புதியவை

ஓட்டமாவடி கவிஞர் றியாஸ் முகம்மட் அவர்களின் “முகவரி இழந்த முச்சந்தி”கவிதை நூல் வெளியீட்டுவிழா -ராஜ் சுகா

 
ஓட்டமாவடி கவிஞர் றியாஸ் முகம்மட் அவர்களின் கன்னிக்கவி நூலான “முகவரி இழந்த முச்சந்தி” கவிதை நூல் வெளியீட்டுவிழா

28.02.2016ம் திகதியன்று ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் 
மாலை மூன்று மணிக்கு மிக விமர்சையாக நடைபெற்றது. 
தடாகம் கலை இலக்கிய வட்டம்,கல்வி கலை கலாசார பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இவ்விழாவில், இந்திய-இலங்கைப் படைப்பாளிகளும் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது விஷேடமாகும். 

நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக‌ கிராமிய பொருளாதார அலுவல்களுக்கான பிரதியமைச்சர் சட்டத்தரணி அமீர் அலி அவர்களும், 
வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிசாத் பதியூதின் அவர்களும் கலந்து கொண்டனர். 
கெளரவ அதிதிகளாக மட்ட‌களப்பு  முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி க.தங்கேஸ்வரி அவர்கள்  கலந்து சிறப்பித்ததோடு, விஷேட அதிதிகள் உட்பட பலர் விழாவில் கலந்து சிறப்பித்தமை நிறைவை தருகின்றது 

நிகழ்வில் வரவேற்புரையை கவிஞர் சேமமடுவூர் சிவகாசன் அவர்கள் வழங்க, 
தலைமையுரையினை தடாகம் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களும்,
நூல் அறிமுகத்தினை சிரேஷ்ட ஊடகவியலாளர் கவியருவி ரீ.எல். ஜெளபர்கான் அவர்களும் தந்திருந்தார்கள். சக எழுத்தாளனைப் பாராட்டி சிறப்பான இரண்டு கவி வாழ்த்துக்களை கவிஞர் நுஸ்ரி அவர்களும், 
மலேசியாவைச்சேர்ந்த கவிதாயினி ஆர்.எஸ். கலா அவர்களின் வாழ்த்தினை செல்வி சஹானா ஜிப்ரி அவர்களும் பாடி மகிழ்வித்தனர். 

எழுத்தாளர்களைக் கெளரவித்துப் பாராட்டி விருது வழங்கி உயர்த்தி விடுவதில் கடந்த முப்பது வருடங்களாக அளப்பறிய சேவையாற்றி வருகின்ற ‘தடாகம் கலை இலக்கிய வட்டம்’ 
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களின் தலைமையில் இவ்வமைப்பானது 
இலங்கை கலைஞர்களை மட்டுமல்லாமல், பிறநாட்டு திறமையாளர்களையும் கண்டெடுத்துப் பாராட்டிக் கெளரவிப்பதில் முன்நிற்கின்றது. 
அந்த வகையில், இந்நூல் வெளியீட்டு விழாவிலும் இந்திய கவிஞர்களுக்கு விருது வழங்கி பொன்னாடை போர்த்திப் பாராட்டுதல்களை தந்து அவர்களின் உள்ளம் குளிர்வித்திருந்தது. 

