புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2016 ல் நடத்திய (உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்று "கவியருவி பட்டமும்,சான்றிதழும்பெறுகின்றார் டொக்டர். நியாஸ் --சம்மாந்துறை

எரியும் மனசு

விளக்கெரியா வேளைதனில்
அடுப்பெரியா பொழுதுகளில்
எரினிலைக்கு வந்தவொன்று
எழுந்தெரியும் என் மனசு.
தண்ணீரும் பொசுங்குதிங்கே - என்
தண்மையுந்தான் தவிக்குதிங்கே
தட்ப வெப்பந்தான் தலைகுனியுதிங்கே
தன்னிலைதான் நாணிக் கோணுதிங்கே
.
முயற்சி திருவினையாக்குமென்றேன்
முக்கித்தான் பார்த்துவிட்டேன்
முட்டுக்காலிலும் நின்றுவிட்டேன் - நான்
முகமழிந்தே செத்துவிட்டேன்.
தன் விழி முன்னே ஒன்று
என் வழி பின்னே பத்து
ஏன் - பத்துக்கு பதினாறு
என்றெல்லாம் பாரிலுண்டோ..
எனக்கிது புதிதன்றோ..
என் காட்டுத் தீ காற்றில் பரவ
அழகிய சில முயல்கள் அணுகுகின்றன
அமைதியான சில ஆமைகளுந்தான்...

கண்களுக்கு சாணை பிடிக்கும் கழுகுகள்
முந்தானை முட்டும் மூஞ்சூறுகள்
பதுங்கித்திரியும் குள்ள நரிகள்
பக்குவமாய் வந்தென்னை 
வளைகின்றன - சூறையாட
போகுமிடமெலாம் மாயாவிகள்
பேச்சிலோ பெண் விடுதலை
மூச்சிலோ பெண் அடிமைத்தளை
முதலாளித்துவ முதலைகளின்
முதற்தர பெண் வாடகை அங்காடிகள்
அங்குமிங்கும் பெண் மரக் காய்கள் - நடுவே
அழகு மழலை மாறா மரப் பிஞ்சுகள்.
..
பஞ்சமாபாதகமோ பாராளும்
நஞ்சுணவோ நாட்டில் தாராளம்
கபடமும் கலப்படமு மேராளம்
இசைந்து கொடுகிறதோ துலாபாரம்
இலவசக் கல்வியோ வியாபாரம்
வாங்குதற்கோ "மீற்றர்"க் கணக்கு
விற்பதற்கோ "யார்"க் கணக்கு
இவையெல்லாம் யார் கணக்கு
இறையிடம் உள்ளது அறக் கணக்கு
வேதிக்கு போதி இல்லை
வழக்குக்கு வாதி இல்லை
நீதிக்கு நாதி இல்லை
கையிலே காசு இல்லை
மெய்யிலே மாசு இல்லை
ஓ...என் சமூகமே....

எரியும் என் அகத் தீயை
வரிந்து தணித்தணைக்கும் 
தண்மைத் தடாகமாகுங்களேன்.

-- டொக்டர். நியாஸ் --சம்மாந்துறை


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.