் (தோப்பூர்)


03மனிதாபிமானம்
ஆத்தா வைத்த சோற்றை தின்று
அல்லும் பகலும் குரைத்த நாயை
அறுத்துப் போட்டது ஆயுதப்படை
அங்கு கண்டேன் மனிதாபிமானம்
கரண்டுக்கம்பியில் பட்டு
சுறுண்டு விழுந்த காக்கையை
சுற்றி வட்டம் போட்டது
காக்கைகள் எல்லாம்
அங்கு கண்டேன் மனிதாபிமானம்
கவிழ்ந்த படகில் இறந்த குழந்தை
கடல் கரையோரம் மிதப்பதை
கண்டு கவிதை பாடியது
மனித கூட்டம் அங்கு
கண்டேன் மனிதாபிமானம்
விளைந்த பயிரை அறுப்பது போல
உயர்ந்த உயிர்களின் கழுத்தறுத்து
பருந்துக்குப் போட்டார்
அங்கு கண்டேன் மனிதாபிமானம்
நன்றியை நட்போடு நடைபோடும்
நாயின் வாயில் ஈனம் என்று
வீசிய சிசுவை கௌவிவர
அங்குதான் கண்டேன் மனிதாபிமானம்
அன்சார்சமூன்


மனிதாபிமானம்
================
( பா வகை-அறுசீர் விருத்தம்.)
கனிதரும் சோலை இல்லை
கனிமொழி பேச வில்லை
முனிவரைப் போன்று அல்ல
முயன்றுநம் நாட்டைக் காத்து
பனியினில் நாளும் வாடி
பணியினைப் பார்க்கும் வீரர்
மனிதரில் போற்றும் நல்ல
மனிதநே யமாந்த ரன்றோ.
இடர்தரும் காட்டில் நின்று
இயந்திர பொறிகள் பெற்று
சுடர்தரும் ஔியைப் போன்று
சுதந்திரம் வேண்டும் என்று
அடர்நிற ஆடைப் பூண்டு
ஆவியை அளிக்கச் சென்று
படர்க்கொடித் துயரம் போல்
படர்ந்தவர் வேறு யாரோ?
பெருமழை பெய்து இங்கே
பேரிடர் உற்ற போது
தருநிழல் குளிர்ச்சி போன்று
தன்கர முதவி தந்து
வருமிடர் வாங்கிக் கொண்டு
வாசலில் தொண்டு செய்து
கருமமேக் கண்ணாய்க் கொண்ட
காவலர் வேறு யாரோ?
மனிதமே இல்லை யென்று
மனிதரேச் சொல்லி சொல்லி
புனிதரைப் போல தன்னை
போற்றியே புகழ்ந்து கொண்டு
இனிவரும் காலம் யாவும்
எப்படி யாகு மென்பார்
முனிவதை விட்டு விட்டு
முயல்வதே மனிதம் அன்றோ!
-சாமி.சுரேஷ்


மனிதாபிமானம்
☆☆☆☆▪▪☆☆☆
கறை படிந்த எம் மண்ணில்
உணவில்லா திண்டாட்டம்
அரசியலின் உயர்வடைவால்
பொருட்களின் விலையேற்றம்
உடையில்லா உறவுகள்
உறக்கம் தோலைத்து நெருப்பருகே
பசியால் வாடினாலும்
வாய் திறவா ஜீவன்களாய்
கணபதிக்கு காணிக்கையிடுபவர்கள்
கரம் ஏந்திடும் மனிதனுக்கு 
இட மறுப்பதேனோ.?
நடித்தவன் படத்துக்கு 
பால் ஊற்றுபவர்கள்
பசித்தவன் வயிற்றுக்கு 
ஊற்ற மறுப்பதேனோ.?
நாகரிகம் எனும் போர்வையில்
நா சுவைக்க உண்டுவிட்டு
தெருத்தெருவாய் சுற்றிடும்
மனிதமில்லா மிருகங்களே.!
நாடுகடந்து போனாலும்
நாகரிகம் மாறினாலும்
மனிதாபிமானம் இல்லாமல்
நீ வாழ்ந்தால் 
நாய் கூட மதிக்காதே உன்னை.
புரிந்துகொள் மனிதா
மாருதிக் காரும் மாடிவீடும்
பாடையிலே போகும்போது வந்திடுமா.?
உன் உயிரில்லா உடலதை
உறவுடன் சேர்ந்து சுமக்க
நல் உளம்கொண்ட மனிதமே வேண்டும்.
காவலூர் அகிலன் கிளிநொச்சி


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.