புதியவை

ஐயோ தமிழா அடிமுட்டாள் ஆகாதே - வன்னியூர் செந்தூரன்


ஆதியில் பூமியது
அகரத்தின் ஒருதேசம்
நீண்டுபோன சூழ்ச்சியிலே
சிங்கத்தின் வாயோரம்
சிறைபட்ட பல சோகம்.
மாகாணப் பிரிப்பாக்கி
மண்ணளவும் சுருங்கமாம்.
வந்தேறிக்கு ஏமும்
வண்ணத்தமிழுக்கு இரண்டும்
கண்ணை மூடியபடி
காவலெல்லை நகர்ந்ததாம்.
வெள்ளையனுடன் கள்ளமாய்
கட்டமிட்டன யாப்புக்கள்.
வடக்குக் கிழக்கெங்கும்
வன்முறைக் குடியேற்றம்
வழுவைத் தகர்த்தெறிந்த
ஒரு வல்லமைத் திரட்டு
வல்வைக் கந்தனவன்
செம்மொழி காக்கவந்தான்.
வன்முறை நிலப்பறிப்பு
நிலையிழந்து போனதுண்மை
வளமான தமிழ் அரசு
பலம் பெற்று எழுந்ததுண்மை.
அவனொரு வீரன்
அறிவிலே ஞானி
மூன்று தசாப்த
முத்தமிழ்ச் சரித்திரம்
வல்லரசுகளுக்கே
கிலிதந்த சிம்மாசனம்
சதியாலே மெளனித்த
சங்கமத்துச் சாரீரம்
இன்று மெளனமா கனவா
இருண்ட மயானப் பொழுதா
இராணுவத்தின் காவலரண்
இலட்சத்தையும் தாண்டி
ஆண்ட எம் கானகக் கரைகளிலே
அமைதியான ஆக்கிரமிப்போ..?
ஆறுதல் வாக்கியமுரைப்பாய்
அரசியல் மேதாவிகள் பல்லிளிப்பு
அட முட்டாள்களே
வரலாற்றை கொஞ்சம் திருப்பும்.
தமிழர் தேசமொன்று
தார்மீகமாய் இங்குண்டு என
உரத்து உரைக்க வேண்டிய
தத்தளிக்கும் காலமடா இது.
அரண்மனையில் கூட்டாட்சியோ..?
ஐயா அழிவான் தமிழன்.
அடித்துப் பறிக்கப் பார்த்தனர் அன்று– உம்மை
வளைத்துப் பறிக்கிறார் பரப்பளவை இன்று.
தூரநோக்கற்று எமை பாதாளத்தில்
ஆழக்குழிவரைக்கும் தள்ளாதீர்.
தமிழில் கீதம் பாடினால்
விடுதலை ஆகுமா எமக்கு..?
கண்கெட்ட தனமாக எம்மை
காரிருட்டில் தள்ளாதீர்
அத்தனை தியாகத்திற்கும்
விலை ஒன்று உள்ளதா..?
என்றோ ஓர் நாள்
தர்மத் தியாகம் தலை நிமிர்த்தும்..
கனவிலேனும் மறக்காதீர்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.