புதியவை

எனக்கு வேண்டும் ஓர் பூட்டு-இலந்தை ராமசாமி


  எனக்கு வேண்டும் ஓர் பூட்டு-இலந்தை ராமசாமி 

எனக்கு வேண்டும் ஓர்பூட்டு,
     எங்கே கிடைக்கும் கூறுங்கள்
சனித்த அந்த நாள்முதலாய்
      தடையே இன்றித் தான்சுற்றி
நினைத்து நினைத்துக் கூத்தாடி
     நெருப்பை வீசும் என்றனது
மனத்தைக் கட்டிப் போடுதற்கே
     வாய்ப்பாய் வேண்டும் ஓர்பூட்டு

அனுப வத்தின் ஈரங்கள்
      ஆழ்மனத்தில் காயாமல்
நினைவைக் கொணர்ந்து நெருக்குவன.
       நிறுத்திப் போட நினைக்கையிலே
கனியின் சாறு தனை உறிஞ்சி
       காயவைத்த சக்கைதரும்
மனத்தைக் கட்டிப் போடுதற்கே
       வாய்ப்பாய்ப் பூட்டைத்தேடுகிறேன்

மூச்சை அடக்கச் சொல்லுகிறார்
       முயன்று பார்த்தேன் முடியவிலை
பேச்சை  அடக்கி மோனத்தில்
       பிறழா திருந்தால் கைவருமாம்
காச்சு மூச்சுச் சத்தங்கள்
       காதைக் குடையும்வாய்சற்றும்
கூச்ச மின்றிக் குரல்கொடுக்கும்
   கூட வில்லை. என்செய்வேன்?

02 சாவி இருந்தால் பூட்டென்ன? பதில் கவிதை 

 சகலக் கதவும் திறந்திடுமே!
ஆவிப் பூட்டை , அகப்பூட்டை 
பாவப் பூட்டை பழிப்பூட்டை 
தேவப் பூட்டை சினப்பூட்டை 
சாவி வைத்த  இடந்தெரிந்தால் 
சரியாய்த் திறந்திடல் ஏலுமையா!

பூமிப் பூட்டை  ஏர்பூட்டி 
 பொழுதோ டுழுதால்  திறந்திடலாம்!
பூவின் பூட்டை வண்டின்கால் 
  சாவியாலே திறந்திடலாம்!
 காமப்பூட்டைக் கண்களவால் 
   காணும்போதே திறந்திடலாம் 
தேவைப் பூட்டை உழைப்பென்னும் 
   சின்னச் சாவி திறந்திடுமே!

வாயுப்பூட்டைக்  காயத்தால் 
  பித்தப் பூட்டை  இஞ்சியினால் 
ஓயாசிலேத்துமப் பூட்டதனை  
  ஒருகறி மிளகால் திறந்திடலாம்!
தேயுப்பூட்டைக் காற்றாலும் 
  சிறிய உரசல் செயலாலும் 
மாயப் பூட்டாம் மனப்பூட்டை 
   வழிபாட்டாலும்  திறந்திடலாம்!

திறந்திருக்கும் திசைவிட்டே 
  திரும்பி நின்றால் தெரியாதே!
கறந்தபாலைத்  தீத் திறக்கும்!
   கடிதில் அனைத்தும் வெளியாகும்!
உறங்கும் கண்ணும் கதிரொளியால் 
    உடனே திறக்கும்!  ஒளிநாட்டம் 
இறந்த எதையும் பிறப்பிக்கும்!
    இருளில் தேடல் சரியாமோ?
 
புலவர் இராமமூர்த்தி.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.