புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2016 ல் நடத்திய (உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்று "கவித்தீபம் பட்டமும்,சான்றிதழும்பெறுகின்றார் -ஒ.சுந்தரமூர்த்தி-தமிழ்மொழிப் பாவரசன் -எரியும் மனசு

மானமுள்ள தமிழனென்று மாவுலகில் வாழ்ந்தவர்கள்
ஈனநிலை பெற்றதினால் எரிகிறது என்மனது
வானுயர்ந்து ஓங்கியிவர் வாழ்ந்தநிலை போயொழிந்து
தேனினிக்க வாழ்ந்தவர்கள் தேயத்திலே சாகின்றனர்
ஆண்களென்று சொல்வதற்கும் ஆகாத மிருகமென
பெண்களது மானத்திற்குப் பங்கமென வாழலுற்று
சொந்தமண்ணில் அடிமைகளாய்ச் சோகம்பல பெற்றிடற்கு

எந்தமிழன் துணைபோக என்மனது எரிகிறது...
விந்தியமும் தாழ்நததடா! வேளாண்மை ஓய்ந்ததடா!
சந்தி சிரிக்குதடா! சாகும்நிலை ஆகுமடா!
நாடகமே வாழ்வாக்கி நடித்து ஏமாற்றும்
பாடமெல்லாம் எங்குகற்றாய் ? பாழான மாமனிதா.
..
ஈடில்லாத் தமிழனென்று ஈன்றதாய்க் கூறயிலே.....
வாடிக் கூம்புதடா வசந்தமெலாம் மாய்ந்ததடா !
ஒற்றுமை காணாமல் ஓங்கிட முடியாது
பற்றுவை நாட்டினிலே பாருலகம் பயங்கொள்ளும்
செந்தமிழை வளர்த்திடற்குச் சீருடன் மகிழ்வெய்து
எந்தைத் தமிழணங்கு ஏற்றமுறப் பாடுபடு

விந்தைத் தனமாக விசமான மதுவருந்தி
நொந்து சாகாதே நுடமாகி தாழாதே
தாய்நாட்டில் தமிழர்பிறர் தயவின்றி வாழும்நிலை
தாயோடு சேய்சேர்ந்து தகவோடு ஆளும்நிலை
பாரே புகழும்நிலை பகைவரெல்லாம் மாயும்நிலை
ஆறெல்லாம் நீர்பெருகி அன்பறம் பெருகும்நிலை
மாயமாய்ப் போனதினால் மாய்ந்தெரியும் என்மனது

ஆயமொடு நீயுயர ஆவல்கொள்ளும் என்மனது
தூயவராம் என்தமிழர் துயரமின்றி வாழ்வதற்கும்
காயமில்லா இதயங்களைப் பெற்றுமனம் ஓங்கிடற்கும்
வாருங்கள் தடாக வான்பூத்த முல்லைகளே!
ஊருக்குள் பாய்தோடும் உவப்பான நன்னீரே!
இந்நிலையில் ஓங்கிடவே என்மனது நாடிடுது
தந்நிலையில் நீயுயர்ந்து தாய்நாடு காத்திடுமே !

-ஒ.சுந்தரமூர்த்தி
-தமிழ்மொழிப் பாவரசன்
No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.