புதியவை

உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி பெப்ரவரி மாதம் 2016 நடைபெற்ற கவிதைப் போட்டியில் பாராட்டுக்களைப் பெற்ற கவிஞர்களும் கவிதைகளும்


 


01 -குறள் வெண்பா:

நெஞ்சம் கொதிக்குது நேர்மை இறந்ததை
பஞ்சாய் எரியும் மனசு.

செல்வம் மிகுந்து கொடுத்து மகிழ்ந்தோர்
நிலையால் எரியும் மனசு.

தமிழால் தமிழை உயிராய் மதித்தோரின்
தாழ்வால் எரியும் மனசு.

குடும்பமாய் வாழ்ந்தோர் தனியாய் தவிக்கும்
நிலையால் எரியும் மனசு.

இழப்பால் தவிக்கும் குழந்தை தவிப்பதை
எண்ணி எரியும் மனசு.

மாளிகையில் வாழ்ந்தோர் மரத்தடியில்
வாழ்வதைப்பார்த்தால் எரியும் மனசு.

கொடுத்து சிவந்த கரங்கள் வலியால்
சிவந்து எரியும் மனசு.

ஒற்றுமையாய் வாழ்ந்து உயர்ந்தோர்
வேறுபட்டுநின்றால் எரியும் மனசு.

நட்ட மரமெல்லாம் கண்முன் எரிந்த
நிலையால் எரியும் மனசு.

நடந்ததை எண்ணி மறக்க முடியாமல்
வாழ்வில் எரியும் மனசு.

கவிஞர் கோவிந்தராஜன் பாலு







02 -எரியும் மனசு

வளர்நிலக் காட்டில் ஆடும் 
வடலியாய் சிலபேர் வாழ்க்கை
இளமையில் செழிப்பைக் கண்டே
இறுதியில் ஆட்டங் காணும்
தனிமையின் கொடுமை அல்லும்
தந்திடும் கனவில் சேரும்
இனிமையின் இடத்தை வெட்டி
இன்னுயிர் எரியச் செய்யும் !
வேண்டுதல் எதுவென் றாலும்
விரைவுடன் சேரா விட்டால்
தீண்டிடும் பாம்பு பட்டத்
தேகமாய் எரியும் நெஞ்சு !
பணத்தினை மிதமாய்க் கொண்டே
பாங்குடன் வளரும் போதும்
துணைதனில் ஒவ்வா மையின்
துயரினால் எரியும் நெஞ்சு !
தூங்கிடும் விழிகள் தன்னுள்
துளைதிடும் வலிகள் கண்டே
தாங்கிடும் தோள்கள் இன்றித்
தவிக்கையில் எரியும் நெஞ்சு !
பாவிகள் வெட்டிச் சாய்க்கும்
பாமரன் உயிரின் எச்சம்
ஆவிகள் தேசம் ஆக்கும்
அழுகையில் எரியும் நெஞ்சு !
ஏற்றமே கொண்ட மக்கள்
எதிரிலே வாழும் போதும்
மாற்றமே தனிமை ஆன
மங்கையுள் எரியும் நெஞ்சு !
சீதனம் என்னும் நோயால்
சிதைவுறும் மகளைக் காக்க
வேதனம் ஈட்டும் தந்தை
விரக்தியில் எரியும் நெஞ்சு !
ஏழையின் பசியைக் கண்டும்
இருப்பதை மறைக்கும் அந்தக்
கோழையின் குணத்தைக் கண்ட
கோ"விலும் எரியும் நெஞ்சு !
பாடமோ படிப்போ காதல்
பாங்குடன் இருந்த சுற்றம்
கூடவே இருந்த நட்பும்
குலைந்திட எரியும் நெஞ்சு !
சிமாரா அலி "ஊதாப்பூ "


03 -எரியும் மனசு

உலகத்தில் எங்கேனும் அமைதி யுண்டோ
உள்ளத்தில் உண்மையான அன்பு முண்டோ
உலகத்தில் போரில்லா நாடு முண்டோ
உறவெல்லாம் கூடிவாழும் வீடு முண்டோ
உலகத்தில் ஏழ்மையில்லா நிலையு முண்டோ
உதவிடவே ஓடிவரும் உயிரு முண்டோ
உலகத்தில் பெண்மையினைக் காப்பா ருண்டோ
உள்மனது மெரிவதைதா னறிவா ருண்டோ
வெடிகுண்டின் தேவையென்ன நீரே சொல்வீர்
வலிமிகுந்து உருகுலைந்து வருந்தக் காண்பீர்
வெடிகுண்டாய் மனிதனான நிலையைப் பாரீர்
வெறுப்புவளர்ந் துமதியிழந் தநிலை காண்பீர்
வெடியதற்கு பகைவன்தெ ரியுமோ இல்லை
வாழும்நல் மக்களைய றியுமோ சொல்வீர்
வெடிவெடித்து வீடெல்லாம் அழியக் கண்டீர்
வேதனையால் மனததுவே எரியக் காண்பீர்
அன்புகொண்டு அனைவருமே சேர்ந்தே வாழ்வோம்
அன்புகொண்டு எளியவரை உயரச் செய்வோம்
அன்பதுவே ஆயுதத்தை அழியச் செய்யும்
அன்பதுவே அகிலத்தை மகிழச் செய்யும்
அன்பிருந்தால் வெறுப்பதுவும் வளர்வ துண்டோ
அன்பினாலே இணைந்தவர்க்கு துயரு முண்டோ
அன்பொன்றே அகிலமெல்லாம் இருக்கச் செய்தால்
அப்பொழுதே மனதெரிச்சல் அணைந்தே போமே