நிகழ்ச்சிகளை சாய்ந்தமருது டாக்டர் ஆரிப் அவர்கள் தொகுத்து வழங்க,
நூலின் முதற்பிரதியினை அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் மெளலவி எம்.எம்.எஸ் ஹாறுன் அவர்களுக்குப் பதிலாக பிரதிப்பணிப்பாளர் எச்.எம்.ஜாபிர் பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து, பிரமுகர்கள், படைப்பாளர்கள், கவிஞர்கள், நண்பர்கள் என விஷேட பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர். 
புலவர் ந. நாகராசன், பாவலர் கோ.மலர்வண்ணன், கருமலைத்தமிழாழன் ஆகியோர் நான்கு தசாப்த காலத்திற்குமேலாக எழுத்துத் துறையில் பிரகாசிப்பவர்கள். 
கவிதைக்குள் கால்பதிக்கின்றவர்கள் கட்டாயம் யாப்பிலக்கணத்தைக் கற்றிருக்க வேண்டும் என்பது இவர்களின் கருத்து. 
வெறும் சொல்லலங்காரங்ளை கவிதை என நினைத்துக்கொண்டிராமல், உணர்வுகளைக் காத்திரமாகவும் இலக்கிய ரசனையுடைய கவிதைகளாகவும் பதிவுசெய்வதற்குப் புதியவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார்கள்
 இந்த மரபுக் கவிஞர்கள். இசைத்துறைக்கு வருபவர்கள் கர்நாடக சங்கீத்த்தைக் கற்றுக்கொள்ளவேண்டியது எவ்வளவு இன்றியமையாததோ, அதேபோல் கவிதைக்குள் நுழைபவர்கள் இலக்கணம் கற்க வேண்டும் 
 தமிழகத்தில் ஒரு சில நாளிதழ்களைத் தவிர, அநேகமானவை புதுக்கவிதைகளுக்கே முன்னுரிமை அளிக்கின்றன என்பதும் ஒரு விதத்தில் விசனத்திற்குரியது என்பதையும் சுட்டிக்காட்டி  விழாவில் பேசினார்கள் 
விழாவில் விருதினைப்பெற்ற திருமதி மு.மணிமேகலை, கலைச்சுடர் கீதாராணி ஆகியோரும் எழுத்துத் துறையில் நீண்டநாள் அனுபவத்தைக்கொண்டவர்கள். இதில்  பல்லாண்டு காலம் கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.தற்போது கலை, இலக்கியத்துறையிலும் சமூகசேவையிலும் ஈடுபட்டு வருகிறார். கல்வி கற்கும் பிள்ளைகளை ஊக்குவிப்பதுடன் பெண்களின் நலன்சார்ந்த விடயங்களிலும் மணிமேகலை தனது பங்களிப்பைச் செய்து வரகிறார்.
 கீதாராணி நந்தவனத்தின் ஆசிரிய குழாத்தில் இணைந்து பணியாற்றுகிறார்.வந்திருந்த யாவருமே பல நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்நிகழ்வில், பிரதம அதிதி கெளரவ பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி அவர்களின் சிறப்புரையே விஷேட அம்சமாக அமைந்தது
இதனை இந்நூலுக்கான விமர்சனமாக மட்டுமல்லாது, விளம்பரமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
 ஒரு கவிதையால் பல சமூக மாற்றங்கள் உட்பட தனி மனிதனுக்குள்ளும் பல்வேறுபட்ட உணர்வு ரீதியிலான தாக்கங்களை ஏற்படுத்த முடியும்.
 பாரதியின் கவிதைகள் அக்காலத்தில் அதனைச் சிறப்பாக செய்திருந்ததை நாம் அனுபவ ரீதியாகக் காணலாம். 
அந்த பாரதியின் கவிதை போல கவிஞர் ஓட்டமாவடி றியாஸ் அவர்களின் கவிதை நூலும் வெளியீட்டு விழாவில் ஓர் அனலை ஏற்படுத்தியிருந்தது.
 அதற்கேற்றாற் போல பிரதம அதிதியின் உரையும் செவிகளுக்கு விருந்தாகவும் சிந்தைக்கு தீனியாகவும் ரசனைக்கு குறைவில்லாது பார்வையாளர்களைக் கட்டிப்போட்டிருந்தது
.இலங்கை, இந்திய படைப்பாளர்களின் சினேகபூர்வ சந்திப்புடன் விருதுகள், கெளரவிப்புக்கள், பாராட்டுக்கள், புகைப்படமெடுத்தல், நூல் வழங்கல்களுடன், வெளியீட்டு நிகழ்வு வெற்றியுடன் இனிதே நிறைவடைந்தது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.