நான் பேசுகிறேன்!
**********************
இறைவன் படைப்பில்
எல்லாமே அழகு தான்
ஆகியதன் நோக்கம்
நிறைவேறிடின்
இல்லையெனில் என்
நிலை தான் உமக்கும்.
எல்லாமே அழகு தான்
என்றாலும் என் போல
பேரழகு ஒரு சில தான்.
இயற்கையாகவே உருப்பெற்ற
நான்
தொடர்ந்தும் ஓடிடேன்
நிரம்பினால் பீறிடுவேன்
அதுவும் அவனால் தான்.
பச்சைச் சால்வையால்
அடிக்கடி போர்த்திடுவார்
என்னை போதாதென்று
தூவி விளையாடிடுவர் பலரும்
என் மேல் அவர் தம்
மனை நிரம்பினால்.
பச்சைச் சால்வையும் எனக்கு
அழகு தான் இருந்தாலும்
அடிக்கடி என்னையும் தான்
நிர்வாணமாக்கிடுவர்
காசு கொடுத்து என்பேனா
காசை எடுத்து என்பேனா.
என்னை நிர்வாணமாக்கியே
அவர்கள் உடுத்திடத் தானோ
என்னை வைத்துள்ளனர்
இப்படியே.
என்னை நிர்வாணமாக்கவாம்
பல இலட்சங்கள் செலவாகுமாம்
உடுத்திடத்தானே செலவாகும்
என் விடயத்திலோ தலைகீழாய்
ஒரு சில இலட்சங்கள் கரைந்திட
மிச்சமெல்லாம் பைகளுக்குள்.
ஏமாற நீங்கள் இருப்பது தான்
அவர்களுக்கு வரப்பிரசாதம்
என்னையும் வைத்துங்களை
ஏமாற்றுவதைத் தானே
தாங்க முடியவில்லை என்னால்.
பச்சைச் சால்வையின் அழகை விட
என்னை எப்படியெல்லாமோ
அழகு பார்க்கலாம் இருந்தும்
அவர்களின் உழைப்புக்கு நான்
மூலதனம் ஆகிவிட்டேனே.
மாலைநேரத் தென்றலை
என்னிடம் வந்து நுகர மனமின்றி
என்னருகே அடுத்தவரையுமல்லவா
வராமல் பண்ணுகிறார்கள்.
நானும் இப்படியே இருந்தால் தான்
அரசியல்வாதிகளுக்கும் நல்லதாம்
என்றெல்லாம் பலரும் பலவிதமாய்
பேசியும் என்ன பயன் செவிடன்
காதில் ஊதிய சங்காட்டம்.
என் தலைவிதி எப்போது மாறும்
என்று நானும் தினம் தினம்
அங்கலாய்க்கிறேன் அது
நான் தான் மருதூரின் தோணா!
*** டாக்டர் ஆரிப் ***
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.