புதியவை

எதிர்பார்ப்பு -நடராஜன் கல்பட்டுமல்லிகைப் பூவிற்கே ஒர் தனி மணம்.  ஒரு தனிக் குணம்.  ஆளை மயக்கி எங்கோ இழுத்துச் சென்றிடும் அது.  திருமணமே வேண்டாம் என்று இருந்த எனக்கும் இல்லை விதி விலக்கு எதுவும். 

மல்லிகை மலர்களால் அலங்காரம் செய்யப் பட்டுள்ள அறையில் காத்திருந்தேன் மாலினியின் வரவுக்காக.  மெல்லத் திறந்தது கதவு.  கையில் பால் கூஜாவுடன், பட்டுச் சேலை சரசரக்க உள்ளே நுழைந்தாள் மாலினி.  வேகமாய்ப் பட படத்தது என் இதயம்.  பட படப்பை அடக்கிக் கொண்டு, “வா மாலினி” என்றேன்.

“நான் வறது இருக்கட்டும்.  நீங்க பாதுகாப்போட வந்திருக்கீங்களா இல்லையா?, என்றாள் அவள் பதிலுக்கு.

“பாதுகாப்போட வறதுக்கு நான் என்ன பிரதம மந்திரியா இல்லே முதன் மந்திரியா?  அதுவும் என்னோட படுக்கை அறைக்குள்ள நான் இருக்குறதுக்குக் கருப்புப் பூனை பாதுகாப்பு எதுக்கு?”

“என்ன மறந்தூட்டீங்களா ‘திருமண மாலெ’லெ நான் என்னெப் பத்தி குடுத்திருந்த தகவல்களெ?  அதெ நல்லாப் படிச்சூட்டு தானே கல்யாணம் பண்ணிக்க ஒத்துக் கிட்டீங்க?”

“அப்பிடி என்ன பெரிசா தகவல் குடுத்திருந்தெ ஒன்னெப் பத்தி?  வயசு, படிப்பு, வேலெ, கூடப் பிறந்தவங்கன்னு தகவல்கள் கொடுத்திருந்தே.”

“அதெல்லாம் உடுங்க.  கடெசீலெ என் ’விருப்பு / வெறுப்பு’ பத்தி என்ன சொல்லி இருந்தேன்னு படிச்சீங்க இல்லெ?  அதுலெ என்ன சொல்லி இருந்தேன் நான்?”

“பிடித்தது: நண்பர் குழாம் வளர்த்துக் கொள்ளல்/  பிடிக்காதது பிள்ளை குட்டி பெற்றுக் கொள்வதோ, குழந்தைகளை வளர்த்தது ஆளாக்கிடலோன்னு சொல்லி இருந்தே.”

“படிச்சவரு தானே நீங்க?  படிச்சதுக்கு அர்த்தம் புரிஞ்சிருக்கும் இல்லெ?  அப்புறம் என்ன பாதுகாப்பு இல்லாமெ படுக்கை அறைக்கு வறது?”

இப்படி ஆரம்பித்த எங்கள் முதலிரவு இப்படியே தொடர்ந்தது ஓராண்டு. வெளி உலகத்துக்கு தான் நாங்கள் கணவன் மனைவி. 

அம்மா துளைக்க ஆரம்பித்தாள், “என்னடா எப்பொ ஒரு கொழெந்தையெப் பெத்து எங்க கையிலெ கொடுக்கப் போறே?  எல்லாரையும் போல நாங்களும் பேரக் கொழெந்தேளெக் கொஞ்சி வளக்க வேண்டாம்?  போன வாரம் எதுத்த வீட்டுக்குப் போயிருந்தேன்.  அப்போ எதுத்த வீட்டு மாமா அவரோட பேரனெ மூஞ்சிக்கு நெரெ தூக்கிக் வெச்சிண்டு கொஞ்சிண்டு இருந்தார்.  அப்போ அந்தக் கொழெந்தெ அந்த மாமா மூஞ்சிலெ சர்ருன்னு மூத்திரம் அடிச்சுது..  மாமா அவனெத் திட்டலெ.  அடிக்கலெ.  பதிலா என்ன பண்ணார் தெரியுமோ?”

“என்ன பண்ணார்னு எனக் கெப்படித் தெரியும்?  நீ தானெ அங்கெ போயிருந்தே.  நீயே சொல்லு.”

“சொல்றேன்.  ‘தடிப் படவா.  தாத்தா மூஞ்சீலெ பன்னிரா தெளிக்கிறே’ ன்னு சொல்லி பெரிசா சிரிச்சார்.  அங்கெ இருந்தவா எல்லாரும் கை கொட்டிச் சிரிச்சா.  பேரெக் கொழெந்தேளெக் கொஞ்சறதே தனி சுகண்டா.  அதெ எப்பொதான் தரப் போரேளோ நீங்க எனக்கு.”

உண்மை அறியாது பேரக் குழந்தைக்கு ஏங்கிடும் அம்மாவை நினக்க எனக்குப் பரிதாபமாக இருந்தத்து.  திருடனுக்குத் தேள் கொட்டியது போல மவுனம் சாதித்தேன். 

என் மனத் திரையில் ஓடியது எனக்கு அம்மா பெண் பார்க்க ஆரம்பித்து மாலினியைத் தேர்ந்தெடுத்த போது நடந்த ஒரு சம்பவம்.

