புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2016 ல் நடத்திய (உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டியில் மூன்றாவது இடத்தைப்பெற்று "கவின்கலை" பட்டமும்சான்றிதழும் , பெறுகின்றார் தமிழ்மணி ஓசூர் கவிதாயினி மு.மணிமேகலைஎரியும் மனசு !

மக்களை மாக்களாய் நடத்தும்
மனிதமற்ற கொடுமைநிலை கண்டு
அரசிய லின்று அவலமாகி
அறமது அழிந்த இழிநிலை கண்டு
சாதிக்கப் பிறந்தோ மென் றில்லாமல்
சாதிக்குப் பிறந்தோமெனும் வேதனை கண்டு
மதம் மதம் பிடித்து இனம் பிரித்து
மனம் பிரிக்கும் கெடுநிலை கண்டு

குடியால் குடிகெடுமெனத் தெரிந்தே
குடியை நாடும் குடிமகன்கள் கண்டு

பண்பாட்டின் சிகரமாய் வாழ்ந்த மனிதன்
பாலியல் வன்முறையில் சிதைவுண்ட நிலைகண்டு
கல்வியெனும் அருஞ்செல்வம் கயவர்களின்
கரங்களில் வியாபாரமான கையறுநிலை கண்டு

விவசாயின் வியர்வையையும் கண்ணீரையும்
வேடிக்கை பொருளாக்கிய வீணர்களைக் கண்டு

கருணையின்றி உயிரழித்துப் பொருளீட்டக்
கலப்படம் செய்கின்ற கயவர்களைக் கண்டு

சத்தியமிங்கு சாத்தியமில்லை யென்று
சமூகத்தை மிரட்டும் தீவிரவாதம் கண்டு

சான்றோர் கற்பித்த அறவழி மறந்து
தான்தோன்றியாய்த் திரியும் தலைமுறை கண்டு

செல்லும் பாதை திசைமாறிப் போகையில்
செய்வதறியா நிலையிலும் முயற்சியுடன்
எதிர்த்துப் போராடிக் களைத்த வேளையில்
என் இயலாமைத் தன்னிரக்கத்தில் எரியும் மனசு!

தமிழ்மணி ஓசூர்  கவிதாயினி  மு.மணிமேகலை


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.