சுரேஷ் சீனிவாசன்



04 எரியும் மனசு

காற்றுக் கூச்சலில் 
உதிர்ந்த
சிறகு பூத்த பூவை
கரியதொரு
காவலிலிட்டுப்
பரிகாசம் செய்யும்
இளமாலைப் பொழுதில்
இரண்டறக்கலந்து
அமிழ்ந்தது - பகலின்
லீலா வினோதம் ....
நரைத்த கூடுகளை
நடுநிசியில்
ஆளுயரப் பந்தலாக்கி
ஆடிவரும்
அகால மேகங்களின்
மூச்சடைத்துப்
பொழிகின்ற - பனிச்
சிரமங்களில்
பாதையோரம் விக்கித்து
நாக் குழறியது
ஆசையற்ற வித்து .......
தேவதை வண்ணத்தில்
நெளிகின்ற
இரவின் நாளங்களை
மின்மினித் துடிப்பில்
நிமிர்த்தி
நீள்வட்டப் படகிலேற்றி
நீந்திப்
பிழைக்கிறது
கங்கண உதயம் ......
மொட்டை நிலவுக்கு
புன்னகை வரைந்துவிட்டு
நெடுநாள்க் கனியைப்
புசித்த பசியானது
நீர்த்துப் போக
வருடங்களில்
திரண்ட நூற்கண்டுகளைச்
சிக்கலாக்கி - திரும்பும்
திசையில்
வலையாய் விரித்து
காத்திருக்கிறது - ஓர்
வறட்டு விரதம் ….
எண் சாண்
அளந்து சரிபார்க்கும்
பரிதாபமொன்றின்
பல்லைப் பிடித்து
சோதிக்கும்
வெளிர் ஓடையில்
சலசலப்பு ஊர்வலம் ;
கரை குடித்துப்
பழகிய நீருக்கு - இந்தக்
கருங்காட்டின்
சாயக் கழிவும் - துளி
மோட்சம் அடையட்டுமென
கிழித்து எறியப்பட்டது - இந்த
விண்ணப்பம் ….......!
-புலமி
######################
: க.சி.அம்பிகாவர்ஷினி
தமிழ்நாடு இந்தியா


05 -எரியும் மனசு
அவலங்கள் எங்கே நடக்கிறதோ 
அநீதியை கண்டு தகித்து எரியும் மனசு
அதற்கான விடையை தேடுகிறது
சிலநேரங்களில் தீர்வும் காணுகிறது
மனித மனதின் சக்தி மகத்தானது !
உழவன் அடையும் கடும் துயர்
செய்திக்கேட்டு எரியும் மனசு
உழவுத்தொழில் செழிக்கும் வழியும்
உரக்கச்சொல்லி பரப்புரை செய்கிறது
விவசாயத்தை காக்க போராடுகிறது!
கடலுக்கு செல்லும் மீனவர் சுடப்படும்
கொடுமை அறிந்து எரியும் மனசு
உயிர் துச்சமானதா என வினவுகிறது
மீனவர் உயிர்காக்க முழக்கமிடுகிறது
இடிமுழங்கிட நீதியும் கேட்கிறது!
இயற்கை நிலங்கள் ஆராய்ச்சி கூடங்களாக
மாறிடும் நிலம் காக்க எரியும் மனசு
கெயில்,மீத்தேன்,நீயுட்டிரினோ பெயரில்
நிலம் அழிக்கும் திட்டங்கள் வந்திடினும்
எதிர்த்து குரல் கொடுத்து நிலம் மீட்கிறது!
சுரண்டல்கள் நிறைந்த சமூக அமைப்பிலே
மக்கள் நல் வாழ்க்கைக்காக எரியும் மனசு
லஞ்ச ஊழல் விழிப்புணர்வு ஏற்படுத்தி
வரும் தலைமுறைக்காக தூய்மை
சமுதாயம் உருவாக்க முயல்கிறது!
பெண்களுக்கு எதிரான கொடுமைகளோ
குழந்தைக்கு எதிரான வன்முறையோ
மனிதநேயம் அழிக்க தோன்றும் சீரழிவோ
அதர்மம் அவதரிக்கும் நேரத்திலோ
அநீதிகள் கண்டு நெஞ்சம் பொறுப்பதில்லை!
ச.மணிகண்டன்-புதுக்கோட்டை - 622001













No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.