 “அம்மா இந்தப் பொண்ணு வாண்டாம்மா.  கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்றா எனக்கு நண்பர்களெச் சேத்துக்கதான் புடிக்கும்.  புள்ளெ குட்டிகளெப் பெத்துக்கறதோ அதுகளெ வளக்கறதோ பிடிக்காதுன்னு.  நீயோ சாகறதுக்கு முன்னெ பேரக் கொழெந்தேளெக் கொஞ்சணுங்கறே.”  இது நான்.

“இந்த காலத்து படிச்ச பொண்ணு இல்லியா.  அதான் அப்பிடிச் சொல்றா.  கல்யாணம் ஆச்சூன்னா எல்லாம் சரியாயிடுண்டா.” இது அம்மா.

விதியை மாற்ற யாரால் முடியும்?  கல்யாணமும் நடந்தது.  ஓராண்டும் ஓடி விட்டது. 

அடுத்த வாரமே ஒரு முடிவுக்கு வந்தோம் மாலினியும் நானும்.  இப்படிப் பட்ட ஒரு அர்த்தமற்ற போலி வாழ்க்கை நடத்துவதை விட பரஸ்பர ஒப்புதலுடன் விவாக ரத்துக்குக் குடும்ப நல நீதி மன்றத்தை அணுகுவது என்று.  செயலிலும் அந்த முடிவை நிறைவேற்றினோம்.  பத்து நாட்களுள் வந்தது அழைப்பு நேரில் ஆஜராகும் படி.  நாங்களும் சென்றோம்.

“நீதிபதி கேட்டார், “சொல்லுங்க ஒங்களுக்குள்ளெ என்ன தகறாறு?” என்று. .

நான் ஆரம்பித்தேன், “நீதிபதி அவர்களே எங்களுக்குத் திருமணமாகி ஒரு வருஷத்துக்கு மேல் ஆகிறது என்றாலும் நாங்கள் வெளி உலகுக்குதான் தம்பதிகள்.  எங்களுக்குள் தாம்பத்ய உறவு நடக்க வில்லை.  என் அம்மாவுக்கோ பேரக் குழந்தையைப் பார்க்க வேண்டும், கொஞ்ச வேண்டும் என்பது அடங்காத ஆசை.”

“இந்து திருமணச் சட்டம் ஒரு கணவனுக்கு தாம்பத்ய உறவு கொள்ள உரிமை அளிக்கிறது என்பது தெரியாதா உனக்கு?  நீ என்னம்மா சொல்றே?” கேட்டார் மாலினியைப் பார்த்து நீதிபதி.
                                                    
“நீதிபதி அவர்களே எனக்கு அது தெரியும்.  எந்தத் திருமணச் சட்டத்திலாவது மணமான ஒரு பெண் குழந்தை குட்டிகளைப் பெற்றெடுக்கத்தான் வேண்டும் என்றோ, அப்பிடிப் பெற்றெடுத்த குழந்தை அல்லது தத்தெடுத்த குழந்தையை வளர்த்தது ஆளாக்கிடல் வேண்டும் என்று இருக்கிறதா சொல்லுங்கள்.  மேலும் என் திருமணத்திற்கு முன் ‘திருமண மாலை’ இதழில் நான் கொடுத்திருந்த விளம்பரத்தில் தெள்ளத் தெளிவாகத் தந்திருந்தேன் எனது விருப்பு மற்றும் வெறுப்புகள் பற்றி.  படித்தவர் தானே இவர்.  இப்போது ஏன் பிடிவாதம் பிடிக்க வேண்டும்?” பதிலுக்குக் கேட்டாள் மாலினி.

“அப்பிடி என்ன குடுத்திருந்தே விளம்பரத்துலெ?”

“பிடித்தது ந்ண்பர் குழாம் பெருக்கிடல், பிடிக்காதது குழந்தை குட்டிகளைப் பெற்றெடுப்பது மற்றும் அவர்களை வளர்த்து ஆளாக்குவது என்று திட்ட வட்டமாகச் சொல்லி இருந்தேன் கனம் நீதிபதி அவர்களே.  இப்போது சொல்லுங்கள் நான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இவர் சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது என்று”  பட்டென பதிலளித்தாள் மாலினி.

“நீங்க என்ன சொல்லுறீங்க?  மாலினி சொல்லுறது உண்மைதானா?”

“உண்மைதான் நீதிபதி அவர்களே.  படித்த பெண் என்பதால் அப்பிடிச் சொல்கிறாள்.  நாளடைவில் மாறிடுவாள் என்று நினைத்தேன்” என்றேன் நான்.

நீதிபதி சொன்னார், “உங்களுக்கு ஒரு ஆறு மாத அவகாசம் கொடுக்கிறேன் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வர.”

ஆறு மாதங்களுக்குப் பின் நீதி மன்றத்தில் நடந்த வழக்கில் என்ன தீர்ப்பு வந்திருக்கும், இருவர் மனதிலும் ஒரு மாற்றமும் வந்திடாத போது?

பி.கு.  அண்மையில் எனது பேரனுக்காக வரன் தேடி விளம்பரம் தந்த போது வந்த பதில்கள் ஒன்றில் கண்ட வாசகங்கள் தான் இந்தக் கதையை எழுதத் தூண்டியது.

                 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.