வெள்ளம் அளித்த விடை -புஷ்பா கிறிஸ்ரி
வானமது வாயூறி வந்ததானால் மழையும்
மானமது காத்திட மனதாரக் காற்றில்
தூறலாய் வந்து துதிபாடத் தொடங்கியே
மாறாது தானும் மாரியாய்ப் பொழிந்ததுவே
சின்னத் தூறலும் சிரித்துப் பொழிந்து
பென்னம் பெரியதாய் பெய்து முடித்தது
அன்னம் தரும் அருமை வயல்களும்
பின்னும் அனைத்தும் மிதந்தது தண்ணீரில்
காற்றுடன் மழையும் காட்டாற்று வெள்ளமாய்
மாற்றமின்றி பொழிந்து மார்தட்டி நின்றது
ஊற்றுப் பெருக்காகி ஊறிய கால்வாய்கள்
ஆற்று வெள்ளமாகி அணைகடந்து ஓடியது
அணைகள் உடைந்து அலைகள் மிகுந்து
துணைகள் பலவும் தனித்து தவித்து
நீரில் தவழ்ந்து நீந்திக் கடந்து
நீரில் அழிழ்ந்து மடிந்த உறவுகள்..
வாழ்வை இழந்த வாழ்ந்த மனிதங்களை
வாழ்ந்திடப் பாடுபட்டு வாழும் மனிதர்கள்
வாழ்வுக் கருவியாம் தம் வருமானப் படகில்
வாழவைத்துக் காத்திட வாஞ்சையுடன் வந்தனர்.
உடைந்த அணைக்கட்டுக்களின் உக்கிரப் பசியால்
உடைந்தன வீடுகள், உடமைகள், வாகனங்கள்
அடைந்த துயரங்கள் அத்தனையும் போதாதென்று
அடைமழை தானே அடுத்தடுத்துப் பெய்ததுவே!
அருமை மனிதங்கள், ஆடுகள், மாடுகள்
உருமையுள்ள நாய்கள் உயிரினங்கள் யாவும்
இருதயமில்லா நீரின் இயந்திர வேகத்தில்
உருத்தெரியாது அழிந்து உயிர் மாண்டனவே!
இளைஞர்கள் என்னும் இயந்திரச் சூரியர்கள்
களையற்ற மனத்துடன் களமிறங்கிச் சேர்ந்து
துளையற்ற இரயர்களின் துணையுடன் தாமும்
பிளையின்றிக் காத்து பின்னும் உணவளித்தனரே
இவையாவும் நடந்து இடராய் முடிந்து
அவையும் கடந்து அனைத்தும் வழமையாக
சுவையற்ற அந்தச் சுனாமியாய், வெள்ளமும்
துவைத்துப் போட்டது என் தாயகத்தையே!
மழைத்தண்ணீரின் மதியினால் மறைந்தது
மழைநீரின் வேகம் அளித்தது சாதியை
அன்பு, அறம், ஆசை, அனைத்தும் பசியாகி
அன்பே கடவுளாகி மனிதமே அன்பானது
விடைதேட விரைந்து நாமும் விழைவோமா
படையெடுத்து நாட்டின் அசுத்தம் போக்குவோம்
நடைபாதைக் குப்பைகளை நாமே அகற்றுவொம்
குடைபிடித்து நடந்தாலும் குனிந்து நடப்போமே!
அரசுகளும் அதிகாரங்களும் அன்று மட்டுமே
பரவசம் தந்திட நாமே என்றென்றுமே
இரந்திடும் ஏழையை அணைத்து காத்திடுவோம்
குரங்கினரிடமிருந்து எம் குவலயம் காத்திடுவோம்!
வெள்ளம் அளித்த விடையிது காண்போம்
கள்ளமில்லா மனத்துடன் கடமை செய்வோம்
உள்ளமெல்லாம் பிறர் நலன் காத்திடுவோம்
எள்ளளவும் இன்பம் பிறளாது வாழ்வோம்...
புஷ்பா கிறிஸ்ரி
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.