புதியவை

எங்கள் இலங்கைப் பயணம்-பாவலர் கருமலைத்தமிழாழன்


நந்தவனச் சிற்றிதழின் நல்லா சானாம் நற்கவிஞன் சந்திரனாம் சேக ரென்போன் சொந்தமண்ணாம் ஈழத்தின் வவுனியா விட்டு சொந்தங்கள் தமைபிரிந்து பெற்றோ ரோடு வந்திங்கு திருச்சியிலே காலை ஊன்றி வளர்ந்தவராம் ஊடகத்துத் துறையைப் பற்றி ! சிந்தையிலே தமிழ்மொழியின் இலக்கி யத்தைச் சிறப்படையச் செய்வதென்னும் குறிக்கோள் கொண்டோன் !
படைப்பாளர் தமையழைத்துப் பலநாட் டிற்கும் பண்பாட்டு பயணத்தை நடத்தும் மேலோன் ! படைத்திட்ட பாட்டாலே உலகப் போட்டிப் பரிசுதனைப் பெற்றிட்ட கருமலை நானோ கிடைத்திட்ட விருதுதனைப் பெறுவ தற்கே கிளைஞருடன் இலங்கைக்குச் செல்வ தற்குப் படைநடத்தும் தளபதியாய் முன்னே நின்று பாதுகாப்பாய் வழிநடத்தித் துணையாய் வந்தார் !
வானூர்தி கொழும்புதனில் இறங்கும் போதே வரவேற்று அழைத்துசெல்ல மகிழுந் தோடே தேனூறும் குணமுடைய ரோசன் என்போன் தேடுமுன்னே காத்திருந்தார் வாயில் முன்பு ! பூநாறும் மனமுடைய நெகம்பு நண்பர் பொழிந்திட்ட அன்பினிலே நெகிழ்ந்து போனோம் நாஊறும் சுவையோடு உணவு உண்டே நற்சிலாமில் சிவன்கோயில் சென்று பார்த்தோம் !
அன்றிரவு அனுராத புரத்தில் தங்கி அழகான புத்தர்தம் கோயில் கண்டோம் நின்றீழம் பெறுவதற்குப் போர்கள் செய்த நினைவிடங்கள் புலிகள்தம் பாதம் பட்ட சென்னீரின் ஈரம்தான் காயா தின்னும் செப்புகின்ற வீரத்தின் தடங்கள் கொண்ட வன்னிகாடு கிளிநொச்சி யாணை யிறவு வவுனியாவின் மண்தொட்டு வணங்கி நின்றோம் !
எரிதழலில் கருகவைத்த யாழ்ப்பா ணத்து எழிலான நூலகத்துள் கால்ப தித்தோம் அரிதான நூல்களுடன் எங்கள் நூலை அங்குள்ளோர் படிப்பதற்கே அளித்து வந்தோம் ! திரிகோண மலைசென்றே கோணே சுவரர் திருத்தலத்தில் இராவணனுடன் வணங்கி வந்தோம் விரிவாகச் சிவரமணி கவிஞர் வீட்டில் விருந்தோடே இலக்கியத்தைப் பகிர்ந்து கொண்டோம் !
புலிகள்தாம் பயிற்சிபெற்ற நீச்சல் குளத்தை புலிகள்தாம் பயன்படுத்திப் போர்கள் செய்த வலிமையான ஏவுகணை துமுக்கி குண்டு வகைவகையாய் நீர்மூழ்கிப் படகு என்றே விழிவியக்கப் பார்த்தபடி இரண்ட கத்தால் வீழ்ந்திட்ட அவலத்தை எண்ணி எண்ணி வழிந்திட்ட கண்ணீரில் கனத்த நெஞ்சால் வணங்கிட்டோம் கைகூப்பி வன்னிக் காட்டை !
கல்முனையின் தடாகத்துக் கலைவட் டத்தின் கவிதைவிழா தனில்கலந்தோம் ! கருமலை எனக்கும் நல்கவிஞர் மலர்வண்ணன் நாக ராசு நங்கைமணி மேகலை கீதா ராணி எல்லோர்க்கும் துணைநிற்கும் சேக ருக்கும் ஏற்றதமிழ் மணியென்னும் விருது தம்மை பல்கவிஞர் குவிந்திருக்க அமைச்சர் இருவர் பாராட்டி வழங்கிட்டார் ஒட்ட மாவில் !
இயற்கையெழில் நுவரேலி அசோக வனத்தை இறைபுத்தன் பல்லொளிரும் கண்டி கோயில் அயல்மண்ணில் தமிழ்வளர்க்கும் கொழும்பு சங்கம் அங்குவரும் தினகரனும் குரல்நா ளேட்டை பயனுறவே கண்டதொடு உரைக ளாற்றிப் பல்வேறு அனுபவங்கள் பெற்றோம் நாங்கள் பயணத்தை இலக்கியமாய் அமைத்துத் தந்த பண்பாளர் சேகரினை வாழ்த்து வோமே !
பாவலர் கருமலைத்தமிழாழன்


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.