புதியவை

பனி விழும் மலர் வனம் -தொடர் கதை( அத்தியாயம்2) ரதி மோகன்

பனி விழும் மலர் வனம் -தொடர் கதை( அத்தியாயம்2)ரதி மோகன்

ஆனால் அங்கு எதுவும் பாரதூரமாக நிகழவில்லை . கார் பனிக்குள் புதைந்து நின்றது. பனிக்காலங்களில் விபத்துக்களும் புதைவுகளும் அடிக்கடி நிகழ்வதொன்று. மதுமதி சற்று இருக்கையில் தன்னை சரிப்படுத்தியபடி" ஓ மை கோட்"என்ற நிம்மதி பெருமூச்சுடன் அவள் திரும்பவும் காரை இயக்கிய போதும் காரின் இயந்திரம் செயலிழந்தமையால் முடியவில்லை. கைத்தொலைபேசியை எடுத்து மாமாவின் வீட்டு எண்களை அழுத்தினாள். எதிர்முனையில் மாமா பதட்டத்தோடு " என்ன பிள்ளை நடந்திச்சு.. கவனமடா.. ரிவியிலையும் அறிவிச்சவங்க.. ஒரே சினோ 6 -10 சென்ரிமீற்றரை தாண்டிபோச்சாம்.. இரு பிள்ளை உவன் தம்பியை அனுப்புறன்" என்றதும் சரி என சொன்னவள் மனதில் சங்கர் வருவது ஒருதுளிகூட பிடிக்காமல் அவளுக்கு இருந்தது.
மாமன் மகன்தான் ஆனாலும் அவனை பார்த்தாலே பிடிப்பதில்லை. ஆனால் அவன் அழகுக்கு நிகர் எவருமேயில்லை. பார்த்தவர் ஒருகணம் திரும்பி பார்ப்பார்கள். மாநிறம், சற்று சுருண்ட கேசம், கட்டுமஸ்தான உடலமைப்பு , ஆணவம், அகம்பாவம் அவனுடன் கூடவேபிறந்ததோ என்ற வீராப்பான பார்வை. அதைவிட அவனின் அதிகாரபேச்சான தோரணையின் சுபாவம் சுத்தமாய் அவன்பால் வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது.
அங்கு ஒரு அரைமணித்தியாலம் கடந்திருந்தது. தூரத்தில் ஒரு கார் மெல்ல நகர்வதை புகாரினூடு கண்டதும்
இது அவனாகத்தான் இருக்கும் என மது மனதிற்குள் நினைத்து கொண்டாள். கடுங்குளிரில் விறைத்துபோன கைகளை கன்னத்தோடு தேய்த்து கொண்டாள்.
அவனேதான். வந்ததும் வராததுமாய் வார்த்தைகளை பொரிந்து தள்ளினான்.
" ஏய் நீ என்ன லூசா.. வெதரை பார்த்துதான் இங்கை வெளிக்கிடனும்.
நீ ஒரிஜினல் ஶ்ரீலங்கன்தான்.. ஏதாவது தலைக்குள்ளை கிடந்ததாதானே... ஸ்ருபிட்..தமிழ் தமிழ் விடிய விடிய தமிழ்ரீவி, பத்தாக்குறைக்கு தமிழிலை ஏதோ எழுதுறாய்.. அதுகளை விட்டிட்டு இந்த நாட்டை படி முதல்""அவனின் வார்த்தைகள் நாசகாரமாய் மது காதில் ஒலித்தது. அவன் பிறப்பால் தமிழனே தவிர மொழி உடைநடை பாவனை, பழக்கவழக்கம் என முழுதுமாய் டெனிஷ் கலாச்சாரத்திற்கே மாறியிருந்தான். தாயாருக்காக அவர் மனம் கோணாமல் சமய சம்பந்த நிகழ்வுகளில் கட்டாயத்திற்காகவே ஈடுபாடுள்ளவனாக காட்டிக்கொள்வான்.
அவளின் காரை அங்கே விட்டுவிட்டு அந்தகாரை வந்து எடுக்கும்படி Falck அவசர உதவிக்கு தகவல் அனுப்பிவிட்டு
தன்காரில் அவளை ஏற்றியவன் " ஏய் லூசு இன்று நீ VUC ( வளர்ந்தோருக்கான கல்வி நிலையம்)க்கு போக வேண்டாம். படிச்சு என்னதான் கிழிக்கப்போறாய்.. எனக்கும் நேரமில்லை நான் ஓகூஸ்(Århus) போகணும் வீட்டை இறக்கிட்டுப்போறன்" என்றான்.
மதி எதுவுமே திருப்பி பேசவில்லை தலையை மட்டும் ஆட்டினாள். "" என்ன பூம் பூம் மாடுமாதிரி தலையை மட்டும் ஆட்டுறாய்... எங்கை உன்ரை தமிழிலை கொஞ்சம் செல்லமாய் நாலு வார்த்தை.... உயிர் மூச்சு நின்று போச்சோ " என பெரிதாக நகையாடி சிரித்தான் சங்கர்.
இவ்வளவு நேரமும் அமைதியாய் இருந்தவள் சீறி எழுந்தாள். "" இவ்வளவு நேரமும் உனக்கு மரியாதை கொடுத்தது என் மாமாவுக்காகத்தான்.. எப்ப நீ தமிழை நையாண்டி பண்ணினாயோ.. முடியலைடா பொறுக்க என்னால்.. நீதான் லூசு.. தாய்மொழியை பழிப்பது பெற்றதாயை பழிப்பதுக்குசரி.., நீ பெரிசாக டெனிஷ் பேசலாம். அதிலை டாக்குத்தர்படிப்பு வேறு...மனசிலை ஈவிரக்கம் இல்லா உனக்கு எதுக்கடா இதெல்லாம்...உன்னை பெத்தவள் தமிழச்சி என்பது நினைவிலை வைச்சுக்கோ. பிறந்த உடனை இங்கு வந்தவனாச்சே.. எங்கடை வேதனை இழப்புக்கள், உனக்கு தெரிய நியாயமில்லை.. புரிஞ்சிக்கிற மனிசனும் நீ இல்லை.. "
வார்த்தைகள் கண்ணீரோடு வெளிவந்தன.
அதற்குப்பிறகு இருவரும் எதுவுமே பேசவில்லை. வீட்டில் இறக்கிவிட்டு சங்கர் போய்விட்டான். நேராக மதுமதி தன் அறைக்கு சென்று கதவை தாளிட்டு விட்டு குலுங்கி குலுங்கி அழுதாள். ஏன் இந்த சங்கர் தமிழின் மேல் கோபமா? இல்லை என மேல் கோபமா? இதுவல்ல முதல்தடவை.. எப்போதும் இவன் இப்படியேதான்.. தமிழ் என் மூச்சு.. தமிழ் என்தாகம் அவனுக்குத் தெரிய நியாயமில்லை.. அதற்காக பலியான தியாகமான உயிர்கள் எத்தனை... எண்ணங்கள் கண்ணீரில் மிதக்க..,
அவள் சந்தித்த இழப்புக்கள் எத்தனை எத்தனை ...எல்லாமே இன்று நடந்தது போல நினைவிற்குள்......
தொடரும்..,

குறிப்பு:Århus. நகர்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.