புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு சர்வதேச மட்டத்தில் ஜனவரி மாதம் நடத்திய கவிதைப் போட்டியில் சிறந்த கவிதையாக தெரிவு செய்யப்பட்டு சிறப்புக் கவிதைக்கான 'கவினெ ழி பட்டத்தைப் பெறுகின்றார் மரபு மாமணி,பாவலர் மணிமேகலைகுப்புசாமி,

 மனித நேயம்!!

பக்கத்து வீட்டினிலே இதய நோயால்
பாதிக்கப் பட்டிருக்கும் குழந்தை யாலே
விக்கித்து வருந்துகின்ற பெற்றோர் நெஞ்சில்
வீசுகின்ற சாமரமாம் பரிவுச் சொற்கள்.

தக்கபடி அதையளிக்க நேர மின்றித்
தம்மலுவல் பார்ப்பதற்கே ஓடும் காலச்
சிக்கலிலும், வெளிக்கிளம்பும் போதில் பார்வை
சிறிதளவே சிந்திடல்தான் மனித நேயம்.

கூவுகின்ற பறவைதரும் ஒலியால் அஃது
கொண்டிருக்கும் பெயரறிவோம், மாந்தர் நாவில்
மேவுகின்ற பேச்சின்றிச் செய்கை ஒன்றே
விளைந்துள்ள அவர்பண்பைக் காட்டும் அன்றோ!

பாவுற்ற கஞ்சியினால் மிடுக்கே கூடும்.
பரவியுள்ள நூல்தானே நயத்தைக் கூறும்.
தாவுள்ள மரந்தானே நிழலும் தந்து
தளர்வகற்றும், கனியளித்துப் பசியும் போக்கும்.

அடுத்திருப்போர்க் கோர்துன்பம் நேர நாமும்
அவர்கூட வருந்திடுதல் மனிதம். மேலே
மடுத்துள்ள அவர்துன்பம் நீக்க, ஆன
மனமுவந்த ஓருதவி செய்தல் நேயம்.

கெடுநினைப்பு உள்ளோரும் திருந்தல் உண்டு.
கிழக்கெழுந்து நாற்றிசையும் ஒளியின் வெள்ளம்
கொடுத்திருக்கும் நேயத்தை, இயற்கைப் பண்பைக்
கொண்டிடுதல், பிறர்க்களித்தல் மனித நேயம்!

மரபு மாமணி,
பாவலர் மணிமேகலைகுப்புசாமி,

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.